AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 12 ஜனவரி, 2013

தடையை உடைத்து தொடங்கியது "பீஸ்' கண்காட்சி


கடந்த பலமுறை சென்னையில் நடைபெற்ற பீஸ் இஸ்லாமியக் கண்காட்சி(Peace Islamic Exhibition) இவ்வாண்டும் சென்னையில் நடைபெற திட்டமிட்டிருந்தது. அரசியல் சாயமின்றியும், சார்புமின்றியும் நடைபெறும் இக்கண்காட்சி முன்பு சென்னையில் நடைபெற்ற போதெல்லாம் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமூக மக்களும் பேராதரவு அளித்தனர்.
இந்நிலையில், இவ்வருடம் இதற்கான முயற்சிகளை ஏற்பாட்டுக் குழுவினர் செய்தபோது, திட்டமிட்டே சிலர் இடையூறுகளை செய்தனர். சமுதாய துரோகிகள் சிலர், இந்துத்துவ தீவிர குழுவினர் சிலர் மட்டுமின்றி உளவுத்துறையும் இதில் தீவிர கவனமெடுத்து நிகழ்ச்சியைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர். நேரடியாகவும், மறைமுகமாகவும் தொந்தரவுகள் தொடர்ந்தன.
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஹாரூண் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் இடத்தில் (உத்தரண்டி) நடத்தவும் கூட உளவுத்துறையினர் அனுமதிக்க மறுத்தனர்.
இதைக் கண்டித்து தமுமுக மூத்த தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், "இது அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல்' என கண்டன அறிக்கையை வெளியிட்டார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர், பெரம்பூர் பின்னி மில் இடம், கோயம்பேடு என பல இடங்களை மாற்றியும் கூட உளவுத்துறையினர் நெருக்கடி தொடர்ந்தது. நடத்தவே கூடாது என "அவர்கள்' முயற்சிகளைத் தொடர, ஏற்பாட்டுக் குழுவினர் நீதிமன்றத்திற்குச் சென்றனர்.
இதனிடையே நேற்று (வியாழக்கிழமை) தமுமுகவின் நிர்வாகக்குழு நடந்தது. அதில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, காவல்துறை - உளவுத்துறையின் இஸ்லாமிய விரோதச் செயலைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சென்னை எழும்பூரில் உள்ள மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இச்செய்தி மதியம் காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. பதறிப்போன அதிகார வர்க்கம், நீதிமன்றத்தில் தங்களது எதிர்ப்பைத் தணிக்கும் விதத்தில் செயல்பட்டது. நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு நியாயமான பதிலைத் தெரிவிக்க முடியாமல் திணற; ஒருவழியாக நீதிமன்றம் தடை போட மறுத்துவிட்டது.
சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களுக்கு விசா மறுப்பதில் தொடங்கி அனைத்திலும் விசுவ ஹிந்து பரிஷத்தின் கிளை நிறுவனம் போல செயல்படும் உளவுத்துறை, மூக்குடைபட்டு நிற்கிறது.
இன்று மாலை பெரும் எழுச்சியோடு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை உத்தண்டியில்  (விஜிபிக்கு அடுத்தபடியாக பூங்கா கல்லூரி அருகில் நடைபெறும் நிகழ்வில் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ, மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஜனவரி 20 வரை காலை 11 மணி தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் அறிவியல் கண்காட்சி, மார்க்க உரைகள், திருமணத் தகவல், சிறுவர் விளையாட்டு, பெண்கள் கண்காட்சி, உணவு பஜார், ஹலால் பொருள் கண்காட்சி, இன்னபிற பன்முக அம்சங்களோடு இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
பல்வேறு சமூக மக்களும் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக