AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 28 நவம்பர், 2012

மத்திய அரசு அதிரடி பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே செல்போன் டவர் அமைக்க தடை


புதுடெல்லி: பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, ஜெயில் அருகே செல்போன் டவர்கள் இருக்க கூடாது. இருந்தால் அதை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. செல்போனின் உபயோகம் பெருகிய அதே நேரம் செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. செல்போன் கோபுரங்களுக்கு மத்திய அரசு, டிராய் நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தபோதும், வணிக வளாகங்கள், பொது இடங்கள் என்று எங்கு திரும்பினாலும் செல்போன் கோபுரங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் செல்போன் கோபுரங்களுக்கு குட்டு வைக்கும் வகையில் மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்கள் மருத்துவமனைகள், விளையாட்டு மைதானங்கள் அருகே செல்போன் கோபுரங்கள் இருக்க கூடாது. மேற்படி இடங்களில் தற்போது செல்போன் கோபுரங்கள் இருந்தால் அவற்றை அந்த இடங்களிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் மாற்றியமைக்க வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற இடங்களில் எந்த நிறுவனமும் செல்போன் கோபுரங்களை அமைக்க கூடாது. தலைவர்களின் நினைவிடங்கள், தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் அறிவிக்கப்பட்ட இடங்கள், பாரம்பரிய சின்னங்கள், போற்றத்தக்க இடங்கள் ஆகியவற்றின் அருகே செல்போன் கோபுரங்கள் அமைக்க கூடாது. இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பரபரப்பு தீர்ப்பு

பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த ஜெய்ப்பூர் ஐகோர்ட், பள்ளிகள், மருத்துவமனைகள் அருகே செல்போன் கோபுரம் அமைக்க கடந்த செப்டம்பரில் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து செல்போன் நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தன. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜெய்ப்பூர் ஐகோர்ட் உத்தரவில் தலையிட மறுத்ததோடு, அதே கோர்ட்டில் அப்பீல் செய்து கொள்ளுமாறு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து செல்போன் நிறுவனங்கள் ஜெய்ப்பூர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தன.

ஐகோர்ட் தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் நீதிபதி என்.கே.ஜெயின் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து நேற்று இறுதி தீர்ப்பு வழங்கியது. அதன் விவரம்: செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அருகே செல்போன் கோபுரங்கள் அமைக்க கூடாது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கோபுரங்களை இரண்டு வாரத்தில் அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக