AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 31 அக்டோபர், 2012

பொய்ப் பிரச்சாரங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்த பாப்புலர் ஃப்ரண்டின் சமநீதி மாநாடு!


கோழிக்கோடு:நவீன சமூக இயக்க சக்தியின் வளர்ச்சியை பொய்ப் பிரச்சாரங்களின் மணல் கோட்டையை கட்டி தடுக்க முடியாது என்ற பிரகடனத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமநீதி மாநாடு கோழிக்கோடு கடற்கரையில் புதிய வரலாற்றை எழுதியது.
வளர்ச்சி, சீர்திருத்தம், சுதந்திரம், நம்பிக்கை ஆகியவற்றை பிரதிபலிக்கும் மூவர்ண கொடியை ஏந்தியவாறு கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதூறு பிரச்சாரங்களுக்கு தங்களது எதிர்ப்புணர்வை பறைசாற்றினர்.

பயம், கோழைத்தனம் இவற்றையெல்லாம் கடலில் தூக்கி வீசிவிட்டு தனது லட்சிய பயணத்தை துவக்கிய மாபெரும் இயக்கத்தை போலீஸ்-ஊடக-அரசு இயந்திரங்களின் மிரட்டல்களாலும், வேட்டையாடல்களாலும் தகர்க்க முடியாது என்ற பிரகடனத்திற்கு மாநாட்டில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளம் சாட்சியம் வகித்தது.
தனியார் பேருந்து வேலை நிறுத்தம், மழை உள்ளிட்ட இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் மாநாட்டில் வீராவேசத்துடன் கலந்துகொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் போராட்ட வீரியத்தின் முன்மாதிரிகளாக மாறினர். பெருந்திரளான பெண்களும் குழந்தைகளுடன் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
மாலை நான்கரை மணிக்கு மாநாடு துவங்க சில மணிநேரங்களுக்கு முன்பாகவே கடற்கரை திடலில் மக்கள் வெள்ளம் நிறைந்திருந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களின் பின்னணியை வெளிச்சம் போட்டு காட்டி அரசு, அதிகார, ஊடக, காவல்துறை, உளவுத்துறை ஆகியவற்றின் பொய் முகங்களை தோலுரித்து காட்டும் விதமாக ஒரு மாத காலமாக தேசிய அளவில் நடந்து வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கேரளாவில் நடந்த சமநீதி மாநாட்டின் 2- வது நிகழ்ச்சிதான் கோழிக்கோட்டில் நேற்று நடந்தேறியது.
சமநீதி மாநாட்டை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் மவ்லானா உஸ்மான் பேக் துவக்கிவைத்தார். மாநில தலைவர் மெளலவி அஷ்ரஃப் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர் இ.அபூபக்கர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் பொருளாளர் மவ்லானா முஹம்மது ஈஸா, தெற்கு கேரளா ஜம்மியத்துல் உலமாவின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் வி.எம்.ஃபத்தஹுத்தீன் ரஷாதி, பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் பி.கோயா, மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீத், பகுஜன் சமாஜ் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நன்மண்டா, கேரள காங்கிரஸ்(பி) மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான், மனித உரிமை ஆர்வலர் எ.வாசு, தேசிய பெண்கள் முன்னணி மாநில செயலாளர் பி.கே.ரம்லா, அஷ்ரஃப், நிகழ்ச்சி கன்வீனர் கே.ஸாதாத் ஆகியோர் உரை நிகழ்த்தினர். பி.டி.ஏ.ரஹீம் எம்.எல்.ஏவின் உரை மாநாட்டில் வாசிக்கப்பட்டது.
இம்மாநாடு இணையதளம் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. வெளிநாடுகளில் வாழ்வோர் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் இணையதளம் வழியாக கண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக