AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

தமிழகம் முழுவதும் நாளை கல்லுரிகள் திறப்பு

சென்னை:ஏப்ரல் 2
/
இரண்டு வார கால வரையற்ற விடுமுறைக்குப் பின், பொறியியல் மற்றும் அரசு கலை கல்லூரிகள், நாளை திறக்கப்படுகின்றன. வருடாந்திர இறுதி தேர்வுகளும் திட்டமிட்ட படி நடக்கும் என, தெரிகிறது.
/
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், மார்ச், 9ம் தேதி முதல் போராட்டத்தை துவங்கி, பல்வேறு கட்டமாக நடத்தி வந்தனர். மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், கலை கல்லூரிகள், மார்ச், 15ம் தேதியும், பொறியியல் கல்லூரிகள், 18ம் தேதியில் இருந்தும், கால வரையின்றி மூடப்பட்டன. விடுதிகளில் இருந்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலும், மாணவர்கள், கூட்டமைப்புகளை உருவாக்கி, போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
/
பொதுமக்கள், தமிழ் உணர்வாளர்கள் என, பலரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். “போராட்டத்தை கைவிடுங்கள்’ என, அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்.”போராட்டம் வேண்டாம்’ என, முதல்வரும் கேட்டுக் கொண்டார். எனினும், மாணவர்கள், பல்வேறு இடங்களில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், மீண்டும் கல்லூரி திறப்பதில் கேள்விக்குறி எழுந்தது.
/
ஆசிரியர்களும், குறிப்பிட்ட காலத்தில் பாடத் திட்டங்களை எப்படி முடிப்பது என, தெரியாமல் திணறினர்.கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள், ஏப்ரல் மாதம் துவங்க உள்ள நிலையில், மூடப்பட்ட கல்லூரிகளைத் திறக்க, அரசும் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வந்தது. மாணவர்களின் போராட்டம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து, கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வி துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க, அரசு உத்தரவிட்டது.”மாநிலம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தால், கல்லூரிகளை திறப்பது சரியாக இருக்காது’ என, உளவுத் துறை கொடுத்த தகவலை அடுத்து, அரசும் கல்லூரி திறப்பு தேதியை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வந்தது.
/
முடிவு:
இந்நிலையில், இரண்டு வாரங்களாக மூடப்பட்டு இருந்த
கல்லூரிகள், ஒரு வழியாக, நாளை திறக்கப்படும் என, அதிகாரப்பூர்வாக, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. நேற்று நடந்த உயர் கல்வித் துறை அதிகாரிகள் கூட்டத்தில், இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டது. மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மூலம், அனைத்து, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கல்லூரிக் கல்வி இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி கூறுகையில், “”அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் கலை அறிவியல் கல்லூரிகளும், நாளை திறக்கப்படும்,” என்றார்.
பொறியியல் :

இதற்கிடையே, அரசு மற்றும் அனைத்து சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகளும், நாளை முதல் திறக்கப்படும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் அறிவித்தார்.இதுதொடர்பாக, பல்கலை பதிவாளர் சிவநேசன் வெளியிட்ட அறிக்கையில், “துணைவேந்தர், அரசுடன் ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள், பல்கலையின் கீழ் இயங்கும், சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் என, அனைத்தும், நாளை, மீண்டும் திறப்பது என, முடிவு செய்யப்பட்டது. தேர்வு திட்டத்தில்,எவ்வித மாற்றமும் கிடையாது’ என, தெரிவித்துள்ளார்.ஆனால், கலை, அறிவியல்
கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகள், 10 நாள் வரை தள்ளிப் போகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் துவங்க வேண்டிய தேர்வுகள், மாத இறுதியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ துவங்கும் என, கூறப்படுகிறது.
சட்ட கல்லூரிகளைதிறக்கவில்லை :

கலை அறிவியல் கல்லூரிகளை போலவே, அரசு சட்ட கல்லூரிகளும், மார்ச் 15ம் தேதி முதல், மூடப்பட்டன. கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் நாளை திறக்கப்படும் என, அரசு அறிவித்த நிலையில், சட்ட கல்லூரிகள் திறப்பு குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இது, சட்ட கல்லூரி மாணவர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக