AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 8 ஜூன், 2013

அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை

பள்ளிகளில் வசூலிக்கப்படும் பல்வேறு கட்டணங்களால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு போட்டியாக பல்வேறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டண வசூல் நடக்கிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் கடந்த 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கோடையின் கொடிய தாக்கத்தால் 10ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகிறது. எனினும், பல்வேறு தனியார், மெட்ரிக் பள்ளிகளில் தொடர்ந்து 10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளுக்கு சிறப்பு கட்டணத்துடன் வகுப்புகள் நடந்து வருகிறது.
தற்போது அனைத்து தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலும் தீவிர மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. பெரும்பாலான பள்ளிகளில் சேர்க்கை முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மெட்ரிக் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சியில் சிறிது குறைவான மார்க் பெற்ற மாணவ, மாணவிகள் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்க அனுமதிக்கப்படாததால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வகுப்புக்கும் அட்மிஷனுக்கு தீவிர வசூல் வேட்டை நடந்து வருகிறது. இந்த வசூலுக்கு உரிய பில் தருவதில்லை. பல பள்ளிகளில் அறக்கட்டளை பெயரில் வசூல் நடக்கிறது.
புத்தகம், நோட்டு, சீருடை, பேக், கல்வி உபகரண பொருட்கள், வேன் கட்டணம், உணவு கட்டணம், பள்ளி வளர்ச்சி நிதி என அனைத்து வகைகளிலும் கட்டண கொள்ளை நடந்து வருகிறது.
மாவட்டத்தில் தற்போது தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு போட்டியாக பல்வேறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டண வசூல் நடக்கிறது. தற்போது பல பள்ளிகளில் சேர்க்கை விண்ணப்பத்திற்கு கூட ஏழை மாணவ, மாணவிகளிடம் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் வழங்குவது, வேலைவாய்ப்பு பதிவு, இலவச பஸ் பாஸ், கல்வி உதவி தொகை, அரசின் விலையில்லா பொருட்கள், தனியார் கைடுகள் என ஒவ்வொரு வகைகளிலும் அரசு பள்ளிகளிலும் முறைகேடாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வசூலித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவகங்களில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் அரசு பள்ளிகளில் கட்டண வசூல் தொடர் கதையாக நடக்கிறது.
மாவட்ட நிர்வாகமோ தங்களுக்கு எந்தவித புகாரும் வரவில்லை, பள்ளிகளில் கட்டண கொள்ளையை தடுக்க குழு அமைக்கப்படும் என அறிவித்து வழக்கமான பல்லவியை பாடி புத்தக திருவிழா, அரசு பொருட்காட்சி, குற்றாலம் சாரல் திருவிழா ஆலோசனை கூட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலையில் இதுவரை எந்தவித குழுவும் அமைக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையை தடுக்க மாணவ சமுதாயத்தினர் ஒன்றிணைந்து போராட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழ் மாநில முஸ்லீம் லீக் மாநில அமைப்பு செயலாளர் அப்துல் கபூர் கூறும் போது, "பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் முறைகேடாக அதிக கட்டணம் வசூல் செய்து வரும் நிலையில் நலிந்த மக்களின் குழந்தைகளை கவனிக்க அரசு தவறிவிட்டது. தொடர் வசூல் வேட்டையை தடுக்க அரசு உரிய கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக