AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 3 ஜனவரி, 2013

முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்ச்சில் பேரணி


முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் மார்ச் மாத இறுதியில் மாநில தலைநகரங்களில் பேரணி நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அகமது தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அபு பேலஸ் நட்சத்திர ஹோட்டலில்  நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-
இந்தியாவில் 18 சதவிகித சிறுபான்மையினர் உள்ளனர். இதில் 13.5 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள். ஆனால், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். உள்பட மத்திய, மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் 3 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளனர்.
எனவே, சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாராஷ்டிரம், குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விசாரணையின்றி சிறையில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் வரும் மார்ச் மாத இறுதியில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்படும்.
தமிழகத்தில் திமுகவுடனும், கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியுடனும் வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடரும். மற்ற மாநிலங்களில் கூட்டணி அமைப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கட்சி நிர்வாகிகளுக்கு தில்லியில் வரும் மார்ச் 9, 10 தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெறும் என்றார் இ. அகமது.
பேட்டியின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். காதர் மொகிதீன், தேசிய பொருளாளரும் கேரள மாநில அமைச்சருமான குஞ்ஞாலிக் குட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் மாலையில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அகமது சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற அணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஆலோசித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக