AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 2 ஜனவரி, 2013

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அளிப்பது குறித்து சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழித்திடும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தமிழகத்தில் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கும் வகையில், ""தமிழ்நாடு பெண்கள் இன்னல் தடுப்புச் சட்டத்தின்'' கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள்

2002-ம் ஆண்டு கடுமையாக்கப்பட்டது. இதன்படி, துன்புறுத்தலால் ஏற்படும் மரணம் மற்றும் தற்கொலை ஆகியவற்றில் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கும் பொறுப்பு குற்றவாளிகளைச் சார்ந்ததாக மாற்றி அமைக்கப்பட்டது.

இவை காரணமாக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, பெண்களுக்கு எதிரான

குற்றங்கள் தமிழகத்தில் குறைவாகவே இருந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என அரசு விரும்புகிறது. 

இந்த நிலையில், பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட 13 உத்தரவுகள்:


பாலியல் வன்முறை வழக்குகள் கொடுங்குற்றங்களாக கருதப்பட்டு, புலன் விசாரணை காவல் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படும். டி.எஸ்.பி.க்களால் நேரடியாக மேற்பார்வை செய்யப்படும். இந்த வழக்குகளில் பெண் காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொள்ளவும், முடியாத சூழலில் பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் உதவியுடன் விசாரணை நடத்தப்படும்.

போலீஸ் எஸ்.பி.க்கள், சரக காவல் துறை துணைத் தலைவர் ஆகியோர் இந்த வழக்குகளின் விசாரணையை ஆய்வு செய்வர். இத்தகைய வழக்குகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது முதல் வழக்கு முடியும் வரை மாந்தோறும் ஆய்வு செய்வர்.

இப்போது புலன் விசராணையிலும், நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருக்கும் அனைத்து பாலியல் வன்முறை வழக்குகளையும் மண்டல காவல் துறைத் தலைவர்கள் தீவிர ஆய்வு செய்து சட்டம், ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநருக்கு 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்புவர். இந்த வழக்குகளை விரைந்து முடிப்பதில் தீவிரம் காட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குண்டர் சட்டம் பாயும்: பாலியல் பலாத்காரம் போன்ற கொடிய குற்றங்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் காரணத்தால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும். இதற்காக குண்டர் தடுப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்படும்.

பாலியல் வன்முறை வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞர்களாக பெண் வழக்குரைஞர்கள் நியமிக்கப்படுவர்.

பாலியல் வன்முறைக் குற்ற வழக்குகளில் விரைவில் தீர்ப்புகளைப் பெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில், விசாரணை தொடங்கப்பட்டதில் தொடர்ச்சியாக தினசரி வழக்குகளை நடத்தி, சாட்சி விசாரணைகள், வழக்குரைஞர்களின் வாதங்கள் ஆகியவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மரண தண்டனைக்கு சட்டத் திருத்தம்: பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்கள் காவலுக்கு உட்படுத்தப்படும் காலம் ஒவ்வொரு தருணத்திலும் 15 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை 30 நாட்களாக சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் இருப்பதைப் போன்று உயர்த்துவது, இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகள் முன்ஜாமீன் பெறாமல் இருக்க வழிவகை செய்வது, இந்த வழக்குகளில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டால் வழக்கு விசாரணை முடியும் வரை அவரை ஜாமீனில் விடுவதை தடை செய்வது, பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படுவது, அதிகபட்சமாக மரண தண்டனை அளிப்பது ஆகியவை குறித்து சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக