• எம்.தமிமுன் அன்சாரி
ஈழத்தமிழர் விவகாரத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு (TESO) என்ற பழைய ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார் கலைஞர்.

‘டெசோ’வின் சார்பில் ஈழத்தமிழன் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு இன்று (12.08.2012) சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடக்க விருந்த நிலையில், தமிழக அரசு அந்த மாநாட்டுக்கு அனுமதி மறுத்திருக்கிறது.

இது கலைஞருக்கு கிடைத்திருக்கும் அரிய வெற்றியாகும். இம்மாநாடு குறித்து பெரும் கண்டனங்களையும், கடும் விவாதங்களையும் சந்தித்த கலைஞரை, முதல்வர் ஜெயலலிதாவின் இச்செயல் காப்பாற்றியிருக்கின்றது.

ஈழத்தமிழர் விவகாரத்தில் திமுக இந்த அளவுக்கு முன்னேறியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஈழத்தமிழர்கள் கடைசிக் கட்ட போரில் பரிதவித்து நின்றபோது. காங்கிரஸ் ‘கூட்டணியின்’ நலனுக்காக அவர் செயலற்று இருந்தார். அந்த கருப்பு நாட்களை கழுவ கலைஞருக்கு இம்மாநாடு ஒரு சிறிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

தனித்தமிழ் ஈழம் கோரும் மாநாடாக இது அமைந்திருந்தால், உலகத் தமிழ்ர்களின் பெரும் வரவேற்பை இம்மாநாடு பெற்றிருந்திருக்கும்.

ஆனால், மத்திய அரசியல் பங்கேற்றுக் கொண்டு இந்திய வெளியுறவு ‘கொள்கைக்கு’ எதிராக செயல்பட ‘கூட்டணி தர்மம்’ அனுமதிக்கவில்லை.

அதைவிட முக்கிய காரணம் ஒன்று உண்டு. அதை யாருமே கவனிக்கவில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கோறும் தீர்மானத்தை திமுக நிறைவேற்றினால், அது இந்தியாவை பீதிக்குள்ளாக்கும்.

காரணம், காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என பாகிஸ்தான் செய்து வரும் சர்வதேச பிரச்சாரத்தை அது வேறு வகையில் நியாயப்படுத்தி விடும்.

மத்திய உளவுத் துறையும், வெளியுறவு ராஜதந்தீரிகளும் இதை மன்மோகன் சிங்கிடமும், ப.சிதம்பரத்திடமும் சுட்டிக் காட்டிய பிறகுதான் அவர்கள் தங்களின் ‘தர்மசங்கடத்தை’ கலைஞரிடம் சுட்டிக் காட்டி, தனி ஈழ தீர்மானத்தை கைவிட செய்திருக்கிறார்கள்.

இவ்விஷயத்தில் கலைஞர் பின் வாங்கியது, ஈழத்தமிழர் விவகாரத்தில் அவரை ஒரு சந்தர்ப்பவாதியாக தோற்றம் ஏற்படுத்திவிட்டது என்னவோ உண்மை!

அவை எல்லாவற்றையும் மீறி கலைஞரின் ‘டெசோ’ முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. எப்படி? மாநாட்டிற்கு தமிழக அரசு விதித்த தடைதான் அதற்கு காரணம்!

முதல்வர் ஜெயலலிதாவின் ‘திமிர்’ தன அரசியல், கலைஞரே எதிர்பார்க்காத வெற்றியை அவருக்கு கொடுத்திருக்கிறது.