AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 16 ஜூன், 2013

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு அதன் தலைவர் ஜே.எஸ். ரிபாயீ அவர்கள் தலைமையில் 15.06.2013 அன்று தஞ்சையில் நடைபெற்றது. மூத்த தலைவர்கள் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் ஸமது, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைத் தலைவர் குணங்குடி ஆர். எம். ஹனிபா, துணைப் பொதுச் செயலாளர் கோவை உமர் உட்பட 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்குக் கொண்டார்கள். இந்த செயற்குழுவில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. தமிழகத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வேண்டும்
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு 3.5 சதவீதம் என்பது முஸ்லிம் சமுதாயத்தின் பின்னடைந்த தன்மைக்குப் பொருத்தமற்றதாக உள்ளது. இந்த இடஒதுக்கீடு அளவு உயர்த்தப்பட்டால் மட்டுமே முஸ்லிம் சமுதாயம் பயனடையும் என்பதையும், 3.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி நடந்துள்ள கடந்தகால அரசுப் பணி நியமனங்களில் முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருப்பதையும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அதிமுக பொதுச் செயலாளரிடம் நம்மால் சுட்டிக் காட்டப்பட்டது.


நமது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்த அவர், சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகளில் திருச்சி, பரமக்குடி, ஜோலார்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல இடங்களில், அதிமுக ஆட்சி அமைத்தால் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு அளவு உயர்த்தித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக சட்டமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் பலமுறை நினைவூட்டியும் உரிய பதிலில்லை. எனவே, ஏனைய தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுவது போல, முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதியையும் நிறைவேற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

2. கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம்
கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம் 2009, திமுக அரசு முஸ்லிம்கள் மீது திணித்துவிட்ட மிகப்பெரிய நெருக்கடியாகும். இது அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்துடன் மோதும் வகையில் உள்ளது. திருமணங்களைத் தொன்றுதொட்டு, முறைப்படி ஆவணங்களில் பதிவு செய்து வருகின்ற முஸ்லிம் சமுதாயத்திற்கு இந்தச் சட்டம் சற்றும் அவசியமற்றது. திருமணத்தைப் பதிவு செய்வதற்காக பதிவு அலுவலகங்கள் அலைக்கழிப்பதும், பெரும் தொகையை லஞ்சமாகக் கேட்பதும் பரவலாக உள்ளது. முஸ்லிம் ஜமாஅத்துகள், காஜிகள் நடத்துகிற திருமணத்தின் சான்றிதழை சட்டப்பூர்வமான ஆவணமாகக் கொள்ளும் வகையில் இச்சட்டம் திருத்தப்பட வேண்டும்.

3. சிறைவாசிகள் விடுதலை
விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகளாக சிறையில் பத்தாண்டுகளைக் கழித்துள்ளவர்களை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். கடந்த காலங்களில் அரசு சிறைவாசிகளை விடுதலை செய்தபோது, முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டு, வஞ்சிக்கப்பட்டதற்கு, இந்த அரசாங்கம் நிவாரணம் செய்ய வேண்டும்.
கோவை சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி அபுதாகிர் எஸ்எம்இ என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் இருக்கிறார். இவருக்கு பரோல் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவருக்கு பரோல் அளிக்கப்படவில்லை. மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள கோவை அபூதாஹிரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

4. பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு
பெங்களூர் பாஜக அலுவலகத்தின் முன்பு நடந்த குண்டுவெடிப்பை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, அதற்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது. அதேநேரம், இந்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த தமுமுக கோவை மாவட்ட தொண்டர் அணிச் செயலாளர் கோவை ஹக்கீம் உள்ளிட்ட அப்பாவி முஸ்லிம்களை அராஜகமாக கர்நாடகக் காவல்துறை கைது செய்து சித்ரவதை செய்து வருவதையும், அதற்கு தமிழகக் காவல்துறை உடந்தையாக இருப்பதையும் இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்க தமிழக அரசு உடனடி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

5. ஒடுக்கப்படும் உருதுமொழி
தாய்மொழியைக் கற்கின்ற உரிமை ஒவ்வொரு மொழியினருக்கும் இயற்கையானதாகும். தமிழகத்தில் நீண்டகாலமாக, சிறுபான்மை மொழிகளுக்கு இருந்துவந்த பாதுகாப்பில், 2010ம் ஆண்டில் பல சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண்.316, உருதுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் உரிமையைப் பறிக்கிறது. எனவே, பள்ளிக் கல்வியில் உருது, அரபி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளைப் படிப்பதற்கு நீண்ட காலமாக இருந்துவந்த வாய்ப்பு மீண்டும் வழங்கப்படுவதோடு, அரபி, உருது பள்ளிகளின் ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

6. அரபித்துறை பேராசிரியர் பணியிடத்தை நிரப்புக
சென்னை நந்தனம் அரசினர் கலைக்கல்லூரியில் அரபித்துறை பேராசிரியர் பணியிடம் 2011ம் ஆண்டு முதல் காலியாக உள்ளது. அரசுக் கல்லூரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சமஸ்கிருதப் பாடத்திற்கான காலிப் பணியிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அரபி பேராசிரியருக்கான பணியிடம் விடுபட்டுள்ளது. அரசுக் கல்லூரியில் இருந்துவரும் ஒரே ஒரு அரபி பேராசிரியர் பணியிடத்தை அரசு நிரப்ப வேண்டும் என இச்செயற்குழு கோருகிறது.

7, சிறுபான்மை கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்புக
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் நீண்டக் காலமாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை பிறப்பித்து ஓராண்டிற்கு மேல் ஆகிய போதினும் இன்னும் பணீயடங்கள் நிரப்பபடவில்லை. உடனடியாக இப்பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு ஆவணச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

8. மாவீரர்கள் ஹைதர் அலி திப்பு சுல்தான் நூலகம்
மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல்லில் மணிமண்டபம் கட்டும் உத்தரவை பிறப்பித்ததற்காக தமிழக அரசுக்கு இச்செயற்குழு நன்றி தெரிவிக்கிறது. இதே வேளையில் அம்மணிமண்டபத்தில் தென் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்த மாவீரர்களின் வரலாற்றை சொல்லும் ஒலி ஒளி காட்சிக்கு ஏற்பாடுச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

9. ஜூலை 6 பேரணி
ஜூலை 6, 2013 அன்று தமுமுக நடத்த உள்ள கோட்டை நோக்கிய கோரிக்கைப் பேரணியில், சமுதாய மக்கள் பெருந்திரளாக, குடும்பத்துடன் பங்கேற்க கழக உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

10. ஆக்கிரமிப்பு வக்ஃப் சொத்துக்களை மீட்க நடவடிக்கை
தமிழகத்தில், ஆக்கிரமிப்பில் உள்ள ஏராளமான வக்ஃப் சொத்துக்களை மீட்டு, முஸ்லிம் சமுதாயம் பயனடையும் வகையில் அவற்றைப் பயன்படுத்திட, தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழக முதல்வர் இதுகுறித்து வழங்கியுள்ள தேர்தல் வாக்குறுதியையும் இச்செயற்குழு நினைவூட்டுகிறது.

11. அலிகர் பல்கலைக்கழக வளாகம் அமைக்க நடவடிக்கை
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தனது விரிவாக்க வளாகங்களை பல மாநிலங்களில் உருவாக்கி வருகின்றது. மாநில அரசு 300 ஏக்கர் நிலத்தை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு வழங்கினால் அப்பல்கலைக்கழகம் தனது விரிவாக்க வளாகத்தை அமைக்கின்றது. இந்த அடிப்படையில் கேரளாவில் மலப்புரம், மேற்கு வங்கத்தில் முர்சிதாபாத், பீகாரில் கிருஷ்ணகஞ்ச் ஆகிய ஊர்களில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று தமிழகத்திலும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகம் அமைவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

12. மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்
மத்திய அரசு நியமித்த நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மத மற்றும் மொழி வாரி சிறுபான்மையினருக்கான ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளை எவ்வித மாற்றமும் இன்றி உடனடியாக மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக