AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 27 ஏப்ரல், 2013

வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது ஓரிரு நாளில் நிறுத்தம்


வீராணம் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது ஓரிரு நாளில் நிறுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
சோழர் கால ஏரி
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரியாகும். இந்த ஏரி 905–936ம் ஆண்டு சோழர் காலத்தில் முதலாம் பராந்தகன் மன்னராக இருந்த காலத்தில் வெட்டப்பட்டது. அப்போது இந்த ஏரி வெறும் மழைநீர் சேமிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
ஏரிக்கு நீர்வரத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெய்யும் மழைநீர் கருவாட்டு, செங்கல்ஓடை வழியாக வீராணத்திற்கு வந்தது. தொடர்ந்து, முதலாம் ராஜேந்திர சோழர் கங்கையை படையெடுத்து வெற்றி பெற்றார். அதன் அடையாளமாக கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோவிலும், சோழகங்கம் என்ற ஏரியை வெட்டினார்.

இந்த ஏரி தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. மழைநீரை சேமித்து வந்த வீராணம் ஏரியை கடந்த 1836–ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் பொறியாளர் ஆர்தர்காட்டன் என்பவர் கீழணையை கட்டி முதன் முதலாக மேட்டூர், காவிரி நீரை வீராணம் ஏரிக்கு கொண்டு வர திட்டமிட்டு செயல்படுத்தினார்.
பாசன வசதி
அதன்படி வீராணம் ஏரியில் கீழணையிலிருந்து வடவாறு வழியாக 22 கிலோ மீட்டர் வாய்க்கால் மூலம் ஏரிக்கு நீர் வரத்தொடங்கியது. கீழணையிலிருந்து வீராணத்திற்கு வரும் 22 கிலோ மீட்டரில் மதகுகள் மூலம் 17 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
வீராணம் ஏரியின் பரப்பளவு 35.8 சதுரகிலோமீட்டராகும். ஏரி 1.44 டி.எம்.சி.யாகும். ஏரியில் கீழ்புறம் 28 மதகுகள், மேல்புறம் 6 மதகுகள் என மொத்தம் 34 மதகுகள் உள்ளது. கீழ்புற மதகு மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கரும், மேல்புற மதகுகள் மூலம் 700 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இது மட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை மக்களின் தாகத்தை தணிக்க தினமும் வினாடிக்கு 75 கன அடி நீர் ஏரியிலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.
விவசாயிகள் கஷ்டம்
தற்போது பருவநிலை மாற்றமும், காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காததால் வீராணம் ஏரி வறண்டது. இந்த ஏரியை நம்பி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3 போக விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது ஒரு போகம் விவசாயம் செய்வதே கஷ்டமாக உள்ளது என வேதனையுடன் கூறுகின்றனர். ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.
பருவமழை இல்லாததாலும், கீழணையில் தண்ணீர் இல்லாததாலும் ஏரிக்கு நீர் வரத்து கடந்த ஒரு மாதமாக இல்லை. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 40 அடியாக குறைந்துள்ளது. சென்னைக்கு வினாடிக்கு 75 கன அடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்த வேளையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 38 கனஅடியாகவும், நேற்று முன்தினம் 18 கனஅடியாகவும் குறைத்து அனுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் நேற்று சென்னைக்கு வினாடிக்கு வெறும் 15 கனஅடி நீர் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டது. ஏரியில் நீர் வறண்டதால் நாளை சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக