AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

டீசல் விலை 5 ரூபாய் உயர்வு: நள்ளிரவில் அமலுக்கு வந்தது

புதுடெல்லி: டீசல் விலை அதிரடியாக லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு  முதல் இது அமலுக்கு வந்துள்ளது. அதுபோல, இனி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் அளிக்கப்படும் என்ற கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு, கட்டுப்பாடுக்கு இடையே, பெட்ரோல் விலை தப்பி விட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 19.26ம், மண்ணெண்ணெய்க்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.34.34ம், காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.347ம், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6ம் நஷ்டம் ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. டீசல் மற்றும் சமையல் காஸ் விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ.560 கோடி நஷ்டமும், பெட்ரோல் விற்பனையில் நாளொன்றுக்கு ரூ.16 கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும், இதனால் உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தின. பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றுவது தொடர்பாக ஆலோசிக்க அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டம் கடந்த 11ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.  இதனால் பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் ஆகியவை விலையேற்றத்தில் இருந்து தற்காலிகமாக தப்பித்தன.

பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடினமான சூழ்நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியுள்ளது. இப்போதுள்ள நிலையில் விலையேற்றத்தை தவிர்க்க முடியாது’’ என்று கூறியிருந்தார். இதற்கிடையே, பெட்ரோலிய நிறுவனங்கள் கூறுகையில், ‘‘பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் குறித்து உடனடியாக முடிவு செய்ய வேண்டும். மேலும், டீசல் விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிட வேண்டும். வீட்டு உபயோகத்துக்கான எல்லா சிலிண்டர்களுக்கும் மானியம் அளிப்பதால் பெரும் சுமை ஏற்படுகிறது. இதை தடுக்க ஒரு குடும்பத்துக்கு, ஆண்டு ஒன்றுக்கு 4 சிலிண்டர் மட்டும் மானிய விலையிலும், மற்றவற்றை சந்தை விலையிலும் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தின.

இப்பிரச்னைகளுக்கு இடையே அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று மாலை அவரது வீட்டில் நடந்தது. இக்கூட்டத்தில் டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் வாட் வரி சேர்க்கப்படவில்லை. ஆனால், பெட்ரோல், காஸ், மண்ணெண்ணெய் விலை குறித்து எந்த முடிவு செயயப்படவில்லை. எனினும், பெட்ரோல் விலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் லிட்டருக்கு ரூ.6 இழப்பை சரிகட்டுவதற்காக பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ.5.50 குறைத்துள்ளது. இதன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் குறையும். ஆனால், இந்த வரி குறைப்பால் மக்களுக்கு பலன் இருக்காது. எனினும், பெட்ரோலிய நிறுவனங்களின் கோரிக்கைப்படி, வீட்டு உபயோகத்துக்கான மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் ஒரு குடும்பத்துக்கு இனி 6 சிலிண்டர்களை மட்டுமே மானிய விலையில் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, டீசல் விலை உயர்வு, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. டீசல் விலை உயர்வால் ரூ.19,000 கோடியும், காஸ் கட்டுப்பாடு மூலம் ரூ.2000 கோடியும் மிச்சம் ஏற்படும் என கூறப்படுகிறது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக