AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 4 நவம்பர், 2011

பூமியின் நிலையான வெப்பம்! மாறுகிறது!?


தற்போது நாம் சந்தித்து வரும் தட்ப வெப்ப நிலை மாறுபாடு என்பது நாம் எப்போதும் சந்தித்திராத ஒன்று என்ற விழிப்புணர்வு அனைத்து மக்களிடமும், அனைத்து மட்டங்களிலும், உலகளாவிய அளவில், அனைத்து துறைகளையும் கடந்து, அரசு மற்றும் தனியார் அமைப்புகளிடையேயும், ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
இந்த தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை, தொழிற்புரட்சி ஏற்பட்டதிலிருந்தே (18ஆம் நூற்றாண்டின் பின்பகுதி மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் முன்பகுதி) உலகம் சந்தித்து வருகிறது என்பது இன்று பரந்து பட்ட அளவில் உணரப்பட்டிருப்பதே ஒரு எச்சரிக்கை செய்தியாகும்.
மேலும், இத்தகைய தட்ப வெப்பநிலை மாறுபாடானது, உண்மையானதே, பொய்யான சமிக்கை அல்ல என்பதற்கு ஆதாரமாக பல அறிவியல் உண்மைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அவற்றில் சில உலக அளவிலான உதாரணங்கள் கடந்த 100 ஆண்டுகளில், புவி மேற்பரப்பின் வெப்ப நிலை 0.74 டிகிரி செல்சியசாக உயர்ந்துள்ளதாம். 1850ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டவைகளிலேயே கடந்த 11 வருடங்கள் தான் அதிக (1995-2006) வெப்பமயமான வருடங்கள்.
அனல் பரவலாக்கம் மற்றும் பனிப் பாறைகள், பனிக்கட்டிக் கூம்புகள் மற்றும் போலார் பனித் தட்டுக்கள் உருகுதல் ஆகியவற்றால் வெப்பநிலை அதிகரிப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து வருகிறது. (1993லிருந்து வருடத்திற்கு 3 மி.மீ உயரம் வரை); உலகின் பல பகுதிகளில் மழைப் பொழிவுத்தன்மைகளில் மாறுபாடுகள் காணப்படுதல்; அடிக்கடி நிகழும் சூடான காற்றலைகள், அதீத வெப்பமான பகல் மற்றும் இரவு நேரங்கள்; பருவ நிலை மாற்றங்களால், வெப்ப மண்டல சூறாவளி, புயல் அலையெழுச்சி, வெள்ளப் பெருக்கு மற்றும் வறட்சி ஆகியவை தொடர்ந்து தீவிரத்துடன் நிகழ்வது அதிகரித்து கடலோரப் பகுதிகளில் பேரிழப்பினை உண்டாக்குகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் (1991-2005) பதிவான பேரிழப்புகளின் 76%மான, 5210 நிகழ்வுகள் நீர்நிலைக் காரணிகளால் உண்டான பேரிழப்புகளே. புள்ளிவிவரங்களின்படி, இது மேலும் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கும் முகமாகவே தெரிகிறது.
குறிப்பாக,கடலை விட நிலப்பகுதியில் அதிக வெப்பநிலை பதிவாகியிருந்தாலும், பெருங்கடல்களே, அதீத வெப்பத்தின் 80%ஐ கிரகித்துக் கொள்கின்றன. இது சாதாரணமான புவி தட்ப வெப்ப நிலைக்கும் மேல் கூடுதலானதாகும். இதனால் கடல் நீரில் அனல் பரவுதல் நிகழ்கிறது. அனல் பரவலாக்கத்துடன் சேர்ந்து பனிப்பாறை உருகி கடலில் வந்து சேருவதால், கடல் மட்டம் உயர்கிறது. 1961-2003க்கும் இடையே உணரப்பட்ட உயர்வு வருடத்திற்க்கு 1.8மி.மீ ஆகவும், 1993-2003க்கும் இடையே வருடத்திற்கு 3.1 மி.மீ ஆகவும் இருந்தது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் மொத்த கடல் மட்ட உயர்வு 0.17 மீட்டர்கள். கடல் மட்ட உயர்வினால் பெரிய ஆறுகளில், பெரும் வடிநிலப்பகுதிகளில்,கடலோரப் பகுதிகளில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுதல், தாழ்வாக உள்ளப் பகுதி மூழ்குதல்; கடலரிப்பு; மண் உவர்ப்பு அதிகரித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும், வெப்ப நிலை அதிகரிப்பு குறைந்தது 0.2 டிகிரி செல்சியஸ் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2100 க்குள், வெப்ப நிலை அதிகரிப்பு 2 டிகிரி செல்சியசிலிருந்து 4.5 டிகிரி செல்சியசாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அதே கால இடைவெளியில், கடல் மட்ட உயர்வு 0.1 லிருந்து 0.9 மீட்டராக இருக்கும். இந்தக் கணிப்புகள் உண்மையானால், உயிர்ச் சூழல் மண்டலம் மிகப் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு, குறைந்தது 20 முதல் 30% உயிர் இனங்கள் அழியும் ஆபத்து உள்ளது.
அதிக எண்ணிக்கயிலான மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகும் நிலை ஏற்படும். இந்தியாவைப் பொறுத்த வரை, உலக வெப்பம் வெறும் 2 டிகிரி செல்சியஸ் உயர்வதாலேயே, மும்பை,சென்னை நகரங்களின் பகுதிகள் கடலில் மூழ்கி, சுமார் 7 மில்லியன் மக்கள் இடம் பெயர்க்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக புவிச் சுற்றுச் சூழலுக்குள்ளும் வெளியிலும் நிகழும் இயற்கை நடைமுறைகளே தட்ப வெப்பநிலை மாறுபாட்டினை தோற்றுவிக்கின்றன. உதாரணமாக, புவி அமைப்பின் வேறுபாடுகள் – வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வாயுச் சேர்மத்தின் அதிகரிப்பு; கடலியல் சுழற்சி; பனிப்பாறை மாற்றம்; புவித் தட்டு நகர்வுகள்; எரிமலைச்சீற்றங்கள் போன்ற செயல்கள் தட்ப வெப்ப நிலை மாறுபாடுகளை ஏற்படுத்தலாம்.
கதிரியக்க வேறுபாடுகள் – புவிச் சுற்றுச்சூழலுக்கு வெளியில் உள்ள காரணிகளான ஒளிச்செறிவு, சூரிய சுழற்சி; புவி மைய வேறுபாடுகள் போன்றவையும் தட்பவெப்ப நிலை மாறுபாடுகளுக்கு காரணமாகலாம். இருப்பினும் இது போன்ற இயற்கை நடவடிக்கைகளால் ஏற்படுத்தப்படும் தட்ப வெப்பநிலை மாற்றம் மிக மெதுவாகவும், பல நூற்றாண்டுகளும் பிடிக்கும். ஆனால், சமீப ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ள எச்சரிக்கை சமிக்கைகள் தெரிவிப்பது. வேகமான புவி வெப்பமடைதலுக்கு காரணம் இயற்கை நிகழ்வுகள் அல்ல இவை மனித நடவடிக்கைகளால் நிகழ்பவை என்பதாகும்.
1980களில் தான், அறிவியல் சான்றுகள், மனித செயல்களால் ஏற்படும் பசுமைக் குடில் வாயுக்களின் வெப்ப உமிழ்வை, புவியின் தட்ப வெப்ப மாறுதல் குறித்த ஆபத்துடன் இணைத்து ஒரு பொதுப் பிரச்சனையாகப் தொடர்புபடுத்த ஆரம்பித்தது. 1988-ல், உலக வானிலை மையமும் (WMO) ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் திட்டமும் (UNEP) இணைந்து மனித செயல்களினால் உண்டாக்கப்படும், தட்ப வெப்ப நிலை மாறுபாடுகள் குறித்த ஆபத்தினை ஆய்வு செய்வதற்கு தட்ப வெப்ப நிலை மாற்றம் மீதான அரசாங்கங்களுக் கிடையேயான குழுமத்தை ஏற்படுத்தியது. 1990-ல், ஐக்கிய நாடுகள் சபை, தட்ப வெப்ப நிலை மாறுபாடு குறித்த உடன்படிக்கை வடிவத்திற்கான சர்வதேச குழுவை (UNFCCC) உருவாக்கியது. இந்த உடன்படிக்கைக்கான வரையறையானது, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டுக்கு மனிதனால் ஏற்படும் மாற்றமே காரணம் என்று விளக்குகிறது.
இதில், பெருகி வரும் தொழில்மய நடவடிக்கைகளும் அதனால் விளையும் பெருங்கழிவுகளும் (அணு மற்றும் அனல் மின் திட்டங்கள்,துறைமுகங்கள், சுரங்க நடவடிக்கைகள், உரக்கழிவுகளை அதிகரிக்கும் விவசாயத் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்கள், நகர்மயமாதலால் விளையும் கழிவுகள், போன்றவை) வெப்ப நிலை அதிகரிப்பிற்குக் காரணாமாக உள்ளன. நகராட்சிக் கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் 80%க்கும் மேல் நச்சு இரசாயனங்கள், கனஉலோகங்கள், திட உயிர்க் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டது.
சூடான தொழிற்சாலைக் கழிவுகளும் கடல் நீரில் கலக்கப்படுகிறது. இந்த அனைத்து கழிவுகளும், கடற்கரை நீரோட்டத்தின் மூலம் பரவலாக்கப்படுகிறது. இந்த மாசுபாடுகள் கடல் உணவுச் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி, கடல் உணவை உட்கொள்ளும்  மனிதர்களுக்கும் ஆரோக்கியக் கேட்டினை ஏற்படுத்துகிறது. இத்தகைய அழிவினைத் தரும் தொழில் நுட்ப நடவடிக்கைகளில் வளர்ந்த நாடுகளே இவ்வளவு காலம் முன்னணியில் இருந்து வந்தன. தற்போது, வளரும் நாடுகள் இந்த் அழிவினை முன்னின்று நடத்துவதற்கான திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இதில் இந்தியாவின் நிலையைப் பார்போமானால், ஒரு புறம் அதிகரித்து வரும் வெள்ளப் பெருக்கு நிகழ்வுகள், மறுபுறம் கடும் வறட்சி என மாறுபாடான சூழலே நிகழ்ந்து வருவதைக் காண்கிறோம்.
உலகம் முழுவதும், கடற்கரைப் பகுதிகளே மக்கள் குடியிருக்க விரும்பும் பகுதியாகும். இந்தியா அதிலிருந்து மாறுபட்டதல்ல. இந்தியாவின் கடலோர மாவட்டங்களில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 455 நபர்கள் குடியிருக்கின்றனர். இது தேசிய சராசரியான, 324ஐவிட (2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி) 1.5 மடங்கு அதிகமானது. அனைத்துப் பெரு நகரங்களும் கடலோரப் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இந்தியாவின் 8118 கிலோமீட்டர் தொலைவுள்ள கடற்கரை எல்லை பலவகையான வாழிடங்களைக் கொண்டது. மேற்கு கடற்கரைப் பகுதி பரந்த நிலத்தட்டினைக் கொண்டு, பின் நீர் இணைப்புகளாலும், சேறு, சகதி கொண்ட சமதளத்துடனும் உள்ளது. கிழக்கு கடற்கரை, தாழ்ந்த நிலப் பகுதியைக் கொண்ட காயல்கள், சதுப்பு நிலங்கள், கடற்கரைகள் மற்றும் மாங்குரோவ் அதிகமுள்ள டெல்டாப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள சிறு தீவுகளிலும், தமிழகத்தின் மன்னார் வளைகுடா மற்றும் லட்சத் தீவுகள், அந்தமான், நிக்கோபார் தீவுகளிலும் பவளப் பாறைகள் நிறைந்து காணப்படுகிறது. மன்னார் வளைகுடாப் பகுதி, கடல் பன்முகத்தன்மை பாதுகாப்பு பகுதியாகும். இந்தியாவில் 31 கடல் பாதுகாப்பு பகுதிகள் சுமார் 2,305,413 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள கடல் பகுதி தனித்த பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள கடல் வளங்களை கண்டறியவும் பயன் படுத்தவுமான சிறப்பு உரிமைகளை இந்தியா கொண்டிருக்கிறது.
இத்தகைய உயிர்ச் சூழல் தன்மை மிகுந்த நம் நாட்டில், தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரை இரட்டை நிலையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம், 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிலைத்த வளர்ச்சிக்கும், அனைத்துத் துறைகளிலும் பேரழிவின் ஆபத்தினைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும், திட்டச் செயல்பாடுகள் அனைத்திலும் அவை கடைபிடிக்கப்படவில்லை. உதாரணமாக, 1990 களில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பிக்கும் தன்மையுடைய மின்ஆற்றல் தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவதற்கான திட்டங்களும், கொள்கைகளும் 111 மில்லியன் டன் வெப்ப உமிழ்வுகள் குறைப்பதற்கு பேருதவியாக இருந்தது.
இதனடிப்படையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட 7300 க்கும் மேற்பட்ட காற்றாலைகள் மூலம், 3600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படுகின்றது (உச்சபட்சத் தேவையில் 40%) ஆனால், இதே கடலோரப் பகுதிகளில், அணு மற்றும் அனல் மின் நிலையத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு, மேற்படி சேமித்த வெப்ப உமிழ்வு அளவை விட பல மடங்கு அதிகமான அளவை வெளியேற்றி வருகின்றன. வட சென்னை அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு உலை, கூடங்குளம் அதிவேக அணு உலைகள், வரவிருக்கும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், உடன்குடி அனல் மின் நிலையம் மற்றும் இவற்றின் நிலக்கரி, எரிபொருள் போக்குவரத்துத் தேவைகளுக்காக விரிவாக்கப்படவுள்ள அல்லது புதிதாக அமைக்கப்படவுள்ள துறைமுகங்கள் ஆகியவை எந்த விதத்திலும் இந்தியாவின் கொள்கை என்றழைக்கப்படும் நிலைத்த வளர்ச்சிக்கான திட்டங்களல்ல.
இதனுடன் கூட, 1999ல் இந்திய அரசினால் கொண்டுவரப்பட்ட புதிய கண்டறிதல்களுக்கான அனுமதிக் கொள்கை (Exploration Licensing Policy) இந்தியக் கடல் பகுதியில் குறிப்பாக கிழக்கு கடலோரப் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்களை தனியார் பெரு நிறுவனங்கள் மூலம் ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒருபுறம் தேசிய சுற்றுச் சூழல் கொள்கையில் (2006) கடலோர வளங்கள், உயிர்ச்சூழலைப் பாதுகாக்கும் ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மையை அறிவித்துவிட்டு, மறுபுறம் அதனை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது என்பது இந்திய அரசின் இரட்டை வேடக் கொள்கையையே காட்டுகிறது. இதில் பலியாவது நமது இயற்கை வளங்களும் அதன் விளைவாக நிகழும் வெப்ப நிலை மாறுபாடுகளும் தான். மேலும், இத்தகைய திட்டங்களின் நெருக்கடியால், பேரழிவுகள் நிகழும் போது 2% அளவிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைகிறது. இதில் அதிகம் பாதிப்படைவது கடலோரப் பகுதிகளிலில் வாழும் மக்களே.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பல திட்ட ஆய்வுகளின் படியும், இந்திய அறிவியலாளர்களின் ஆய்வின்படியும், புவி வெப்பமடைதலால், இந்தியாவிற்கு எதிர்வரும் காலத்தில் 2100க்குள் வெப்ப நிலை 4 செல்சியஸ் அதிகரிக்கும். ஆண்டிற்கு 1 மி.மீ கடல் மட்டம் உயரும். மழை மற்றும் பனிப் பொழிவு 11% அதிகரிக்கும். தட்ப வெப்பம் சார்ந்த காரணிகளால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9%வரை வீழ்ந்து அனைத்து வளர்ச்சி நோக்கங்களையும் அடித்துச் செல்லும்; 35% க்கும் மேற்பட்ட ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கும் குறைவான வருவாயில் வாழும் மக்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக