AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 6 அக்டோபர், 2011

கட்டாய கல்வி திட்டம்! ஓர் கானல் நீர்?

இந்தியாவில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்ற திட்டம் இப்போது வரை நிறைவேறாத கனவாகவே உள்ளது.
சிறார்களை வேலைக்குச் செல்லாமல், பள்ளிக்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்திய அரசு கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின்படி, வேலைக்குச் செல்லும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு அனுப்ப பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதேப்போல சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.
இப்படி நிர்வாக அடிப்படையில் கட்டாயக் கல்விக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வேலைக்குச் செல்லும் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளியில் சேர்த்து விடுவதால் மட்டுமே கட்டாயக் கல்விக் கனவு நிறைவேறிவிடாது.
தற்போது எத்தனையோ பள்ளிகளில் போதிய ஆசிரியர்களும், கட்டட வசதியோ, கழிப்பிட வசதியோ இல்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டால் மட்டும் அவர்களுக்கு கல்வி அளித்துவிட்டதாக ஆகிவிடுமா?
கல்வி கற்பிக்க ஆசிரியர்களும், அவர்கள் தங்கி படிக்க பள்ளிக் கட்டடமும், கழிப்பிட வசதியும் நிச்சயம் இருந்தாக வேண்டும். ஆனால் எத்தனையோ ஊரகப் பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி, மாணவ, மாணவியர் அமர்ந்து படிக்க கட்டடம் கூட இல்லாமல் மரத்தடியில் செயல்படும் எத்தனையோ ஆயிரம் பள்ளிகள் உள்ளன.
சுடுகாட்டில் நடைபெறும் பள்ளி கூட தமிழகத்தில் உள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்கள் எத்தனையோ உள்ளன. பள்ளியின் அருகில் சாக்கடை, மதுபானக் கடைகள் என பள்ளி செயல்பட எந்த தகுதியும் இல்லாத இடங்களில் எத்தனை பள்ளிகள் தற்போதும் இயங்கி வருகின்றன.
பள்ளியின் தரத்தை உயர்த்தாமலும், போதுமான ஆசிரியர்களை நியமிக்காமலும் வேலைக்குப் போகும் குழந்தைகளை மட்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டால் கட்டாயக் கல்வி என்ற கனவு கானல் நீராகவே இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக