AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 31 அக்டோபர், 2012

நாகை - நெல்லூர் இடையே ‘நிலம்’ புயல் இன்று கரையை கடக்கும்

சென்னை: வங்கக்  கடலில் உருவாகியுள்ள ‘நிலம்’ என்ற புயல் இன்று மதியம் கரையை கடக்கிறது. அப்போது 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவ மழை கடந்த 20ம் தேதி முதல் பெய்யத் தொடங்கியது. அப்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி அது வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடல் வழியாக சோமாலியாவுக்கு சென்றது. அப்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி வங்கக்கடலில் தென் கிழக்கு திசை யில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது மெல்ல மெல்ல நகர்ந்து மேற்கு திசையில் பயணிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு அது மேலும் வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தென் தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது.அதற்கு பிறகு அந்த காற்றழுத்த மண்டலம் நேற்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 450 கிமீ தெலைவில் நெருங்கி வந்தது. அதனால் நேற்று அதிகாலை முதலே சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோரப் பகுதியிலும் மழை பெய்யத் தொடங்கியது. நேற்று பகல் முழுவதும் மழை பெய்தபடியே இருந்தது. அதில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 150 மிமீ மழை பெய்துள்ளது.


 வேதாரண்யம் 120 மிமீ, சிதம்பரம், சீர்காழி 110 மிமீ, காரைக் கால் 100 மிமீ, நாகப்பட்டினம், திருத்துறைப் பூண்டி 80 மிமீ, திருவாரூர், புதுச்சேரி, மயிலாடுதுறை 70 மிமீ, பரங்கிப்பேட்டை, கடலூர், நன்னிலம் 60 மிமீ, முத்துப்பேட்டை, ஆடுதுறை 50 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு ‘நிலம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலம் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்தை கடந்து தெற்கு ஆந்திர கடலோரத்தை ஒட்டியபடி நாகப்பட்டினம்- நெல்லூர் இடையே இன்று மதியம் அல்லது மாலையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரை கடக்கும்போது மணிக்கு 45 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்று சுழன்று அடிக்கும். அப்போது கடலில் பெரும¢ சீற்றம் காணப்படும். இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரத்தில் கனமழை பெய்யும்.இதை தொடர்ந்து புயல் அபாயத்தை குறிக்கும் 7ம் எண் கொடி சென்னை  துறைமுகத்தில் ஏற்றப்பட்டது. கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி துறைமுகங்களில் புயல் அபாய 5ம்எண் கொடி ஏற்றபட்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் அபாய எண் 6ம் கொடி ஏற்றப்பட்டுள்ளது. 

பாம்பன், தூத்துக் குடியில் 3ம் எண் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. புயல் கரை கடக்கும் போது கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளகுடிசை வீடுகள், மரங்கள், காற்றில் அடித்து செல்லக்கூடும். மரங்களின் கிளைகள் முறிந்து  விழும் வாய்ப்புள்ளது. மின் சாரம், தொலை தொடர்பு பாதிப்புகள் ஏற்படும். கடலில் அதி வேகத்தில் காற்று  வீசும் என்பதால் ஒன்று அல்லது ஒன்றரை மீட்டர் உயரம் கொண்ட அலைகள் எழும். அதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லூர் மாவட்டங்களில் கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் கடல் நீர் உள்புகுந்து செல்லும் வாய்ப்புள்ளது. புயல் இன்று கரையைக் கடக்கும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். லட்சத்தீவு மற்றும் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் ஒருசில இடங்களில் மழை பெய்யும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக