AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 8 மே, 2013

புற்று நோயை தடுப்பதற்காக குட்கா, பான்மசாலா புகையிலைக்கு தடை: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, மே. 8-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல் போன்ற பல நோய்களை கண்டறியும் பரிசோதனை வசதிகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பல்வேறு வகையான வைரஸ் நோய்களைக் கண்டறியக் கூடிய செரோடைப்ஸ் சோதனைகளை ஒரே இடத்தில் பரிசோதிக்கும் வசதி தமிழ் நாட்டிலேயே சென்னையில் உள்ள அரசு கிங் இன்ஸ்டிட்யூட்டில் மட்டுமே உள்ளது. இதனால், அசாதாரண வைரஸ்களால் ஏற்படும் நோயினை கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஐந்து மருத்துவத் துறைகளைக் கொண்டது இந்திய மருத்துவம் ஆகும்.


இந்திய மருத்துவத்திற்கான மத்திய கவுன்சில் விதிகளின் படி, இந்திய மருத்துவத் துறையின் மாணவர்கள், நவீன அறிவியல் தொழில் நுட்பத்துடன், உயரிய தரத்தில் கல்வி பயில, இந்திய மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனித வளம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கு உள்கட்டமைப்பு மற்றும் தேவையான வசதிகள் செய்ய 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகாரச் சான்றிதழ் பெறும் முதல் பாரம்பரிய மருத்துவமனையாக சென்னை அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையினை உருவாக்கிடும் வகையில், இம்மருத்துவமனைக்கு மனித வளம் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருந்துகளின் தர நிர்ணயம், புதிய மருந்துகளுக்கான ஆய்வு முதலான பல்வேறு மருத்துவ ஆய்வுகளை இந்திய மருத்துவ கல்லூரிகளும், மருத்துவமனைகளும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனை இக்கல்லூரி ஆசிரியர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் மேற்கொள்வதன் மூலம், துறையின் மாண்பும், பயனும் சர்வதேச மருத்துவ ஆய்வு நூல்களில் வெளியாவதுடன், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன் சர்வதேச அளவிற்குச் சென்றடையும். எனவே இந்திய முறை மருத்துவக் கல்லூரிகளுக்கென, தனி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு ஒன்று 12 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய், புற்று நோய், கழுத்து முதுகுத்தண்டு நோய்களுக்கான மேலாண்மையிலும் தடுப்பிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையின் சிகிச்சைகளான நீர் சிகிச்சை, உணவு சிகிச்சை, மண் சிகிச்சை, அக்யூபங்சர் இவற்றின் பங்கு சிறப்பாக உள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், நவீன மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வழங்கும் வாழ்வியல் மருத்துவமனைகள், 9 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக அரசு இந்திய மருத்துவத் துறையில் பயின்று வரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கென பல புத்தகங்களை வெளியிடுகிறது. இது தவிர இயக்குனர் அகத்தில் இருந்து, இத்துறையின் வளர்ச்சி மற்றும் ஆய்வுகளை மக்களிடையேயும் மருத்துவர்களிடமும் அவ்வப்போது எடுத்துச் செல்ல தனியாக இதழ் ஒன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விரு பணிகளும் செவ்வனே நடைபெற இந்திய மருத்துவத் துறை இயக்குனர் அகத்தில் நூல்கள் பதிப்பிற்கென, திரட்டு நிதியாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆலத்தூரில் இயங்கி வரும் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம், சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி முறை மருந்துகளை உற்பத்தி செய்யும் அரசுக்குச் சொந்தமான ஒரே நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் உபகரணங்களை மேம்படுத்தும் வகையில், 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இந்திய முறை மருத்துவத்திற்கான மத்திய கவுன்சிலின் வழிகாட்டுதல்படி, தமிழக அரசின் யுனானி மற்றும் ஆயுர்வேத கல்லூரிகளில், மாணவர்களைப் பயிற்றுவிக்க ஒவ்வொரு துறையிலும் பணியாற்ற, பட்ட மேற்படிப்பு படித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே, பணியில் இருக்கும் யுனானி மற்றும் ஆயுர்வேத பட்டதாரிகளை அரசின் செலவில் வேறு மாநிலங்களுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயின்று வர வழிவகை செய்யப்படும்.

இந்திய மருத்துவத் துறையில் போலிப் பதிவுச் சான்றிதழ் நிலவுவதை களையும் வகையில், 15 லட்சம் ரூபாய் செலவில், தமிழக அரசின் சித்த மருத்துவக் கவுன்சில், ஓமியோபதி கவுன்சில், இந்திய மருத்துவப் பதிவு கவுன்சில்களில் இனி யு.ஆர்.எல். மற்றும் 2டி பார் கோடு தகவல் தொழில் நுட்பங்களைக் கொண்டு பதிவுச் சான்றிதழ்கள் வழங்கும் வசதி அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இந்திய மருத்துவ முறை வாயிலாக தாய் சேய் நல மருந்துகள் 1 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ரத்த சோகை நோயை தடுக்கவும், குணப்படுத்தவும் பாரம்பரிய மற்றும் இல்லங்களிலேயே கிடைக்கக்கூடிய கருவேப்பிலை பொடியின் பயன் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள 18 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஒரு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 43 மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த புள்ளி விவரங்கள் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கிடைக்கும் வகையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 22 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் கணினி வழி மருத்துவ தகவல் மேலாண்மைத் திட்டம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பணி முழுவதும் கணினி மூலம் செயல்படுத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளும் சென்னையில் உள்ள ஒரு மத்திய சர்வருடன் இணைக்கப்படும்.

பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பை வலுப்படுத்தும் வகையில், பொள்ளாச்சி, உசிலம்பட்டி, மன்னார்குடி, கோவில்பட்டி, தென்காசி மற்றும் மேட்டூர் ஆகிய 6 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும், பழனி, தாராபுரம், காரைக்குடி, கோபிச்செட்டிபாளையம், குளித்தலை, கூடலூர், கம்பம், திருச்செங்கோடு, அறந்தாங்கி, பரமக்குடி, மற்றும் செய்யார் ஆகிய 11 அரசு மருத்துவமனைகளிலும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு குழந்தைகள் நல மருத்துவர்களும் 10 செவிலியர்களும் நியமிக்கப்படுவார்கள். இது தவிர, ஏற்கெனவே செயல்பட்டு வரும் 44 பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக ஒரு செவிலியர் நியமிக்கப்படுவார். இந்த மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும்.

மேலும் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் வண்ணாரப்பேட்டை ராஜா சர் ராமசாமி முதலியார் மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் கூடுதலாக தலா 10 செவிலியர்கள் நியமிக்கப்பட்டு, இந்த மையங்கள் வலுப்படுத்தப்படும்.

புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் 1954ன் கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை 19.11.2001 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எனது அரசு தடை செய்து, அறிவிக்கை வெளியிட்டது. ஆனால் தமிழ்நாடு மற்றும் இதர சில மாநிலங்களின் இத்தகைய அறிவிக்கைகள், குறித்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தில், இதனை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக கூறி, 2.8.2004 அன்று அறிவிக்கையை ரத்து செய்தது.

தற்பொழுது, உணவு கலப்படத் தடைச் சட்டத்திற்கு பதிலாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் என்ற புதிய சட்டத்தை 2006-ல் மத்திய அரசு இயற்றி உள்ளது. இந்த சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் 5.8.2011 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தன.

தமிழக அரசும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த இதற்கென 'தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம்’ என்ற தனித்துறையை ஏற்படுத்தியுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் விதிமுறைகளின்கீழ் எந்த ஒரு உணவிலும் சுகாதாரத்தைப் பாதிக்கும் பொருள் இருக்கக்கூடாது என்றும் புகையிலை மற்றும் நிக்கோட்டின் ஆகியவற்றை உணவுப் பொருளில் சேர்க்கக்கூடாது என்றும் விதிமுறை உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள ஒரு வழக்கு விசாரணையின் போது குட்கா மற்றும் பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதை பற்றி மாநில அரசுகளால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய மருத்துவ முறையை ஊக்குவிக்கும் வண்ணமும், அரசு மருத்துவமனைகளில் மேம்பட்ட சேவைகள் அளிக்கும் வண்ணமும், என்னால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஓர் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழிவகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கணினி வழி மருத்துவ தகவல் மேலாண்மைத் திட்டம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பணி முழுவதும் கணினி மூலம் செயல்படுத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளும் சென்னையில் உள்ள ஒரு மத்திய சர்வருடன் இணைக்கப்படும்.

இதன் மூலம், நோயாளிகளுக்கு கிடைக்கும் பயன்கள் மட்டுமல்லாது, நோய் குறித்து சேகரிக்கப்படும் தகவல்கள், புள்ளி விவரங்களை எளிதில் ஆராயவும், அதன் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவும், தமிழகத்தில் நோய் தாக்க விவரங்களை அறிந்து கொள்ளவும், அதற்குத் தேவையான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் இயலும்.

எந்த ஒரு துறையும் திறம்பட செயல்பட அடித்தளமாக விளங்குவது பயிற்சி என்பதைக் கருத்தில் கொண்டு, சுகாதாரத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதற்காக சுகாதார பயிற்சி மற்றும் மருத்துவமனை நிர்வாக பயிற்சி நிலையம் ஒன்று 10 கோடி ரூபாய் செலவில் சென்னையில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலையத்தில் மருத்துவர்களுக்கான மருத்துவமனை நிர்வாக பயிற்சி, செவிலியர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான நிர்வாக பயிற்சி, மகப்பேறு மற்றும் சிசு நலம் குறித்த பயிற்சி, மருத்துவக் கல்வி கற்பித்தல் குறித்த பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். சுகாதாரத் திட்டம் குறித்த ஆய்வுகளும் இந்த நிலையத்தில் மேற்கொள்ளப்படும்.

அகமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மைக் குழு, மும்பையில் உள்ள டாட்டா சமூக அறிவியல் நிறுவனம், புது தில்லியில் உள்ள தேசிய மருத்துவம் மற்றும் குடும்ப நல நிலையம் மற்றும் பொது சுகாதார பயிற்சி நிலையம், தேசிய சுகாதார தகவல் நிலையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இப்பயிற்சி நிலையம் செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத மாவட்டங்களில் தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உயர் சிகிச்சை மருத்துவமனைகளாக செயல்பட்டு வருகின்றன. சில நேரங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இல்லாத மாவட்டங்களில் உள்ள நோயாளிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ள மாவட்டங்களுக்குமேல் சிகிச்சைக்காக செல்ல வேண்டியுள்ளது.

எனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இல்லாத கடலூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், கரூர், பெரம்பலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக 18 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயந்திர கதியில் இயங்கும் தற்போதுள்ள வாழ்வியல் சூழலில், தொற்று நோய்களுக்கு மேலாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், மன அழுத்தத்தினால் ஏற்படும் மற்ற விளைவுகள் மட்டுமல்லாமல் புற்று நோய் போன்ற தொற்றா வகை நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தொற்றா வகை நோய்த் தடுப்பு பணிகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2013-14 ம் ஆண்டு தொற்றா வகை நோய்த் தடுப்பு சிறப்பு ஆண்டாக அனுசரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கென சுகாதாரத் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும், கர்ப்பப் பை புற்று நோய், மார்பகப் புற்று நோய், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றை தடுப்பதற்கும், அவற்றிற்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கும் வழிவகை செய்யப்படும். இந்த நோய்களைத் தடுப்பதிலும், மேலாண்மை செய்வதிலும், பாரம்பரிய மருத்துவத்தின் பங்கு சிறப்பானது என்பதால், இதற்கென 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்திய அளவில் புகழ் பெற்ற அடையாறு புற்று நோய் மையத்திற்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் மானியத்தை, எனது தலைமையிலான அரசு கடந்த ஆண்டு 1 கோடியே 32 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடியே 75 லட்சம் ரூபாயாக உயர்த்தியது. இந்த மானியத் தொகை இந்த ஆண்டு 2 கோடியே 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதையும், வரும் ஆண்டுகளில் இந்த மானியம் ஆண்டு தோறும் 15 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நோயினை குணப்படுத்த முடியாமல் அவதியுறும் நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கும், வயோதிகம் காரணமாக படுக்கையில் அவதிப்படும் நோயாளிகளுக்கும், வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் திட்டத்தை தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஒரு ஒன்றியம் வீதம் எனது அரசு சோதனை அடிப்படையில் 2011-12 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் பயனைக் கருத்தில் கொண்டு சமூகம் சார்ந்த வலி நிவாரணம் மற்றும் உடல் நல கவனிப்பை அனைத்து மாவட்டங்களிலும், 16 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய் சேய் நலனைக் காக்கும் வகையில், மதுரை மற்றும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள தாய் சேய் நலப் பிரிவுகள் 50 கோடி ரூபாய் செலவில் மேன்மைமிகு மையங்களாக மேம்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் கட்டடங்கள் கட்டப்படுவதோடு மட்டுமல்லாமல் நவீன மருத்துவ உபகரணங்களும் வாங்கப்படும்.

பேறு கால அவசர சிகிச்சை மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 24 மணி நேரமும் செயல்படும் சீமாங்க் திட்டம் 125 அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 125 அரசு மருத்துவமனைகளில் முதல் கட்டமாக கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவில் பயன்படுத்தக் கூடிய 55 மருத்துவமனைகளில் தனித் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 12 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல், சென்னை மருத்துவக் கல்லூரியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் 16 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மகப்பேறு பிரிவுகளுக்கு தலா இரண்டு மருத்துவர்கள் வீதம் 36 மருத்துவர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்படுவார்கள். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு 1 கோடியே 64 லட்சம் ரூபாய் தொடர் செலவு அரசுக்கு ஏற்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கூடுதல் மருத்துவர் என்ற அடிப்படையில் 163 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 163 மருத்துவ அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். தற்போது, இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஒரு கூடுதல் மருத்துவ அலுவலர் நியமனம் செய்யப்படுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக