AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 17 ஏப்ரல், 2013

பயங்கர நிலநடுக்கம் ஈரான், பாகிஸ்தானில் 73 பேர் பலி

இஸ்லாமாபாத் : ஈரான், பாகிஸ்தான் எல்லையில் நேற்று ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் இரு நாடுகளிலும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. இதில், 73 பேர் பலியானார்கள். வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஈரான், பாகிஸ்தானில் நேற்று மாலை இந்திய நேரப்படி மாலை 4.14 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. 15 விநாடிகள் பூமி குலுங்கியதில், அந்த பகுதியில் இருந்த பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. 


வட மேற்கு ஈரானில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து 48 கி.மீ தூரத்தில் உள்ள ஷரவான் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக பதிவானது. நில நடுக்க மையத்தில் இருந்த ஷரவான் பகுதியில் மக்கள் தொகை மிகவும் குறைவு. அங்கு சிறிய கிராமங்கள் மட்டுமே இருந்தது. இதனால் ஈரானில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றாலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 52 பேர் பலியானதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாகிஸ்தானில் நில நடுக்கத்துக்கு 21 பேர் பலியானார்கள். பலுசிஸ்தான் மாகாணத்தில் 1,000 வீடுகள் சேதம் அடைந்தது. அங்குள்ள கரண் மாவட்டத்தில் வீடுகள் தரைமட்டமானதில் 2 பெண்கள், 3 குழந்தைகள் பலியானார்கள். பஞ்குர் மாவட்டத்தில் வீடுகள் இடிந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் இந்த நில நடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டது.

 கராச்சி, ஐதராபாத், குவெட்டா நகரங்களும் குலுங்கின. கராச்சியில் கட்டிடம் ஒன்று இடிந்ததில் பலருக்கு காயம் ஏற்பட்டது. அடுக்குமாடி கட்டிடங்களில் நில நடுக்கம் அதிகமாக உணரப்பட்டது. அதில், அலுவலகங்கள், வீடுகளில் இருந்தவர்கள் நில நடுக்கம் ஏற்பட்டதும் பீதியில் தரைதளத்துக்கு ஓடிவந்தனர். சாலைகளில் தஞ்சம் புகுந்த அவர்கள் மத்தியில் பதற்றம் தணிய பல மணிநேரம் ஆனது. கராச்சியில் உள்ள ஜியோ தொலைக்காட்சியில் பணியாற்றும் அப்பாஸ் என்பவர் கூறுகையில், ÔÔநில நடுக்கம் ஏற்பட்டதும், கட்டிடம் 3 முறை ஆடியது. இதனால் பயந்து போய் நாங்கள் வெளியே வந்துவிட்டோம்ÕÕ என்றார். 

வட இந்தியா குலுங்கியது

ஈரான் நிலநடுக்கத்தின் அதிர்வுகள், வட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது. டெல்லி, உ.பி, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. பெரிய கட்டிடங்களும் திடீரென அதிர்ந்ததால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.  டெல்லி, குர்கான், சண்டிகர், அகமதாபாத், புஜ் உள்ளிட்ட பல நகரங்களில் நில அதிர்வு காரணமாக மக்களிடையே சிறிது நேரம் பீதி ஏற்பட்டது.

நில நடுக்கம் காரணமாக இந்தியாவில் உயிர், பொருள் சேதம் ஏற்படவில்லை. ஈரான், பாகிஸ்தான் எல்லையை மையமாக கொண்டு நில நடுக்கம் ஏற்பட்டதால் இந்தியாவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்தது. ஐக்கிய அரபு எமிரேட், சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. 

அசாமில் சிறுமி பலி

கவுகாத்தி: அசாமில் நேற்று 2 முறை ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிறுமி உயிரிழந்தாள். வட கிழக்கு மாநிலங்களில் நேற்று 2 முறை நில நடுக்கம் ஏற்பட்டது. முதலில் காலை 6.53 மணிக்கும், அடுத்தாக மதியம் 2.04 மணிக்கு பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. காலையில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.6 புள்ளியாக பதிவானது. மதியம் ஏற்பட்ட நில நடுக்கம் 5 புள்ளியாக பதிவானது. 

இந்த இரு நில நடுக்கங்களும் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டது. காலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அசாமின் பார்பெடா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் ஆற்றங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமி ஜெகிருல் நெசா பலியானாள். மற்றபடி பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் நேற்று காலை 8.36 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக