AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

சரண் அடைய மாட்டோம்: லிபியாவில் போர் தொடரும்; அதிபர் கடாபி அறிவிப்பு

திரிபோலி, செப். 2-

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப்படை தலைநகர் திரிபோலியை பிடித்தது. அதை தொடர்ந்து அங்கு கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் கடாபி தலைமறைவாக உள்ளார். அவரது மனைவி ஷபியா, மகள் ஆயிஷா, மகன்கள் ஹன்னியல், மொகம்மது ஆகியோர் குடும்பத்துடன் பக்கத்து நாடான அல்ஜீரி யாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே பதுங்கி இருக்கும் கடாபியை புரட்சிபடையும், நேட்டோ படையும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். இந்த நிலையில், கடாபி பாலைவன நகரமான பானி வாலிட் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக ராணுவ கட்டுப்பாட்டு அறைகளின் அமைப்பாளர் அப்துல் மஜீத் மெலெக்டா தெரிவித்துள்ளார்.

பானி பொலிட் நகரம் திரிபோலியில் இருந்து தென் கிழக்கில் 150 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. அவரது மகன் சயீப் அல்- இஸ்லாம் மற்றும் உளவுத்துறை தலைவர் அப்துல்லா அல்-செனோஸ்சி ஆகியோர் அவருடன் உள்ளனர். அங்கிருந்தப்படிதான் கடாபி ராணுவத்தை இயக்கி வருகிறார். அவருக்கு பாதுகாப்பாக மலைவாழ் மக்கள் உள்ளனர். இன்னும் 4 நாளில் நல்ல முடிவு எடுத்து புரட்சிப் படையை தாக்க தயாராக திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்றும் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

சிர்த் நகரில் உள்ள கடாபியின் ராணுவமும், அவரது ஆதரவாளர்களும், 4 நாட்களுக்குள் சரண் அடைய வேண்டும் என புரட்சிப்படை அறிவித்திருந்தது. தற்போது அந்த கெடு மேலும் 7 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இடைக்கால அரசின் செய்தி தொடர்பாளர் அப்துல் ஹபீஸ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் திரிபோலியில் ரத்தம் சிந்துவதை நிறுத்த தான் சரண் அடைய தயாராக இருப்பதாக கடாபியின் மகன் சாடி அல் கடாபி கூறியுள்ளார். இதற்கிடையே, சிரியாவைச் சேர்ந்த அல்ராய் டி.வி.யில் கடாபியின் பேச்சு அடங்கிய ஆடியோ கேசட் வெளியிடப்பட்டது. அதில், புரட்சிப்படையிடம் நாங்கள் சரண் அடைய மாட்டோம். எங்களது கொரில்லா போர் நீண்ட நாட்கள் தொடரும். அவர்களிடம் லிபியாவை மக்கள் விட்டுக் கொடுக்க அனுமதிக்க மாட்டார்கள்.

எண்ணை வளம் மற்றும் செல்வத்தை அவர்கள் கொள்ளையடிக்க விட மாட்டோம். அவற்றை லிபியா மக்களுக்குதான் கடவுள் அளித்துள்ளார். திரிபோலியை இஞ்ச்... இஞ்ச்... ஆக மீட்போம். அதே போன்று மற்ற நகரங்களையும் விடுவிப்போம் என அவர் கூறினார்.

இதற்கிடையே, லிபியாவில் உள்ள இடைக்கால அரசுக்கு ரஷியா தனது ஆதரவை அளித்துள்ளது. மேலும் லிபியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவது குறித்தும், நிவாரண பணிகளை மேம்படுத்துவது குறித்தும் பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோஷி தலைமையில் பாரீசில் கூட்டம் நடந்தது. அதில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சீனா, ரஷியா உள்ளிட்ட 60 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். லிபியாவில் அமைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசுக்கு உலக நாடுகள் ஆதரவு அளிக்கவேண்டும் என ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் பிரான்சில் முடக்கி வைக்கப்பட்டுள்ள லிபியாவின் ரூ.9,700 கோடி சொத்துக்கள் விடுவிக்கப்பட உள்ளது. அதற்கு ஐ.நா.சபை அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அலைன் ஜீப் தெரிவித்துள்ளார்......

1 கருத்துகள்:

Absar சொன்னது…

மற்ற மாற்று மதத்தினர் ஒரு இஸ்லாமிய நாட்டில் யார் ஆட்சி நடத்த வேண்டும் என கூட்டம் போட்டு தீர்மானிக்கிறார்கள் . இதை மற்ற இஸ்லாமிய நாடுகள் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறார்கள் . எப்பொழுது தான் இவர்கள் திருந்துவார்களோ அந்த அல்லாஹ்விற்கு தான் தெரியும் ...

கருத்துரையிடுக