AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

பணிகள் முழுவீச்சில் தொடங்கியது உள்ளாட்சி தேர்தல் தேதி 10 நாளில் அறிவிப்பு


சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் மேயர், தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் என 14,379 பேர் உள்ளனர்.
அதேபோல், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இவற்றில் சேர்மன், துணை சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் என 1 லட்சத்து 17,716 பேர் பதவி வகித்து வருகின்றனர்.  இந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவி காலம், அக்டோபர் 24ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி புதிய மேயர், தலைவர், கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கடந்த மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ÔÔஉள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படும்ÕÕ என்று அறிவித்தார். 
தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டம் 14ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு, தேர்தல் தேதி அறிவிக்கப் படலாம் என்று தெரிகிறது. தேர்தலுக்காக 40 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப் பதிவு  பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.    
கடந்த 2006 வரை மாநகராட்சி மேயரும், நகராட்சி தலைவர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2006ல் திமுக அரசு அந்த முறையை ரத்து செய்து, கவுன்சிலர்கள் மூலம் மேயர் மற்றும் நகராட்சி தலைவரை தேர்ந்தெடுக்க  சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
அதன்படி 2006 தேர்தலில் மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுத்தனர். எனவே, அந்த தேர்தலில் வாக்காளர்கள் ஒரு வாக்கு மட்டுமே பதிவு செய்தனர். இந்நிலையில், மேயர், நகராட்சித் தலைவர்களை நேர டியாக தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்ட மசோதா, கடந்த 30ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, வரும் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு மேயர், தலைவருக்கு தனியாக ஒரு வாக்கும், கவுன்சிலருக்கு தனியாக ஒரு வாக்கும் போட வேண்டும்.   
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாநில தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை சரிபார்த்து வைக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்ற அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு, வேலூர் மாநகராட்சியில் புதிய வார்டுகள் எல்லையை வரையறுக்கும் பணி நடக்கிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை  அதிகரிக்கிறது. இந்த எல்லை வரையறை பணி இன்னும் முடியவில்லை. அதன்பின், இதற்கான பரிந்துரைகளை மாநகராட்சி நிர்வாகங்கள் அரசுக்கு அனுப்பும்.
அது மட்டுமல்லாமல் எந்த வார்டு ஆண், பெண்ணுக்கு உரியது. எது எஸ்சி, எஸ்டி தொகுதிக்கான ஒதுக்கப்பட்ட வார்டுகள் என்பதை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கான அறிவிப்பை அரசு ஒரு வாரத்தில் வெளியிடும் என்று தெரி கிறது. அதன்பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தற்போது, சட்டப்பேரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இன்னும் 10 நாட்களில் தேர்தல் தேதி வெளியிட ஆயத்தமாகி வருகிறோம். 
இவ்வாறு தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக