AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 13 மே, 2013

இணையதளம் மூலம் சொத்து விவரங்களை நகல் எடுக்கும் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, மே 13-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பர வரிச் சட்டத்தின் கீழ், தற்போது ஓட்டல்களில் வாடகைக்கு விடப்படும் அறைகளின் கட்டணம் 199 ரூபாய் வரையில் இருந்தால் வரி விலக்கும், 200 ரூபாய் முதல் 499 ரூபாய் வரையில் இருந்தால் 5 விழுக்காடு வரியும், 500 ரூபாய் முதல் 999 ரூபாய் வரையில் இருந்தால் 10 விழுக்காடு வரியும், 1000 ரூபாய் மற்றும் அதற்கு மேலிருந்தால் 12.5 விழுக்காடு வரியும் ஆடம்பர வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட ஆடம்பர வரி விலக்கிற்கான வாடகை உச்சவரம்பு 199 ரூபாய் என்பதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன. இந்தக் கோரிக்கையினை ஏற்று, ஆடம்பர வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு 199 ரூபாயிலிருந்து 499 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் 500 ரூபாய்க்கு கீழ் வாடகை உள்ள அறைகளை வாடகைக்கு எடுக்கும் சாதாரண, நடுத்தர மக்கள் பயன் பெறுவர்.


அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் வணிக வரித் துறை அலுவலகங்கள் பெரும்பாலும் வாடகைக் கட்டடங்களிலேயே இயங்கி வருவதால் பொது மக்களுக்கும், பணியாளர்களுக்கும் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, 2011-2012 ஆம் ஆண்டில் 34 அலுவலகங்களுக்கும், 2012-2013 ஆம் ஆண்டில் 16 அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டில் வாள் வச்ச கோஷ்டம், தேவகோட்டை, சிதம்பரம், ஆற்காடு, கோயம்புத்தூர், வேலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 7 இடங்களில் இயங்கி வரும் 9 வணிகவரி அலுவலகங்களுக்கு 10 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டடங்களில் 'தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012'ன் நோக்கங்களின்படி சூரிய சக்தியினைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மேற்கூரைகள் பொருத்தப்படும்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் ஆவணங்கள் நிரந்தரமான பதிவுறுக்கள் என்பதால், அவற்றை தீ விபத்திலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.  எனவே, அனைத்து அலுவலகங்களுக்கும் தீ விபத்து தடுப்பு உபகரணங்களான தீ தடுப்பான்கள், தீ தடுப்பு வாளிகள், மின் இணைப்பு முறிப்பான்கள், அலுமினிய ஏணிகள் ஆகியவை வழங்கப்படும் என்பதையும், இவற்றைப் பயன்படுத்த பணியாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும் என்பதையும் இதற்காக 4 கோடியே 78 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிவுத் துறையை கணினிமயம் ஆக்கப்படுவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அலுவலக நகல்கள் காகித வடிவில் உள்ளன. இந்தப் பதிவுறுக்கள் துறையின் பணியாளர்களால் அடிக்கடி கையாளப்படுவதால் காகிதத்தினால் ஆன இந்தப் பதிவுறுக்கள் சிதிலமடைந்தும், எளிதில் கிழிந்து விடக் கூடியதாகவும் ஆகி விடுகின்றன. இவற்றை எவ்வித சேதமும் அடையாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை நுண்ணிய படம் பிடிக்கவும்; மற்றும் அவற்றை மின்னணு மயம் ஆக்கவும்; நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும்; காகித வடிவில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவுறுக்கள் 140 கோடி ரூபாய் செலவில் நுண்ணிய படம் பிடித்து மின்னணு மயம் ஆக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்களிடமிருந்து வில்லங்கச் சான்றுகள் கோரி வரப்பெறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும், சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வேலைப் பளுவை குறைக்கும் நோக்கிலும், பொதுமக்கள் தாங்களே இணைய தளம் மூலமாக சொத்து தொடர்பான வில்லங்கங்களைப் பார்க்கவும், அதனை நகல் எடுத்துக் கொள்ளவும் வசதி செய்து கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் அறிய விரும்பும் சொத்து தொடர்பான வில்லங்கங்களை உடனுக்குடன் எந்த நேரமும் தெரிந்து கொள்ள முடிவதுடன் தங்களது சொத்தில் முறைகேடான ஆவணப் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் அறிய இயலும்.

தமிழ்நாடு முழுவதும் 50 பதிவு மாவட்டங்கள் இருப்பினும், திருவள்ளூர், தேனி, பெரம்பலூர், திருவாரூர் ஆகிய வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் இல்லாத சூழ்நிலை தற்போது நிலவுகிறது. இந்தக் குறையைகளையும் வகையில், ஒவ்வொரு வருவாய் மாவட்டத் தலைநகரத்திலும் ஒரு மாவட்டப் பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பதிவு மாவட்டங்களின் ஆட்சி எல்லைகள் வருவாய் மாவட்டத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும். இந்த மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில், நிர்வாகப் பணிகளைக் கவனிக்கும் மாவட்டப் பதிவாளர் பதவி, உதவி பதிவுத் துறைத் தலைவர் நிலைக்கு உயர்த்தப்படும். தற்போதுள்ள 45 தணிக்கை மாவட்டப் பதிவாளர் பணியிடங்கள் 85 ஆக உயர்த்தப்படும்.

சீட்டு, சங்கம், திருமணப் பதிவு தொடர்பான பணிகளைக் கவனிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்டப் பதிவாளர் நியமிக்கப்படுவார். இதனால் நிர்வாகம் சீராவதுடன், தணிக்கைப் பணி மற்றும் சீட்டு, சங்கம், திருமணப் பதிவு தொடர்பான பணி செம்மைப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்கள் கால விரயம் இன்றி ஆவணப் பதிவினை மேற்கொள்ளும் பொருட்டு, பொதுமக்கள் இணைய தளம் மூலம் சார்பதிவாளருடன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆவணப் பதிவு செய்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆவணம் பதிவு செய்வதற்கான குறிப்பிட்ட நேரத்தை பொதுமக்கள் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து கொண்டு, அந்த நேரத்தில் சார் பதிவாளர் அலுவலகம் சென்று, தங்களது ஆவணப் பதிவு தொடர்பான பணிகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.

வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் பதிவுத் துறை அலுவலகங்களில் பதிவுத் துறை ஆவணங்களை பராமரிப்பதற்கும், பணியாளர்கள் முழு அளவில் பணியாற்றுவதற்கும் போதிய இட வசதி இல்லாததைக் கருத்தில் கொண்டும், சிறிய இடங்களுக்கு அதிக அளவு வாடகை தர வேண்டிய நிலை உள்ளதை கருத்தில் கொண்டும், பதிவுத் துறையில் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்திற்கும் 5 ஆண்டு காலத்திற்குள் சொந்தக் கட்டடங்கள் கட்ட நான் ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தேன்.

இதன் அடிப்படையில், 2011-12ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 26 கோடி ரூபாய் செலவில் 52 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டவும், 2012-2013 ஆம் நிதியாண்டில் 48 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 17 இடங்களில் 29 சார் பதிவாளர் அலுவலகங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகங்கள் மற்றும் தனித்தனியே 48 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டடம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திண்டுக்கல், உதகமண்டலம், கோயம்பேடு மற்றும் செய்யார் ஆகிய நான்கு இடங்களில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகங்களும், 35 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு தனித்தனியாக புதிய கட்டடங்களும் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக