சென்னை : இலங்கை பிரச்னையில் மாணவ மாணவிகள் போராட்டம் தொடர்வதால், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல், சட்ட, பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன. இவற்றுக்கு இன்று முதல் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..
இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்; இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பரவலாக பல கல்லூரிகளின் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வேறு சில இயக்கங்களும் இதில் ஈடுபட முன்வந்துள்ளதால் கொடும்பாவி எரிப்பு, சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்களுக்குள் ஊடுருவல், தர்ணா என்று போராட்டம் புது வடிவம் பெற தொடங்கியுள்ளது. பாதுகாப்பு கருதி நேற்று முதல் அனைத்து கல்லூரி வாசல்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் நிறுத்தப் பட்டனர்.
வரும் 18ம் தேதி முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வேறு சில அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டிருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் இருந்து கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்க வாய்மொழி உத்தரவு நேற்று மாலை பிறப்பிக்கப்பட்டது. அனைத்து அரசு மற்றும் தனியார் கலை, பொறியியல், சட்டக் கல்லூரிகளுக்கும் இன்று முதல் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்ட துடன், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள் வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பை தொடர்ந்து, நேற்று மாலையே பெட்டி, படுக்கைகளுடன் பெரும்பா லான மாணவ, மாணவிகள் விடுதியை காலி செய்து வெளியேறினர். தற்போது கல்லூரிகளில் மாதிரி தேர்வுகள் நடந்து வருகிறது. அந்த தேர்வுகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ்செல்வியிடம் கேட்டபோது, “தற்போது நிலவி வரும் அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக