AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 26 நவம்பர், 2011

ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் பரிந்துரை மின் கட்டணம் 2 மடங்கு உயர்வு

சென்னை : மின்கட்டணத்தை 2 மடங்குக்கும் மேல் உயர்த்த கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் அளித்த மனு தொடர்பான விசாரணை நேற்று நடந்தது. மக்கள் கருத்து கேட்டபின் 3 மாதத்துக்குள் புதிய மின்கட்டணம் நடைமுறைக்கு வருகிறது. புதிய பரிந்துரையின்படி வீடுகளுக்கான மின்கட்டணம் யூனிட்டுக்கு 75 பைசாவில் இருந்து ரூ.2 ஆக உயர்கிறது. கடைகளுக்கு ரூ.4.50ல் இருந்து ரூ.7 ஆக கட்டணம் உயரும்.

தமிழக அரசின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதால் பஸ், மின் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்துவதாக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார். உள்ளூர், வெளியூர் பஸ் கட்டணம், வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிருப்தியடைந்த மக்கள் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

மின்கட்டணம் உயர்த்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தாலும் அதை உடனடியாக அமல்படுத்த முடியாது. மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. இதுகுறித்து மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு மின்வாரியம் கோரிக்கை வைக்க வேண்டும். அதன்பின், மக்களின் கருத்தை ஆணையம் கேட்டறிந்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். 

மின்வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள ரூ.8 ஆயிரம் கோடி இழப்பை சரி செய்ய, மின் கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் கடந்த 17ம் தேதி மனு அளித்திருந்தது. மின்வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்டு வந்ததையடுத்து கடந்த ஆண்டில் ஒரு பிரிவினருக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, 600 யூனிட்களுக்கு அதிகமாக பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.05 கட்டணம் உயர்த்தப்பட்டது. அதாவது ஸி3 ஆக இருந்த கட்டணம் ரூ.4.05 என
நிர்ணயிக்கப்பட்டது.

இந்த கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு ரூ.1,952 கோடி கூடுதல் வருமானம் கிடைத்தது. ஆனாலும், இழப்பை ஈடுகட்ட முடியவில்லை என கூறப்படுகிறது. 2001&ல் மின்வாரியத்தின் கடன் தொகை ரூ.3539 கோடியாக இருந்தது. இது, 2011&ல் ரூ.43,000 கோடியாக அதிகரித்துள்ளது. 2011&12ம் ஆண்டில் கடன் தொகை கூடுதலாக ரூ.10,000 கோடி ஏற்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வீட்டு இணைப்புகளுக்கு 6 பிரிவுகளாக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண ஏழை மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிகபட்சமாக 75 பைசா மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. 50 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 75 பைசாவும், 51 முதல் 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 85 பைசாவும் 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.1.50ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

புதிய கட்டணம் அறிவிக்கப்படும்போது, இந்த 3 பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து, 200 யூனிட் வரை கட்டணமாக ரூ.2 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது யூனிட்டுக்கு 75 பைசா, 85 பைசா செலுத்தி வருபவர்கள்கூட இனி ரூ.2 செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதுபோல் தொழில் மற்றும் வர்த்தக கடைகளுக்கு அடிப்படை கட்டணமே யூனிட் ஒன்று ரூ.7 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண உயர்வு அறிக்கையை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று ஏற்றுக் கொண்டு மதியம் 2.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் கட்டணம் உயர்வு தொடர்பான விசாரணை நடத்தியது. இதில் ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்கள் நாகல்சாமி, வேணுகோபால், செயலாளர் குணசேகரன் மற்றும் மின்வாரிய தலைவர் ராஜீவ்ரஞ்சன், நிர்வாக இயக்குநர் முருகன், நிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலன் கூறியதாவது: மின்வாரியத்தின் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிக்கையை, நாங்கள் ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்தினோம். இன்று மாலையிலேயே கட்டண அறிக்கை தொடர்பான முழு அறிக்கையை தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

விரைவில் தமிழிலும் வெளியிடப்படும். இதன்மூலம் அடுத்த 4 வாரங்களுக்கு இணையதளத்தின் மூலம் மக்கள் கருத்து கேட்கப்படும். இதில் மக்கள் ஆலோசனைகள், எதிர்ப்புகளை தெரிவிக்கலாம். பின்னர் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். தேவைப்பட்டால் வேறுசில நகரங்களிலும் கருத்து கேட்டு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இவற்றை எல்லாம் முடிந்த பின்னரே அடுத்த 3 மாதத்தில் புதிய மின்கட்டணம் நிர்ணயிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய மின் கட்டணம் 

1 முதல் 50 யூனிட்    75 காசு
51 முதல் 100 யூனிட்    85 காசு
101 முதல் 200 யூனிட்    ரூ.1.50    201 முதல் 600 யூனிட்    ரூ.2.20
601 யூனிட்க்கு மேலே    ரூ.4.05 

வர்த்தக நிறுவனங்களுக்கு

1 முதல் 100 யூனிட்    ரூ.4.30
100 முதல் 200 யூனிட்    ரூ.5.30
200 யூனிட்க்கு மேல்    ரூ.6.50

உயர்த்தவுள்ள புதிய மின்கட்டணம் 

0 முதல் 200 யூனிட்    ரூ.2
201 முதல் 500 யூனிட்    ரூ.3.50
500 யூனிட்டுக்கு மேல்    ரூ.5.75

0 கருத்துகள்:

கருத்துரையிடுக