AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 20 மார்ச், 2013

கடலூரில் பிளாஸ்டிக்கை ஒழிக்க தீவிர நடவடிக்கை: திட்டக்குழு கூட்டத்தில் அதிகாரி அறிவிப்பு

கடலூர், மார்ச் 20-

கடலூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாறுபட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும், ஊராட்சி குழு தலைவருமான மல்லிகா வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.

மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், திட்டக்குழு அலுவலர் ஆனந்தன், ஒன்றிய குழு தலைவர்கள் மணிமேகலை பழனிசாமி, ஜெயபால், மணிகண்டன், சுந்தர்ராஜன், செல்வராஜ், சுந்தரிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முருகுமாறன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர், பேரூராட்சி தலைவர்கள் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:-

கந்தன் (திட்டக்குழு உறுப்பினர்): கடலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். ஆனால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை.


இதற்காக அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஏதேனும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா? சிங்காரதோப்பு- சோனாங்குப்பம் இடையே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவி (கமிஷனர் பொறுப்பு): பிளாஸ்டிக் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். வருகிற 31-ந் தேதிக்கு பின் அபராதம் விதிக்கப்படும்.

என்.டி.கந்தன் (திட்டக்குழு உறுப்பினர்): அண்ணாகிராமம் ஒன்றியம் புதுப்பேட்டை-கரும்பூர் சாலையை விரைவில் சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பாக்கம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்.தாசன் (காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி தலைவர்): எங்கள் பேரூராட்சி பெரிய பேரூராட்சி ஆகும். ஆனால் எங்கள் பேரூராட்சியில் குறைந்த அளவே துப்புரவு பணியாளர்கள் உள்ளனர்.

ஆகையால் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தியாகுவதை தடுக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும்.வடிகால் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக