AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 4 ஜனவரி, 2013

காவிரி பாசனப் பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 32 கிராமங்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க மமக கோரிக்கை


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 32 கிராமங்கள் காவிரிப் பாசனப் பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக, விவசாயிகளிடம் கருத்து எதுவும் கேட்கப்படாத நிலையில் யாருடைய பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது எனத் தெரியவில்லை. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், காவிரி பாசனப் பகுதிகள் என்ற அடிப்படையில் இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 12 மணி நேர மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டு, தினந்தோறும் 3 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்தில் இருந்தும் இந்த கிராமங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மின்சார பம்ப் செட்டுகளைப் பயன்படுத்த முடியாததால், கருகும் பயிர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பது தெரியாமல் கடலூர் மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அப்பகுதியில் காப்பீட்டுத் திட்டமும் ரத்து செய்யப்பட்டு விட்டதால், ஒருவேளை பயிர்கள் கருகினால்கூட, அதற்காக இழப்பீடு எதையும் விவசாயிகளால் பெற முடியாது.
எனவே, இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்து, 32 கிராமங்களும் தொடர்ந்து காவிரிப் பாசன மாவட்டங்களாகவே நீடிக்கவும், அப்பகுதி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மற்றும் பயிர்க் காப்பீடும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே வேதனையில் தவிக்கும் விவசாயிகளை மேலும் வேதனைக்குள்ளாக்கும் இதுபோன்ற செயல்களை செய்யவேண்டாம் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

Thanks Tmmk.in

0 கருத்துகள்:

கருத்துரையிடுக