AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சட்டப் பேரவையில் மமக கோரிக்கை


முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டும்,
பெங்களுர் குண்டு வெடிப்பு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை தடுக்க வேண்டும்,
மத்திய அரசுக்கு இணையாக நிதியளித்து மாநில அரசு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்,
பாரதிய ஜனதா எம்.ஆர். காந்தி மீது தாக்குதல் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்யப்பட வேண்டும் என சட்டப் பேரவையில் மமக கோரிக்கை
26.04.2013 அன்று 2013-2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:

தமிழ்நாட்டில் இயங்கி வரும் மாவட்ட முஸ்லிம் மகளிர் சங்கங்கள் சார்பாக இணை மானியமாக 1:1 என்று இருந்ததை 1:2 என உயர்த்தி ஆணை பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோன்று கடந்த காலங்களிலே ரூபாய் 45 இலட்சமாக இருந்த தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு வழங்கப்படட நிர்வாக மானியத்தை இந்த அரசு 1 கோடியாக உயர்த்தியது. இந்த மானியத்தை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலேயும் 3 மாதத்திற்கு ஒரு முறை சிறுபான்மையினர் நல ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலே நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்படுகின்ற விதத்திலே அந்த மாவட்டத்திலே இருக்கின்ற சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த முத்தவல்லிகள், சிறுபான்மை நிறுவனங்கள் நடத்துகின்ற கல்விப் பொறுப்பாளர்கள், இவர்ககௌல்லாம் தங்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் அந்தக் கூட்டத்திலே கூறி, அந்தக் குறைகளைத் தீர்த்துக்கொள்கின்ற வாய்ப்பு ஏற்படும் என்பதையும் இந்த நேரத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலே சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்க கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறுகின்ற பள்ளிகளிலே வழங்கப்பட்டு வருகின்றது. அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் அவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதிகள் இருந்தும், அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் கல்வி உதவித் தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும் தொழில் கடன் கல்விக் கடன் பெறுவதில் கடும் நிபந்தனைகள் உள்ளன. கடன் தொகை பெற முடியாமல் ஒதுக்கப்படுகின்ற நிதி முறையாக 100 சதவிதம் பயன்படுத்த முடியாமல் திரும்ப செலுத்தப்படுகிறது. குறைந்தபட்சம் கல்விக் கடனுக்காக மட்டுமாவது அந்த நிபந்தனைகளைத் தளர்த்தி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் ஏனென்றால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடன்கள் எளிதாக கிடைப்பதில்லை.

இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்வோர் மொத்தம் விண்ணப்பித்துள்ளவர்கள், 11000 பேர் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து இருப்பதோ வெறும் 3700 பேர் தான் . மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்ற ஆண்டு மத்திய அரசிடம் கூடுதலாக 1000 ஒதுக்கீடு பெற்றதைப்போல் இந்த ஆண்டும் மத்திய அரசிடமிருந்து கூடுதலாக ஒதுக்கீடு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தற்போதுள்ள 3.5 சதவித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தரப்படும் என்று மாண்புமிகு முதல்வர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார்கள் எனவே இதை பரிசீலித்து தமிழகத்தில் கல்வியிலேயும், வேலைவாய்ப்பிலேயும், தற்போது இருக்கின்ற 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

பெங்களுரில் நடைபெற்ற குண்டு வெடிப்பாக இருந்தாலும் வேறு எங்கு குண்டு வெடிப்பு நடைபெற்றாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற மனித குலத்திற்கு விரோதமான செயல்களை செய்யும் உண்மை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், அப்பாவிகளை கைது செய்தவதால் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை தடுக்க இயலாது. கர்நாடக காவல்துறையினர் தமிழகத்திற்கு வந்து இங்குள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளனர். அரசியல் நோக்கத்துடன் காவல்துறை இந்த அநீதியை இழைத்துள்ளது. இதுபோன்ற பிற மாநில காவல்துறை எதிர்காலத்தில் தமிழகத்தில் வாழும் சிறுபான்மையின முஸ்லிம்களை ஆதாரம் இல்லாமல் கைது செய்வதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நாகர்கோவிலில் பாரதிய ஜனதா பிரமுகர் எம்.ஆர். காந்தி மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக தமிழக காவல்துறையினர் பல்வேறு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். காந்திக்கும் அவரது உறவினர்களுக்கும் சொத்துத் தகராறு ஏற்கெனவே இருந்துள்ளது என்ற இந்த கோணத்தில் காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 126 ஆகும். ஆனால் தற்போது பணியாளர்களின் எண்ணிக்கை 48 மட்டுமே. எனவே வக்ப் வாரியத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை இந்த நிதியாண்டிலேயே நிரப்பி வக்ப் வாரிய பணிகள் மேலும் சிறப்பாக நடைபெற அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு மைய அரசின் 100 விழுக்காடு நிதிஉதவியுடன் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது தற்போது விலைவாசிகள் உயர்ந்துள்ள இக்காலகட்டத்தில் மாநில அரசும் மத்திய அரசு அளிக்கும் நிதி உதவிக்கு இணையாக கல்வி உதவி வழங்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு நிதி பங்களிப்புடன் 75:25 என்ற விகிதத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதில் மாநில அரசு பங்களிப்பு மத்திய அரசிற்கு இணையாக வழங்க வேண்டும். மாநில அளவிலே பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அரசு பொதுத் தேர்வில் முதல் இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளில் உள்ள மதிப்பெண் பெறும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றது. தமிழ் மொழிக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பெயரில் பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக