AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 1 ஜனவரி, 2013

கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது


கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவு  (செவ்வாய்க்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.
கலெக்டர் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மீறி பயன்படுத்தினால் ஜனவரி மாதம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அப்போதைய மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ அறிவித்து இருந்தார். இதற்கிடையில் அவர் திடீரென வணிகத்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
இதையடுத்து புதிய கலெக்டராக கிர்லோஷ்குமார் பதவி ஏற்றார். இதையடுத்து அந்த திட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் அந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக தடை செய்வது தொடர்பாக 683 கிராம ஊராட்சிகளில் கூட்டங்களும், 16 பேரூராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகளில் மன்ற கூட்டம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில், எந்த ஒரு நபரும், விற்பனையாளர்,பெட்டிக்கடைக்காரர், சில்லரை வணிகர், மொத்த விற்பனையாளர் மற்றும் அனைத்து வர்த்தகர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்பட உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்களை சேகரிப்பதற்காகவோ, சுமப்பதற்காகவோ, வழங்குவதற்காகவோ அல்லது பொருட்களை கட்டுவதற்காகவோ பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது.
யாரும் பிளாஸ்டிக் கேரி பைகளை தயாரிக்கவோ, இறக்குமதி செய்யவோ, இருப்பில் வைப்பதோ, விற்பனை செய்வதோ அல்லது எடுத்து செல்லவோ தடை விதிக்கப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர், குடிநீர், பாக்கெட்டுகள், அன்பளிப்பு அலங்கார உறைகள், சுவர் அல்லது பிளாஸ்டிக் சீட் அனைத்தும் பயன்படுத்த தடை செய்யப்படுகிறது.
அபராதம்
அதேபோல் அனைத்து விதமான நீர்நிலைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் எந்த விதமான கழிவுகளையும் கொட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து,மக்கும் குப்பைகளை வீட்டிலோ அல்லது தங்கள் வளாகத்திலோ உரமாக்கப்பட வேண்டும். மக்காத குப்பைகளை மறு சுழற்சிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் பொறுப்பற்ற முறையில் குப்பைகளை பொது இடங்களிலோ, சாலையோரங்களிலோ கொட்டுவதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இதை மீறி செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும். அதாவது பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை மீறுபவர்களுக்கு மொத்த விற்பனையாளருக்கு ரூ.10 ஆயிரம், சில்லரை வியாபாரிகளுக்கு ரூ.1000, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.200 அபராதம், உபயோகிப்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
இன்று முதல் அமுல்
பொறுப்பற்ற முறையில் குப்பைகளை கொட்டுவோர்களுக்கு நீர் நிலைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் மீது குப்பைகள் கொட்டினால் முதல் முறை ரூ.1000, 2–வது முறை ரூ.10 ஆயிரம் அபராதமும், பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒப்படைக்காத நிறுவனங்கள் ரூ.200 அபராதம், தனிநபர், வீடுகள் ரூ.100 அபராதமும், பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு இன்று (1–ந் தேதி) முதல் அமுல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக