AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக கிர்லோஷ் குமார் பதவி ஏற்பு


கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக நேற்று பதவி ஏற்ற ஆர்.கிர்லோஷ்குமார், ‘பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்க்க முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன்‘ என உறுதியளித்தார்..
புதிய கலெக்டர்
கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ராஜேந்திரரத்னூ திடீரென மாற்றப்பட்டு வணிகவரித்துறை இணைக்கமிஷனராகவும், அப்பதவியில் இருந்த ஆர்.கிர்லோஷ்குமார்(வயது36) கடலூர் மாவட்ட கலெக்டராகவும் மாற்றப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக ஆர்.கிர்லோஷ்குமார் பதவி ஏற்கும் நிகழ்ச்சி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் 12–30 மணிக்கு நடந்தது. அங்கு புதிய கலெக்டராக ஆர்.கிர்லோஷ்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் பணிமாறுதலாகி செல்லும் ராஜேந்திரரத்னூ பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார்.
மகிழ்ச்சி அடைகிறேன்
புதிய கலெக்டராக பதவி ஏற்ற ஆர்.கிர்லோஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்பு கலெக்டராக இருந்த ராஜேந்திரரத்னூ எனது நெருங்கிய நண்பர். நானும் அவரும் ஒரே ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டோம். அவர் ஏறத்தாழ 5 ஆண்டுகள் கடலூர் மாவட்டத்தில் நல்ல முறையில் பணியாற்றியிருக்கிறார்.

அரசின் திட்டங்களை வேகமாக அமல்படுத்துவதற்கும், மக்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன்.‘
இவ்வாறு கலெக்டர் ஆர்.கிர்லோஷ்குமார் கூறினார்.
வாழ்த்து
அவருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், சப்–கலெக்டர்கள் லலிதா, சுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது)ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். கடலூர் நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியனும் கலெக்டரை நேரில் சந்தித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகராக கடலூர் இருந்த போது, முதல் கலெக்டர் 1801–ம் ஆண்டு பதவி ஏற்றார். அதன்படி பார்த்தால் தற்போது பதவி ஏற்றுள்ள ஆர்.கிர்லோஷ்குமார் 109–வது கலெக்டர் ஆவார்.
ஆனால் 1993–ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டம் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால் ஆர்.கிர்லோஷ்குமார் கடலூர் மாவட்டத்தின் 14–வது கலெக்டர் ஆவார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக