AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 31 மார்ச், 2012

ராகிங்:முஸ்லிம் மாணவன் பலி!


பெங்களூர்:கல்லூரியில் சீனியர் மாணவர்களின் வெறித்தனமான ராகிங்கில் உடலில் தீப்பற்றி சிகிட்சைப் பெற்றுவந்த கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் மரணமடைந்துள்ளார்.
கேரளா மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஹாரிஸ்-ஸவ்தத் தம்பதியினரின் மகன் அஜ்மல்(வயது17). இவர் கர்நாடகா மாநிலம் சிக்காபல்லாபூர் ஸாஷிப் கல்லூரியில் முதல் வருட ஏரோநாட்டிகல் எஞ்சீனியரிங் மாணவர் ஆவார்.
கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றி காயம் ஏற்பட்டது. கல்லுரி ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழையும் பொழுது உடலில் தீப்பற்றியது. கேரளாவைச் சார்ந்த மாணவர்கள் உள்ளிட்ட சீனியர் மாணவர்களின் ராகிங் காரணமாக அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றியதாக உறவினர்கள் கூறுகின்றனர். மூன்று மாதத்திற்கு மேலாக அஜ்மலை கேரளாவைச் சார்ந்த மாணவர்களின் தலைமையில் அஜ்மலை ராகிங் செய்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழைந்த பொழுது தீப்பற்றியதை தொடர்ந்து தப்பிக்க முயன்ற அஜ்மலின் உடலில் பெரும்பகுதி தீயால் காயமடைந்தது. அருகில் உள்ள மருத்துவமனையில் ஆரம்ப கட்ட சிகிட்சைக்கு பிறகு விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். சீனியர் மாணவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அஜ்மலிடம் பணம் கேட்டு மிரட்டியதால் மூன்று மாதம் முன்பு அஜ்மலின் தாயார் தனது தங்கச் செயினை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து செயினை விற்று கிடைத்த தொகையில் 20 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை அடுத்த ஆண்டு தரலாம் என்று உறுதி அளித்தனர். ஆனால், பின்னர் அஜ்மலை கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த வாடகை அறையில் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். அஜ்மலுக்கு மார்ச் 22-ஆம் தேதி உடலில் தீக்காயம் ஏற்பட்ட பிறகும் கல்லூரி நிர்வாகிகள் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஹாஸ்டலில் உள்ள மாணவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள்தாம் பெற்றோருக்கு இவ்விபரம் தெரியவந்துள்ளது.
2011 செப்டம்பர் மாதம் அஜ்மல் பெங்களூருக்கு எஞ்சீனியரிங் பயில சென்றுள்ளார். ஏரோநாடிகல் எஞ்சீனியரிங் படிக்க விரும்பிய அஜ்மலுக்கு கல்விக் கடனை வாங்கி படிக்க அனுப்பியுள்ளனர். அவரது தந்தை அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார்.

உயர்ந்தது மின்கட்டணம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்


சென்னை: தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்கிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மின்சார வாரியம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது மக்களிடம் கருத்து கேட்டது.
இந்நிலையில் மின்சார கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு முறையாக அறிவிக்கப்பட்டது.
 மின்கட்டண உயர்வின்படி, வீடுகளின் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 100 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.10 எனவும், 101 முதல் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.80எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 201 முதல் 250 வரை யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் ரூ.3 எனவும், 251 முதல் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் 4 பிரிவுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களில், 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3 எனவும், 201 – 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ரூ. 4 எனவும், 501 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் 5.75 எனவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 37 சதவீதம் வரை இருக்கும் எனவும், இந்த உயர்வு ஓராண்டு வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும் என கூறப்பட்டுள்ளது. விசைத்தறி கூடங்களுக்கு முதல் 500 யூனிட்களுக்கு வரை கட்டணம் இல்லை. 500 யூனிட்களுக்கு மேல் யூனிட்டிற்கு ரூ. 4 எனவும் நிர்ணியக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு, 120 யூனிட்கள் வரை, யூனிட்டிற்கு ரூ.2.50 எனவும், 120 யூனிட்களுக்கு மேல், யூனிட்டிற்கு ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட்கள் வரை , யூனிட்டிற்கு 4.30 எனவும், 101 யூனிட்களுக்கு மேல் ரூ. 7 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்கார விளக்குகள் பயன்படுத்துவோருக்கு யூனிட்டிற்கு ரூ. 10. 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடிசைத்தொழில், சிறு தொழில்களுக்கு 100 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு, யூனிட் ரூ.3.50 எனவும், 100 யூனிட்களுக்கு மேல், ரூ. 4 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு மின்சார கட்டணம் யூனிட்டிற்கு ரூ.5.50 எனவும்,செய்யப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம், யூனிட்டிற்கு ரூ. 4.50 எனவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம் யூனிட்டிற்கு ரூ. 5 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்கட்டண உயர்வு ஒரு ஆண்டு வரை அமலில் இருக்கும் எனவும், இந்த உயர்வால் மின்சார வாரியம் நஷ்டமின்றி இயங்கும் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர்.

வியாழன், 29 மார்ச், 2012

எதிர்பார்ப்புகளை ஏமாற்றியது பட்ஜெட் ,மனிதநேய மக்கள் கட்சி


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2012&2013ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருடந்தோறும் சமர்ப்பிக்கப்படும் மற்றொரு பட்ஜெட் என்ற அளவிலேயே உள்ளது.
பாராட்டப்பட சில அம்சங்களும், வருத்தமளிக்கும் சில அம்சங்களும் சமஅளவில் கலந்திருக்கின்றன.

வரவேற்கத்தக்க விஷயங்களாக:
மாநில பேரிடர் மீட்பு படை அமைத்தல்
1 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்குதல்
சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் பள்ளி கல்வித் துறைக்கு வழங்குதல்
100 பின்தங்கிய வட்டாரங்களும் மற்றும் பின்தங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் கண்டறியப்பட்டு குறைகளைப் போக்கிட மாநில அரசு சரிநிகர் வளர்ச்சி நிதியாக 100 கோடி ஒதுக்கீடு செய்தல்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்லூரி விடுதிகளுக்கு கட்டில்கள் வழங்குதல்
உலமா வாரியத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்குதல்
ஜெருசலம் செல்லும் யாத்ரீகர்களுக்கு 1 கோடி ரூபாய் மானியம் வழங்குதல்
25 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு 2500 வீடுகள் கட்டித்தருதல்
- போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. அதேநேரம்,
கடுமையான விலை உயர்வு மக்களை வாட்டக்கூடிய நிலையில் சமையல் எண்ணெய்க்கு 5 சதவீதமாக மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தியது ஏற்க முடியாதது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாவார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு உயர்த்தி தரப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதுகுறித்து பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படாதது மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டைப் போக்கிட உடனடியாக செயல்திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
கூடங்குளம் அணுஉலை எதிராக மக்கள் போராடும் நிலையில், அமைச்சரவை எடுத்த முடிவு குறித்த பின்னணி பற்றியும், அம்மக்களுக்காக அறிவித்த 500 கோடி ரூபாய் சிறப்பு திட்டம் குறித்த விவரங்களை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
சென்னை போன்ற மாநகரப் பகுதிகளில் சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள் தங்குவதற்கான விடுதிகளுக்கு நிதியுதவி ஒதுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
மொத்தத்தில் இதுபோன்ற பல எதிர்பார்ப்புகளைப் பொய்ப்பித்து ஏமாற்றத்தை அளிக்கும் விதத்திலேயே இந்த நிதிநிலை அறிக்கை இருக்கிறது.

ஹஜ் பயணிகளுக்காக சென்னையில் சிறப்பு பாஸ்போர்ட் சேவை முகாம்


இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள ஹஜ் பயணிகளுக்காக பாஸ்போர்ட் அலுவலக சிறப்பு முகாம், வரும் மார்ச் 31ம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள மூன்று சேவை மையங்களில் ஒன்றான சென்னை, சாலிகிராமம், டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் உதவி மையத்தில், வரும் 31ம் தேதி காலை, 9.30 மணி முதல், மதியம், 2 மணி வரை, ஹஜ் பயணிகளுக்காக பாஸ்போர்ட் சிறப்பு முகாம் நடக்கிறது  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள விண்ணப்பத்துடன், மாநில ஹஜ் குழுவின் ஒப்புதல் சான்றிதழை பெற வேண்டும். மேலும் விவரங்களை, 044 – 2825 2519, 2822 7617 ஆகிய எண்களில் பெறலாம் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரம்பிற்குள் வசிக்கும் ஹஜ் பயணிகள் இம்முகாமில் பங்கேற்கலாம். பாஸ்போர்ட் அலுவலக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 24 மார்ச், 2012

A.மஹஜா் அலி-சுஹைலா திருமணம்



பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}  வாழ்த்துக்களுடன்.. V.அஹமது B.com.,  M.Z.ல்மான் B.sc., கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  

வியாழன், 22 மார்ச், 2012

முஸ்லிம்களுக்கு எதிரான படப்பிடிப்பை ரத்து செய்க: முஸ்லிம் தலைவர்கள் ஆவேசம்


ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக விளங்கியவர் உஸாமா பின்லேடன். அவரை மையமாக வைத்து படமெடுக்க ஹாலிவுட் இயக்குனர் கத்ரின் பிகெலோ திட்டமிட்டிருந்தார். அந்தப் படத்தின் பெயர் ஜீரோ டார்க் 30 (ZD30). இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்திலுள்ள சண்டிகரில் நடைபெற்று வந்தது.
இந்தப் படத்தில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதால் முஸ்லிம்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் படத்தில் முஸ்லிம்களுக்கும், ஹிந்துக்களுக்கும் மத்தியில் வெறுப்பை உண்டாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனக் கூறி இந்தப் படப்பிடிப்பை தடை செய்ய வேண்டுமென்று ஜம்மியத்தே உலமா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
ஜம்மியத்தே உலமா ஹிந்தின் அலுவலக செயலாளர் முஹம்மது காலித் நஜீம் முஜத்திதீ கூறுகையில், இந்தப் படத்தில் இஸ்லாமிய மார்க்கத்தையும், புனித நூலான குர்ஆனையும் பரிகாசம் செய்யக்கூடிய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாத்து வருகின்ற சண்டிகர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக்கூடாது என்றார்.
மேலும், முஸ்லிம் அமைப்புகள் சண்டிகர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு படத்தை தடை செய்ய வேண்டுமென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், பயங்கரவாதிகளாக நடிக்கும் நடிகர்கள் முஸ்லிம்கள் அணியும் ஆடைகளையும், போலியான ஒட்டு தாடியையும் வைத்து நடித்துள்ளனர். தீவிரவாதிகள் புனித குர்ஆன் படிப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாகனத்தின் பின்புறம் திருக்குர்ஆன் வாசகங்கள் அரபியில் உள்ளன. இதுபோன்ற காட்சிகள் முஸ்லிம்களைக் காயப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படப்பிடிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது​: இந்தியா ஆதரித்து வாக்கு!


ஜெனீவா:ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகொலைச் செய்து இலங்கை ராணுவம் நடத்திய அட்டூழியம் உலக அளவில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்தது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.
இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

புதன், 14 மார்ச், 2012

தமுமுக தலைவருக்கு உற்சாக வரவேற்பு


தமுமுக-மமக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜாமீனில் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்கள். அவரை புழல் சிறைக்கு வெளியே வடசென்னை, தென்சென்னை, காஞ்சி(வ), காஞ்சி(தெ), திருவள்ளூர்(மே), திருவள்ளூர்(கி), வேலூர்(மே), வேலூர்(கி) மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தார்கள். தொடர்ந்து தமுமுக-மமக தொண்டர்கள் இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க தலைமையகத்திற்கு வருகை தந்தார்கள்.

தலைமையகத்தில் அவரை மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ், மமக இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் உள்ளிட்டோர் அவரை வரவேற்றார்கள். தொடர்ந்து குழுமியிருந்த தமுமுக-மமக தொண்டர்களிடையே மூத்த தலைவர் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ உரையாற்றினார். அவர் தனது உரையில், தனது விடுதலைக்காக இறைவனிடம் பிரார்த்தித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார். வெளிநாட்டு வாழ் சகோதரர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தம்மைப் போல் சிறைகளில் வாடிவரும் சிறைவாசிகள் அனைவரின் விடுதலைக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


















திங்கள், 12 மார்ச், 2012

நரேந்திர மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணி !


நியூ யார்க் : கோத்ராவை தொடர்ந்து குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி அமெரிக்காவில் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த 40 குழுக்கள் ஒன்று திரண்டு நடந்த சம்பவங்களுக்கு நீதி வேண்டும் என்றும் மோடி உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி மாபெரும் பேரணி நடத்தினர்.

பேரணியில் கலந்து கொண்ட 40 குழுக்களில் ஒன்றான மதங்களுக்கிடையான புரிந்துணர்வு குழுவின் தலைவர் மார்க் லூகென்ஸ் "எச்சமூகத்தை சார்ந்த எந்த ஒரு தனி நபரும் அவர் சார்ந்த மதத்தின் பெயரால் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் போது அவர்களுக்கு ஆதரவாகவும் அநீதிக்கு எதிராகவும் போராடுவது எங்கள் மீது கடமையாக உள்ளது" என்று கூறினார்.

"மதத்தின் பெயரால் அநீதி இழைக்கப்படும் போது அம்மதத்தை சேர்ந்தவர்கள் முன்னின்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அதனால் தான் இப்பேரணியில் கலந்து கொள்ள முடிவு செய்தோம்" என்று ப்ரொகரஸிவ் இந்துக்களின் கூட்டமைப்பின் தலைவரான சுனிதா விசுவநாத் கூறினார்.

2005ம் ஆண்டு இதே குழுக்களின் முயற்சியினாலேயே நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுக்கு வருகை தர விசா மறுக்கப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2002 கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி விரைவாக கிடைக்க குஜராத் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

inneram.com

கொள்ளுமேடு தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்










கொள்ளுமேடு தமுமுக சார்பில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 10 .03 .2012    அன்று மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

                                     !அல்ஹம்துலில்லாஹ்!!



மக்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர். குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் கலந்துக்கொண்டனர். கலந்துக்கொண்ட அனைவர்களும் கொள்ளுமேடு தமுமுகவை வெகுவாக பாராட்டினர்.

இரண்டுமுன்று தினங்களுக்குள் ஏற்பாடு செய்து சிறப்பாகவும், இவ்வளவு பெரும் மக்களை திரட்டியதற்க்கு தமுமுகவிற்கு நிகர் தமுமுக தான் என்று பொது மக்கள் பாராட்டினர்.

 !எல்லா புகழும் இறைவனுக்கே!!

ஞாயிறு, 11 மார்ச், 2012

தொடர் மின்வெட்டை கண்டித்து காட்டுமன்னார்குடியில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்பாட்டம்...





தானே புயலால் பாதித்த காட்டுமன்னார்குடி அதன் சுற்றுப் பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து
காட்டுமன்னார்குடி பஸ் நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 09.03.2012
வெள்ளிகிழமை மாலை கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

புதன், 7 மார்ச், 2012

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் - 69 முஸ்லிம்கள் வெற்றி பெற்று சாதனை


உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 69 முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர். 64 முஸ்லிம் வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளனர்.
உத்திரப்பிரதேச சட்டமன்றத்தில் 403 இடங்கள் உள்ளன. விடுதலை பெற்ற இந்திய வரலாற்றில் இப்போது தான் முதன் முறையாக முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் உத்தரபிரதேச சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 84 வேட்பாளர்களையும், சமாஜ்வாதி கட்சி 75 வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி 64 வேட்பாளர்களையும் களம் இறக்கியது. இதில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 43 முஸ்லிம் வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 16 முஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 முஸ்லிம்களும், பீஸ் கட்சியை சேர்ந்த 3 முஸ்லிம்களும் (டாக்டர் அய்யுப் தலைமையிலான இந்த கட்சியின் முஸ்லிமல்லாத வேட்பாளர் மேலும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்), ஏக்தா தலம் கட்சியை சேர்ந்த 2 முஸ்லிம்களும் இத்திஹாதே மில்லத் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். (கடந்த சட்டப்பேரவையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 29 பேரும், சமாஜ்வாதி கட்சி சார்பில் 21 முஸ்லிம்களும், ஆர்எல்டி சார்பில் 3 முஸ்லிம்களும் சுயேச்சைகள் 3 என மொத்தம் 56 முஸ்லிம் எம்எல்ஏ க்கள் இருந்தனர்)
பீஸ் பார்ட்டி ஆப் இந்தியா, உலமா கவுன்சில் என பல முஸ்லிம் கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி வைத்து தேர்தலில் போ்ட்டியிட்டன. இருப்பினும் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த முறை முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கே தங்கள் வாக்குகளை செலுத்தினர். இதன் விளைவாக சமாஜ்வாதி கட்சி 224 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் உ.பி. யில் எந்தவொரு கட்சி இந்த அளவு அதிக இடங்களில் வெற்றி பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 140ல் முஸ்லிம்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளனர். இந்த தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள இந்த 140 தொகுதிகளின் முடிவுகளை ஆய்வு செய்யும் போது இதில் பாதியளவு (72) தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 27 இடங்களிலும் ஆக குறைவாக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று வார்த்தை ஜாலம் செய்த காங்கிரஸ் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் கூட்டணி கட்சியான அஜித் சிங்கிள் ஆர்எல்டி முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் 2ல் வெற்றி பெற்றது. முஸ்லிம் கட்சியான பீஸ் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது. முஸ்லிம்கள் மிக நேர்த்தியாக தங்கள் வாக்குரிமையை செலுத்தியுள்ளார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முஸ்லிம்களை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்ற முடியாது என்பதையும் இந்த முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. அரசியல் சாசன சட்டத்தை திருத்தி முஸ்லிம்களுக்கு 18 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வழிவகுப்பேன் என்று முலாயம் சிங் யாதவ் வாக்குறுதி அளித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 2007ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 56 முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். இவர்களில் இருவர் பெண்களாவர். இம்முறை முஸ்லிம் எம்எல்ஏ க்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளதுடன் முஸ்லிம் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 3 ஆக உயர்ந்துள்ளது. வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களில் மிக அதிக வாக்கு வித்தாயசத்தில் வெற்றி பெற்றவர் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முஹம்மது ஆஜம் கான். இவர் ராம்புர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தன்வீர் அஹ்மது கானை 63269 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மிக குறைவான வாக்குகள் (18)  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர் பாஹேரி தொகுதியில் வெற்றி் பெற்ற சமாஜ்வாதி கட்சியின் அதாவுர் ரஹ்மான் ஆவார். 2007 சட்டப்பேரவை தேர்தலின் போது முலாயம் சிங், கல்யான் சிங்கை கட்சியில் சேர்த்ததை எதிர்த்து அஜம் கான் கட்சியை விட்டு வெளியேறினார். பிறகு கல்யான் சிங் நீக்கப்பட்ட பிறகு மீண்டும் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து 2012 தேர்தலில் அதன் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்கள் 19 விழுக்காடு உள்ளனர். இந்த அடிப்படையில் பார்த்தால் 75 முஸ்லிம் சட்டபேரவை உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது 69 முஸ்லிம்கள் வெற்றி பெற்றிருப்பது பெரும் சாதனையாகும்.

இ. அருட்செல்வன்

செவ்வாய், 6 மார்ச், 2012

இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் மார்ச் 10-ல் நாடு முழுவதும் இ.யூ. முஸ்லிம் லீக் வெற்றி விழா சென்னை செய்தியாளர் கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தோடு, இப்பெயரை பயன்படுத்தி குழப்பம் விளைவித்து வந்தவர்கள் இக் கட்சிக்கு சம்பந்த மில்லாத தனி நபர்கள் எனவும் தெளிவுபடுத்தி யுள்ளது. 
வரும் மார்ச் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-ம் ஆண்டு நிறுவன தினத்தை வெற்றிவிழா வாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டுள்ளார்.
சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள பத்திரிகை யாளர் மன்றத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டதாவது-
இந்திய வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய வரலாற்றோடு பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. 1906-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி தொடங்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக் 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உருவானது. 
தேசிய ஒருமைப்பாடு , சமய நல்லிணக்கம், சிறுபான்மையி னரின் தனித்தன்மையை பாது காத்தல் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியம். 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்ட அன்றைய காலகட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பெயர்களில் செயல்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றும், கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங் களில் அந்தந்த மாநிலப் பெயர்களில் தேர்தல் ஆணை யங்களில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது. 
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்களான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப், இப்ராஹீம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா, இன் றைய தலைவர் இ.அஹமது உள்ளிட்ட அனைவரும் கேரள மாநிலத்திலிருந்து நாடாளு மன்ற உறுப்பினர்களாக தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி என்ற பெயரிலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு இ.அஹமது சாஹிப் தலைவராகவும், பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகிய நான் பொதுச் செய லாளராகவும், தேர்ந்தெடுக் கப்பட்டதும் கடந்த 4 ஆண்டு களுக்கு முன் நாடு முழுவதும் ஒரே பெயரில் இயங்குவது என முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.
இதற்காக கேரள மாநிலத்தின் பிரைமரி, மாவட்ட, மாநில அமைப்புக்கள் முறைப் படியாக தீர்மானங்கள் நிறை வேற்றி அம் மாநிலத்தின் 20 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பி.க்கள், 4 அமைச்சர்கள் என அத்தனை பேரின் வாக்குமூலங்களும் பெற்று தேர்தல் ஆணையத் திடம் முறைப்படியாக சமர்ப் பிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் தெளிவான தீர்ப்பு!
ஆனால், தாவூத் மியாகான், ஃபாத்திமா முஸப்பரால் தலைவர் என சொல்லப்படும் உ..பி.யின் பஷீர் அஹமதுகான் ஆகியோர் இதற்கு ஆட்சே பணை தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தி ருந்தனர். அனைத்தையும் பரிசீலனை செய்த இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் 3-ம் தேதி தெளிவான ஆணை பிறப்பித்தது. 
அந்த ஆணையின்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது என்றும், முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி என்னும் பெயர் தேர்தல் ஆணையத்தின் அரசி யல் கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், கேரளாவில் அங்கீகரிக்கப்பட்ட `ஏணி� சின்னம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது. 
அந்த ஆணையில் எம்.ஜி. தாவூத் மியாகான், ஃபாத்திமா முஸப்பரால் தலைவராக சொல் லப்படும் பஷீர் அஹமதுகான் ஆகியோர் தனி நபர்கள் என்றும், அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினர்கூட இல்லை. இந்த கட்சி பற்றி அவர்கள் ஆட் சேபணை தெரிவிப்பதற்கு தகுதி இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டது.
எனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரையும், பச்சிளம் பிறைக்கொடியையும் நாங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இவைளைத் தவறாக பயன்படுத்துவோர் மீது நாஙகள் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். இந்த பெயரைப் பயன்படுத்தி செய்திகளை தரும் போது பத்திரிகையாளர்களும் இந்த உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்ப தற்காகவே இந்த பத்திரி கையாளர் சந்திப்பு நடத்தப் படுகிறது.
மார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-வது நிறுவன தினம். இந் நாளை தேர்தல் ஆணையத்தின் அங்கீகார வெற்றி விழா நாளாக நாடு முழு வதும் கொண்டாட உள்ளோம்.
டெல்லியில் மத்திய அமைச்சர் இ.அஹமது சாஹிப் தலைமையில் விழா நடை பெறுகிறது. சென்னை மண்ண டியில் நான் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 23-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மண்ட பத்தில் வெற்றி விழா பிரம் மாண்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்களில் பச்சிளம் பிறைக் கொடிகள் ஏற்றப்படுகின்றன. 60-க்கும் மேற்பட்ட ஊர் களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டார்.
பேட்டியின் போது மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளா ளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான், எம்.பி. மாநிலச் செய லாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், வழக் கறிஞர் வெ. ஜீவகிரிதரன், எஸ்.டி.யு. மாநில அமைப்பாளர் கே.எம். நிஜா முதீன், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், மேலாளர் எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ, எம்.எஸ்.எஃப் மாநில இணைச் செயலாளர் டி.கே. ஷாநவாஸ், வட சென்னை மாவட்டத் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன், செய லாளர் ஏ.எச். இஸ்மாயில், தென் சென்னை மாவட்டத் தலைவர் பூவை முஸ்தபா, செயலாளர் ஹைதர் அலிகான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நாமும் இரத்த தானம் செய்யலாமே!


நம் நாட்டில் ஒவ்வொரு இரண்டு விநாடி காலத்திலும் யாராவது ஒருவருக்கு அவரின் உயிர் காத்திட இரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவில் 4 கோடி யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ 5 லட்சம் யூனிட்கள் தான். இரத்த தானம் வழங்கிட யாரும் முன்வருவதில்லை என்று இதற்குப் பொருள் அல்ல.
பலர் தாங்கள் தானம் வழங்க தயாராய் இருக்கிறோம் என்பதனை மற்றவர்களுக்கு எப்படி அறிவிப்பது என்று தெரியாமல் இருக்கின்றனர். தகவல் தொழில் நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த கால கட்டத்தில் இந்த நிலை மாற வேண்டாமா.
நமக்கு இருப்பதை இல்லா தோர்க்கு கொடுத்து உதவும் செயலை தானம் என்று சொல்கிறோம். எந்தப் பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு நாம் எதைக் கொடுத்தாலும் அது தானம்தான். ஒருவரது பசியைப் போக்குவது அன்னதானம். ஒருவருக்குப் பார்வை கொடுப்பது கண்தானம். ஆனால் ஒருவருக்கு உயிரையே கொடுக்கலாம். ஒரு தானத்தின் மூலமாக. ஆனால் அதற்காக நாம் நமது உயிரைக் கொடுக்க வேண்டாம், இரத்தத்தைக் கொடுத்தால் போதும்.
சரி, இரத்த தானம் செய்வது பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது? அது பற்றிய பயம், அறியாமை போன்ற எவ்வளவோ விஷயங்கள் மக்களி டம் உள்ளன. அவற்றை களைந்து உயிரைக் காக்கும் இரத்த தானத்தை அளிக்க முன் வரவேண்டும்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாம். ஆனால் இரத்த தானம் அளிக்க விரும்புவோரது உடல் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமாக இருக்கும் எந்த நபரும் இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் செய்ய முடியும். சாதாரண எடையுள்ள ஒவ்வொரு மனித உடம்பிலும் ஐந்து முதல் ஆறு லீட்டர் ரத்தம் இருக்கும். அதில் இருந்து வெறும் 300 முதல் 350 மில்லி லீட்டர் இரத்தம் மட்டுமே இரத்த தானத்தின் போது எடுக்கப்படும். தானமாக அளித்த இரத்த அளவை நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும்.
இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை. இரத்த தானம் செய்வதற்கு முன்பு தனக்கு இரத்தச் சோகை, இரத்த அழுத்தம் போன்ற எந்த நோயும் இல்லை என்பதற் கான மருத்துவச் சான்றிதழ் சில வேளைகளில் தேவைப்படலாம்.
இரத்த தானம் செய்யும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்தப் போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. குடித்திருக்கவும் கூடாது. இரத்த தானம் செய்ய விரும்பு பவர்களுக்கு நீரிழிவு நோய், காசநோய், எய்ட்ஸ் போன்ற இரத்தத்தின் மூலம் பரவக் கூடிய நோய்கள் இருக்கக்கூடாது. இரத்த தானம் அளிக்க விரும்புபவருக்கு கடந்த 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.
யாரெல்லாம் இரத்த தானம் அளிக்கக் கூடாது. கர்ப்பமாக இருப்பவர்கள் அல்லது சமீபத்தில் கருக்கலைப்பு ஆனவர்கள, தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்ப வர்கள், போதைப் பொருள் பழக்கம் அல்லது பலரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள், வரும் காலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்ப வர்கள். ஆகியோரும் பெண்கள் தங்களது மாதவிலக்கு நேரத்திலும் இரத்ததானம் செய்ய இயலாது.
இதய நோய், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் பழுதடைந்தவர்கள், இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த தானம் அளிக்க இயலாது. இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப் போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.

சிறுபான்மை கல்விக்காக 5 துணைக் குழுக்கள்!


புதுடெல்லி:சிறுபான்மை கல்விக்காக 5 துணைக் குழுக்களை உருவாக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
சிறுபான்மையினருக்கு தொழில் அடிப்படையிலான கல்வி திட்டத்தை அமுல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முன்னிறுத்தி துணைக்குழுக்கள் உருவாக்கப்படும். சிறுபான்மையினருக்கான பல்வேறு கல்வித் திட்டங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தேசிய கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் இதனை தெரிவித்தார்.
தேசிய கண்காணிப்புக் குழுவின் முஹ்டல் கூட்டம் நேற்று கபில் சிபலின் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. சிறுபான்மையினருக்கு தொழில் அடிப்படையிலான கல்வி திட்டத்தை அமுல்படுத்துதல், உருது-ஆங்கில மொழிகளை பரப்புதல், சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பெண்களின் கல்வி, தகவல் சேகரிப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக ஐந்து கமிட்டிகள் உருவாக்கப்படும்.
மதரஸாக்கள் உள்பட சிறுபான்மை சமூகத்தினர் நடத்தும் கல்வி நிலையங்களில் கூடுதல் தொழில் அடிப்படையிலான கல்வி பாடங்களை துவங்க வேண்டும் என்று தேசிய கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். மதரஸா சான்றிதழ்களை தொடர் படிப்புக்காக அங்கீகரிக்கும் டெல்லி ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியை பிற பல்கலைக்கழகங்களும் பின்பற்றவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
மத கல்வியும், உலக கல்வியும் இணைந்து செயல்படுத்தும் கேரளா மாநிலத்தின் பாணி முன்மாதிரியானது என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனை கபில் சிபலும் ஒப்புக்கொண்டார். மத்ரஸாக்களை அவசரமாக நவீனப்படுத்த வேண்டும் என்று கருத்து எழுந்தது. அப்பொழுது சிலர், அது தேவையில்லை என்றும் தற்போதைய மதரஸா கட்டமைப்பு நவீனப்படுத்தப்பட்டதுதான் என்று கருத்து தெரிவித்தனர்.
பல மாநிலங்களிலும் உருது மொழி ஆசிரியர்கள் இல்லை, பாடப் புத்தகங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் கூட்டத்தில் வைக்கப்பட்டன.
மனித வளமேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

திங்கள், 5 மார்ச், 2012

குவைத்:1656 கைதிகளுக்கு மன்னிப்பு!


குவைத்சிட்டி:தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு குவைத் அமீர் ஷேக் ஸபாஹ் அல் அஹ்மத் அல் ஸபா 1656 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இவர்களில் 81 பேர் பெண்கள் ஆவர். 370 பேர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவர். 1,181 பேருக்கு தண்டனையில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 105 சிறைக்கைதிகளுக்கு நாடு கடத்தல் தண்டனை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பொருளாதார குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் 11 மில்லியன் டாலர் தொகை தள்ளுபடிச் செய்யப்பட்டுள்ளது. சிறையில் இருந்து விடுதலையாகும் 370 பேரில் உள்நாட்டைச் சார்ந்த 74 ஆண்களும், இரண்டு பெண்களும் உள்ளனர். தண்டனையில் சலுகை கிடைக்கும் 1181 பேரில் உள்நாட்டைச் சார்ந்த 335 ஆண்களும், 26 பெண்களும் உள்ளனர். நாடு கடத்தல் தண்டனை ரத்துச் செய்யப்படும் கைதிகள் 105 பேரில் ஒரு பெண்மணி இடம் பெற்றுள்ளார்.
தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி எல்லா வருடமும் மனித நேயத்தின் அடிப்படையில் அமீர் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது வழக்கமாகும்.

மோடிக்கு எதிராக அமெரிக்க இந்திய சமூகம்!


வாஷிங்டன்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்து 10-வது ஆண்டு நிறைவுறும் வேளையில் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தின் தலைமையில் நரேந்திர மோடியை எதிர்த்து கண்டன போராட்டம் நடைபெற்றது.
40-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக நடந்த போராட்டத்தில் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மன்ஹாட்டனில் காந்தி சிலைக்கு அருகே திரண்ட இந்தியர்கள் குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோர் இனப்படுகொலையில் கொலை செய்யப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை நடத்தினர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட சவுத் ஏசியா சோலிடாரிட்டி மூவ்மெண்டின் பிரதிநிதி ஸ்வாதி ஷா கூறியதாவது: ‘குஜராத்தில் என்ன நடந்தது என்பதை மக்களிடம் கூறும் பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. பிரதமர் பதவிக்கு மோடியை முன்னிறுத்துவது குறித்து அமெரிக்க இந்திய சமூகம் கவலை கொள்கிறது என்று தெரிவித்தார்.
இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின் தலைமையில் இந்த கண்டன போராட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் அமெரிக்க காங்கிரஸ் மோடியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

ஞாயிறு, 4 மார்ச், 2012

புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை WWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.

மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண். 32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

குஜராத் இனப்படுகொலை: பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் பரிதாப நிலை!


அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைக்கு பிறகு நிவாரண நடவடிக்கைகளில் மோடி அரசு காட்டிய அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக நசிந்து போனதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத, நகரங்களில் இருந்து மிக தொலைவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில்தான் பெரும்பாலான மக்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் ஒதுங்கிவிட்டதாக குஜராத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜன்விகாஸின் சர்வே கூறுகிறது.
எட்டு மாவட்டங்களில் 83 மறுவாழ்வு காலனிகள் வசிக்கும் 16,087 இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய சர்வேயில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 2002- ஆம் ஆண்டு இனப் படுகொலைக்கு முன்பு அவர்கள் வசித்த பகுதிகளுக்கு திரும்பவில்லை. அண்டை வீடுகளில் வசிக்கும் மக்களின் மிரட்டல் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இனப் படுகொலையின் போது வீடும், வியாபார நிறுவனங்களும் இழந்த முஸ்லிம்களுக்கு புதிய இடங்களில் வியாபாரம் துவங்க மூலதனம் இல்லை. எப்பாடு பட்டேனும் ஏதாவது வியாபாரத்தை துவக்கினாலும் வியாபாரம் குறைந்ததால் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
காலனிகள் நகரங்களில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளன. இதனால் வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் வருமானத்தில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசோ அல்லது அரசு சாரா நிறுவனங்களோ ஒரு வீடு கூட கட்டிக் கொடுக்கவில்லை. முஸ்லிம் அறக்கட்டளை நிறுவனங்கள்தாம் வீடுகளை கட்டியுள்ளன. ஆனால், காலனிகளில் முஸ்லிம்களுக்கு ஆவணங்கள் மூலம் உரிமையாளர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை.
33 சதவீத காலனிகளில் போதுமான அளவு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. 81 சதவீதம் பேருக்கு சாக்கடை நீர் செல்வதற்கான வசதி இல்லை. 86 சதவீதம் காலனிகளிலும் சாலைகள் இல்லை. தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் 34 காலனிகளில் வெறும் 5 இல் மட்டுமே தேசிய கிராமீய சுகாதார திட்டத்தின் மூலமாக இன்சூரன்ஸ் கார்டு கிடைத்துள்ளது. 55 சதவீத காலனிகளுக்கு அருகில் அங்கன்வாடிகள் கிடையாது.
வேகமான நடவடிக்கைகள் மூலம் குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் வசிக்க செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று மோடி அரசு அடிக்கடி அறிவித்தபோதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநில அரசு தங்களது நிலைமையை மாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.