லிபியாவில் சிர்தே நகரில் குண்டு காயங்களுடன் சாக்கடை குழாய்க்குள் பதுங்கியிருந்த அதிபர் கடாபி புரட்சிப்படை வீரர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர், வெளியே கொண்டு வரப்பட்ட அவர் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டார். பின்னர், புரட்சி படையினரால் அடித்து உதைத்து சித்ரவதை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
இக்கொலையை நேட்டோ படையினர் செய்ததாகவும் தகவல் வெளியானது. கடாபி சித்ரவதை காட்சிகள் வீடியோ மூலம் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டன. இதைப்பார்த்த உலக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து கடாபி கொல்லப்பட்டது குறித்து விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுந்தன.
அவர் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், கடாபியும், அவரது மகன் முட்டாசிமும் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா.சபை விசாரிக்க வேண்டும் என்றும் கடாபி குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கடாபியை கொன்றவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என லிபியாவின் இடைக்கால அரசு அறிவித்துள்ளது. அரசின் துணை தலைவர் அப்துல் ஹபீஷ் ஹோகா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
சர்வாதிகாரி கடாபி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தும்படி யாரும் சொல்ல தேவையில்லை. ஏனெனில் அதுகுறித்து விசாரணையை ஏற்கனவே தொடங்கி விட்டோம். இச்சம்பவத்தில் புரட்சிப் படையினரோ, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோ அல்லது நேட்டோ படையினரோ யார் ஈடுபட்டிருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக