AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம்: 7 காட்சிகளை நீக்க சம்மதம்; வெளியீடு குறித்து உடனடி அறிவிப்பு: கமல்


சென்னை :”விஸ்வரூபம்’ பட விவகாரம் தொடர்பாக, அரசு தரப்பு, முஸ்லிம் அமைப்பினர், கமல் தரப்பினர் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இதில் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் பட விவகாரத்தில், “முஸ்லிம் அமைப்பினருடன், கமல் பேசி சமரச ஒப்பந்தம் செய்து கொண்டால், படத்தை வெளியிட, அரசு ஒத்துழைக்கும்’ என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து, நேற்று முன் தினம், முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு நடத்த, கமல் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு, கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்பினர் என, முத்தரப்பும் ஒரே நேரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்று, முஸ்லிம் அமைப்புகள் சார்பில், ஒரு மனதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, 12:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிர்வாகி சந்திரஹாசன், டைரக்டர் அமீர், முஸ்லிம் அமைப்புகள் சார்பில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹனீபா, சிக்கந்தர் ஆகியோர், உள்துறை செயலர் ராஜகோபாலை சந்தித்து பேசினர்.
அப்போது, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்தும், ஆலோசனையை எங்கே நடத்துவது என்பது குறித்தும், உள்துறை செயலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து பேசினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாலையில் கூட்டம் நடக்கவில்லை.


இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் துவங்கிய பேச்சுவார்த்தை, மாலை 6.30 மணியளவில் நிறைவு பெற்றது. இதில், உள்துறை செயலாளர், நடிகர் கமல் மற்றும் முஸ்லீம் தரப்பினர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில், சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய 7 காட்சிகளில் ஒலியை நீக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட தங்களுக்கு சம்மதம் என முஸ்லிம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் படத்திற்கு எதிரான அனைத்து போராட்டங்களும் வாபஸ் பெறப்படும். கமலுக்கும் தங்களுக்கும்இடையே தனிப்பட்ட விரோதம் இல்லை என முஸ்லிம் பிரதிநிதிகள் கூறினர். இதனிடையே, விஸ்வரூபம் படத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.இதனையடுத்து விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் தீர்ந்தது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்,இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த முதல்வருக்கும். பொறுமையாக கருத்துக்களை கேட்ட உள்துறை செயலாளருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த கூட்டத்தில் இரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். சர்ச்சைக்குரிய 7 காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். மத்திய தணிக்கை துறை அனுமதி பெற்ற பின்னர் அறிவிக்கப்படும். எங்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்படும். தடை உத்தரவும் வாபஸ் பெறப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்து உடனடியாக அறிவிக்கப்படும் என கூறினார்.

மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா கூறுகையில், இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்‌ளோம். விஸ்வரூபம் படத்திற்கு எதிரான அனைத்து போராட்டமும் வாபஸ் பெறப்படும் என கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக