AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை - சென்னையில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மேற்கு பர்மாவில் முஸ்லிம்கள் திரளாக வசித்துவரும் ராகின் மாநிலத்தில் பௌத்த வெறிக்கும்பல் அரசாங்கத்தின் ஆதரவோடு முஸ்லிம்களை ஈவிரக்கம் இல்லாமல் இனப்படுகொலை செய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த வெறியாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர். புத்த பிக்குகள் கொலைப்படையை வழிநடத்துவதும், துப்பாக்கிகளோடு திரிவதும் இணையதங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

ராகின் தேசியவாதிகள் எனப்படும் பௌத்த பயங்கரவாதிகளால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்வது 1942ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது. 18.03.1942 அன்று 5 ஆயிரம் ராகின் முஸ்லிம்கள் பௌத்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை அந்த வெறியாட்டம் பௌத்த பேரினவாதப் பின்னணியோடும் அரசு ஆதரவோடும் தொடர்ந்து வருகிறது.

குடியுரிமை மறுக்கப்பட்டு கல்வி வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்டு கொடுமைகள் இழைக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் பீதியோடு நிறுத்தப்பட்டுள்ள வறுமை முஸ்லிம்களுக்கு தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதோடு, மத்திய அரசு மியான்மர் அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டுமென்றும், மியான்மர் தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென்றும் தமுமுக வலியுறுத்துகிறது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் முஸ்லிம்கள் போடோ பயங்கரவாதி களால் சொல்லொணா துயருக்கு ஆளாகியுள்ளனர். உண்மை அறியும் குழுக்களின் அறிக்கையின்படி இதுவரை மூன்று லட்சம் மக்கள் 300 அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதும், 73 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. அகதி முகாம்களிலும் முஸ்லிம்கள் மிகப்பெரிய கொடுமைகளை சந்தித்து வருகின்றனர்.

சங்பரிவாரத்தால் இயக்கப்படும் போடோ பயங்கரவாதிகள் மண்ணின் மைந்தர்களான அஸ்ஸாமிய முஸ்லிம்களை "ஊடுருவல்காரர்கள்' என்று கொச்சைப்படுத்தி பச்சைப்படுகொலை செய்து வருகின்றனர்.

1983ஆம் ஆண்டு சங்பரிவார் மாணவர் அமைப்பான ஆஆநம (AASU (All Assam Students Union)ஐ பயன்படுத்தி வன்முறையை உருவாக்கி ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர்.

நெல்லிப் படுகொலைகள் எனப்படும் இந்த முஸ்லிம் இனப்படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பூபன்தாஸ் திவாரி ஆணையத்தை முடக்கி, அதன் அறிக்கைகளை குப்பையில் வீசி, பயங்கரவாதிகளைத் தப்பிக்கவைத்தது சங்பரிவார ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அஸ்ஸாம் கன பரிஷத்.

இப்போது மீண்டும் போடோக்கள், பயங்கர ஆயுதங்களுடன் கோக்ரஜா, பஸ்கா, சிராங், உதல்கிரி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தும், வீடுகளை இடித்தும் சீரழித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இந்த வன்முறைகளை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றன.

அவலங்களால் சூழப்பட்டு, அபலைகளாய் நிற்கும் அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கும் தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிக்கிறது.

கொடுமைக்குள்ளான முஸ்லிம்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய இழப்பீடு தருவதோடு, அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு உரிய ஏற்பாடுகளை செய்துதர வேண்டுமென தமுமுக கோருகிறது.

ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்காமல் சீனா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் ஆதரவோடு வெறியாட்டம் நடத்திவரும் போடோ பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென தமுமுக வலியுறுத்துகிறது.

 மேற்கண்ட முஸ்லிம் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், அதற்காக தீர்வு காண வலியுறுத்தியும் தமுமுக சார்பில் 10.08.2012 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம். அனிபா, மாநிலச் செயலாளர்கள் பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி, பி.எஸ். ஹமீது, மீரான் மொய்தீன், மமக இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், வடசென்னை, தென்சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேறறு தங்கள் உணரவுகளை வெளிப்படுத்தினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக