AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 23 டிசம்பர், 2011

சிறுபான்மையினருக்கான உள்ஒதுக்கீடு ஒரு மோசடி - பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு பிற்படுத்தபட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில்  4.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என நேற்று மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு ஒரு ஏமாற்று வித்தையாகும்.

2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுமென வாக்குறுதி அளித்தது. 2004 மே மாதம் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கபட்டபோது அதன் குறைந்த பட்ச செயல் திட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் அதன் அறிக்கை பெறப்பட்டு இடஒதுக்கீடு அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு அக்டோபர் 2004ல் மத்திய அரசு நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மத மற்றும் மொழி சிறுபான்னைமயினருக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மே 2007ல் தனது அறிக்கையை சமர்பித்தது. இந்த ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை மன்மோகன் சிங் அரசு தாமதப்படுத்தியது. 2009 மே மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வந்த போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் முஸலிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டது. மீண்டும் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன் பிறகும் மன்மோகன் சிங் அரசு மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இந்த ஆணையத்தின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியான பிறகு டிசம்பர் 2009ல் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது உ.பி. உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரும் சூழலில் சிறுபான்மையினருக்கு 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படுமென மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்துள்ளது. மிஸ்ரா ஆணையததின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மிஸ்ரா ஆணையம் தனது பரிந்துரையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு மதவழி சிறுபான்மையினருக்கு அளிக்க வேண்டும். அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டார்கள். இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு முரணானது இல்லை என்றும் ஆணையம் தெரிவித்தது.  ஆனால் இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது மத்திய அரசுக்கு சிரமமாக இருந்தால் மண்டல் ஆணைய பரிந்துரையின் படி பிற்படுத்த்ப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் மதவழி சிறுபான்மையினருக்கு 8 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் அதில் 6 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென பரிந்துரைச் செய்தது. ஆனால் தற்போது மத்திய அரசு மிஸ்ரா ஆணையத்தின் இந்த  இரண்டு பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாமல்  இதர பிற்படுத்தப்பட்டோர பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து சிறுபான்மை வகுப்பினருக்கும் 4.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அளிக்க முடிவுச் செய்துள்ளது. இந்த உத்தரவின் படி இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் முதலியோருக்கு இந்த உள்ஒதுக்கீடு அளிக்கப்படும். இத்தகைய இடஒதுக்கீட்டினால் எந்தவொரு பலனும் முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்கப் போவதில்லை. மிஸ்ரா ஆணையம் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தனியாக 6 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென பரிந்துரைத்தையும் மத்திய அரசு புறந்தள்ளி முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது.

மன்மோகன் சிங் அரசு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து இடஒதுக்கீடு பிரச்னையில் செய்துவரும் துரோகத்தை கண்டிக்கும் வகையிலும் 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஏமாற்று வித்தையை உடனடியாக வாபாஸ் வாங்க கோரியும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க கோரியும் தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு சென்னையிலும் காரைக்குடியிலும் கறுப்புக்கொடி காட்டும் பேராட்டத்தை தமுமுக நடத்தும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக