AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 31 அக்டோபர், 2012

புயல் சின்னம் எதிரொலி வீராணம் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்

காட்டுமன்னார்கோவில்,:காட்டுமன்னார்கோவிலில் உள்ள மிக பெரிய ஏரி வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு வடவாறு மூலம் தண்ணீர் வருகிறது. ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. பாசனத்திற்கும் பயன்படுகிறது. இந்த ஏரி அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிவதற்கு மிகப்பெரிய வடிகாலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் ஏரி நிரம்பி உபரி நீர் வெள்ளியங்கால் மதகு வழியாக வெளியேற்றப்படும். இதனால் பல்வேறு கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவர். படகு மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக சமுதாய நலக்கூடங்கள், புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவர்.

இந்த ஆண்டு மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தை நீலம் என்ற புயல் தாக்க கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. புயல் காரணமாக காட்டுமன்னார்கோவிலில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் பலத்த காற்று வீசத்தொடங்கியது. காற்றின் வேகம் அதிகரித்ததால் கண்டமங்கலம் பகுதியில் மின் கம்பிகள் அறுந்தன. இதனால் வீடுகளில் இருந்த டிவிக்கள் வெடித்தன.
தொடர் மழையால் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பொதுப்பணித்துறை சார்பில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். தற்போது வீராணம் ஏரியில் 44.80 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து சென்னைக்கு வினாடிக்கு 75 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. உபரி நீர் சேத்தியாதோப்பு அணைகட்டு மூலம் வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழையால் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. இவை படிப்படியாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தொடர் மழையால் சுமார் 80,000 ஏக்கர் விளை நிலங்களில் நடவு செய்யப்பட்ட, நேரடி நெல் விதைப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக