AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

வறண்டது வீராணம் ஏரி: சென்னைக்கு குடிநீர் வராது

காட்டுமன்னார்கோவில்: காவிரியின் ஒரு பகுதியாக, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்படும் நீர் கல்லணை வழியாக கீழணையை வந்தடையும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தடையும். மழை காலங்களில் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, பாப்பாக்குடி வடிகால் ஆகிய ஓடைகளின் வழியாகவும் ஏரிக்கு நீர் வரும்.

வீராணத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு அணை கட்டின் மூலம் வெள்ளாற்றில் வெள்ள நீர் அனுப்பப்படுகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு கடந்த 1993ம் ஆண்டு உலக வங்கி நிதியுடன் புதிய வீராணம் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ரூ.130 கோடி நிதியில் புதிய வீராணம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னைக்கு ஆண்டுதோறும் 1 டி.எம்.சி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதில்லை. மேலும் 45 ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்காக 8 முறை ஏரி நிரம்ப வேண்டும். 

தற்போது கீழணை வறண்டு விட்டதால் வீராணம் ஏரியும் முற்றிலும் வறண்டு விட்டது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வருவது முற்றிலும் தடைபடும் என தெரிகிறது.

இதுகுறித்து கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன் கூறியதாவது:
ஆரம்பத்தில் கீழணையில் இருந்து 2,200 கன அடி தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது. கர்நாடக அரசும் தண்ணீர் தர மறுப்பதால், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீர் அளவு வெகுவாக குறைந்துள்ளது. அதனால் வீராணம் ஏரி பகுதியில் 2 போக சாகுபடி நிறுத்தப்பட்டுவிட்டது. 

வழக்கமாக மேட்டூர் அணை, பாசனத்துக்கு ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 29ம் தேதி மூடப்படும். மேட்டூர் அணை திறக்கப்பட்ட உடன் ஜூலை மாதத்துக்குள் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தடையும். பருவ மழை முறையாக பெய்ததால் 2008 வரை வீராணத்தில் தண்ணீர் வற்றவில்லை. மழை காலங்களில் வீணாக தண்ணீர் கடலில் கலப்பதை அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் நிலத்தடி நீர்மட்டம் குறையாமலும், விவசாயிகள் சாகுபடியும் செய்ய முடியும்.
இவ்வாறு கண்ணன் கூறினார். 

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் கால்வாய் பாசனத்தை விட ஏரி பாசனமே மிகுதியாக உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறுவதற்கு ஏதுவாக வீராணம் ஏரி உருவாக்கப்பட்டது. இந்த ஏரி 16 கி.மீ. நீளம், 48 கி.மீ. சுற்றளவு, 5.6 கி.மீ. அகலம் கொண்டது. ஏரியின் நீர்மட்டம் 47.50 அடி. கடல் மட்ட அளவு 31.90 அடி போக அதிக பட்சமாக 15.60 அடியே நீர் மட்ட அளவாக கருதப்படுகிறது.

வீராணம் ஏரியில் உள்ள தண்ணீரின் மேற்பரப்பு 15 சதுர மைல். வெட்டப்பட்ட காலத்தில் 1.44 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்பட்டது. தற்சமயம் ஏரி தூர்ந்து கொள்ளளவு 0.96 டி.எம்.சி ஆக சுருங்கி விட்டது. 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.  

நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து உள்ளதால் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைக்கின்றனர். 

மழை வெள்ள காலங்களில் வெள்ளியங்கால் ஓடை, வெள்ளாறு வழியாக 10 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை சேமிக்க ஏரியை தூர் வாரி கரைகளை உயர்த்தி ஏரியின் கொள்ளளவை 2 டி.எம்.சியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் யோசனை தெரிவித்துள்ளனர். 

பருவ மழை பொய்த்து விட்டதால் சென்னை மட்டுமின்றி தென் மாவட்டங்களிலும் விவசாயம் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக