AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 27 மார்ச், 2013

முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை தீவிர கண்காணிப்பு 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதும் 10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது...

சென்னை: பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இரு மாநிலங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 312 பள்ளிகளை சேர்ந்த 11 லட்சம் மாணவ, மாணவிகள்  தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 3050 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று நாள் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்து வருகிறது. நாளை தமிழ் 2ம் தாள் தேர்வு நடக்கிறது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது.
 

மாணவர்களுக்கு சரியாக 10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. 10 நிமிடங்கள் அதை படிக்கவும், 5 நிமிடங்கள் விடைத்தாள்களில் கேட்கப்படும் தேர்வர்களின் விவரங்களை நிரப்புவதற்கும் வழங்கப்பட்டது சரியாக 10.15 மணிக்கு தேர்வு எழுத மாணவ, மாணவிகள் தொடங்கினர். ஒவ்வொரு தேர்வும் இரண்டரை மணி நேரம் நடைபெறும். சரியாக மதியம் 12.45 மணிக்கு தேர்வு முடியும். ஏப்ரல் 12ம் தேதி வரை  தேர்வுகள் நடைபெறும். தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்வில் காப்பி அடித்தல், பிட் அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். ஆள்மாறாட்டத்தை தடுக்க புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

முறைகேடுகளுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், தேர்வு மையத்தின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும். முறைகேடுகளை தடுக்க தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் அறை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தேர்வு மையத்தில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் உறவினர்கள் எவரேனும் அந்த மையத்தில் தேர்வு எழுதவில்லை (உறவினரல்லா சான்று) என்னும் சான்றினை முதன்மை கண்காணிப்பாளரிடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வை கண்காணிக்க கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் தலைமையில் தேர்வுக் குழு  அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும் இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு அட்டவணை
இன்று    :   தமிழ் முதல் தாள்
நாளை    :   தமிழ் 2ம் தாள்
ஏப்ரல் 1    :   ஆங்கிலம் முதல்தாள்
ஏப்ரல் 2    :   ஆங்கிலம் 2ம் தாள்
ஏப்ரல் 5    :   கணிதம்
ஏப்ரல் 8    :   அறிவியல்
ஏப்ரல் 12    :   சமூக அறிவியல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக