AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 9 மே, 2013

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா, அபினேஷ் மாநிலத்திலேயே முதலிடம்

சென்னை: பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஜெயசூர்யா(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), அபினேஷ்(கிரீன் பார்க் பள்ளி) ஆகியோர் 1189/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றனர். 1188 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாணவன் பழனிராஜ்(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), ஓசூர் மாணவி அகல்யா(விஜய் வித்யாலயா பள்ளி) ஆகியோர் மாநிலத்திலேயே 2வது இடத்தை பிடித்தனர். 1187/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே 9 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர். மாணவிகள் ராஜேஸ்வரி(மதுரை), கலைவாணி(நாமக்கல்), கண்மணி(நாமக்கல்), மனோதினி(நாமக்கல்), ரவீனா(கிருஷ்ணகிரி), நிவேதிதா(செங்கல்பட்டு), பூஜா(பொன்னேரி) ஆகியோரும், மாணவர்கள் விஷ்ணுவர்த்தன்(நாமக்கல்), முத்து மணிகண்டன்(திருவள்ளூர்) ஆகியோரும் மாநிலத்திலேயே 3வது இடத்தை பிடித்துள்ளனர்.


தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி முடிந்தது. 5769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் எழுதினர். இந்த ஆண்டு தேர்வில் மொத்தம் 88.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 87.4 %மும், மாணவிகள் 91.4%மும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் மட்டும் 36 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 

வேதியியல் பாடத்தில் 1499 பேர் 200/200க்கு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 2352 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 682 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம் மற்றும் விலங்கியல் பாடத்தில் யாரும் 200/200 மதிப்பெண் பெறவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200/200 மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு என்று தெரியவந்துள்ளது.

தமிழ் முதலிடம்:

பிளஸ் 2 தேர்வில் 199 மதிப்பெண்கள் பெற்று மாணவி சிந்துஜா தமிழ் பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி சிந்துஜா கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேசன் பள்ளியை சேர்ந்தவர் ஆவார். 

ஆங்கிலம் முதலிடம்:

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ரங்கா ஆங்கில பாடத்தில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். மாணவர் ரங்கா ஸ்ரீஜெயன் மெட்ரிக் பள்ளி மாணவர் ஆவார். 

புதுவையில் முதலிடம்:

புதுச்சேரி மாநிலத்தில் மாணவர் வேணுசீனிவாசன் முதலிடம் பிடித்தார். பெட்டிட் செமினார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த வேணு 1189 மதிப்பெண்கள் பெற்று புதுவை மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள முகவரிகள்:

http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://deg3.tn.nic.in

செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள விரும்புவோர் 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD,  என்ற வடிவில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக