AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

நீதிபதியின் மகன்களுக்கு பதவி! மோடி படுகொலைகளை மறைக்கவா?


2002ல் குஜராத் மாநிலத்திலுள்ள கோத்ரா ரயில் நிலையத்திற்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் எஸ்6 ரயில் பெட்டி எரிப்பையும், அதன்பிறகு நடைபெற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இனப்படுகொலைகளையும் விசாரிப் பதற்காக மாநில அரசால் நீதிபதி நானாவதி நியமிக்கப்பட்டார். அதேசமயம், ரயில் பெட்டி எரிப்பை மட்டும் விசாரிப்பதற்காக அன்றைய ரயில்வே துறை அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், நீதிபதி பானர்ஜி தலைமையிலான கமிட்டி ஒன்றை அமைத்தார். நீதிபதி பானர்ஜி அளித்த இறுதி அறிக்கையில், எஸ்6 பெட்டி உள்ளேயிருந்துதான் எரிக்கப்பட்டுள்ளது, பெட்டியின் வெளியிலிருந்து எரிக்கப்படவில்லை என்று தெள்ளத்தெளிவாக தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியிருக்கையில், குஜராத்தில் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். முஸ்லிம் பெண்களைக் கற்பழித்தும், முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து சிசுவை தீயில் கொளுத்தியும் தாயையும் கொன்றொழித்தனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இன்றைய நிலை வரை பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சொந்த வீட்டிற்கு செல்ல முடியாமல் அகதிகளாக உள்ளனர். இந்த பயங்கரவாதிகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுவதற்காக டெஹல்கா பத்திரிக்கை குற்றவாளிகளிடம் அவர்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக கேமராவை வைத்து பேட்டி கண்டனர். குற்றவாளிகள், ‘‘நாங்கள்தான் கொலை செய்தோம்; நாங்கள்தான் முஸ்லிம்களைத் தீயிட்டுக் கொலை செய்தோம்; நாங்கள்தான் முஸ்லிம் பெண்களைக் கற்பழித்தோம்; முதலமைச்சர் நரேந்திர மோடி எங்களை ஊக்கப்படுத்தினார்; காவல்துறை எங்களுக்கு முழுமையாக ஆதரவாக இருந்தது’’ என்று வாக்குமூலம் கொடுத்ததை டெஹல்கா கேமரா பதிவு செய்தது.
இந்தப் பதிவுகளை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் வெளியிட்ட பின்னரும் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குஜராத் இனப்படுகொலையை விசாரிப்பதற்கான விசாரணைக் கமிஷன் தலைவர் நீதிபதி நானாவதியையே விலைக்கு வாங்கி நீதியை கேலிக் கூத்தாக்கியுள்ளார் நரேந்திர மோடி. நீதிபதி நானாவதியின் இரண்டு மகன்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவியை நரேந்திர மோடி வழங்கியுள்ளார். நீதிபதி நானாவதியின் மூத்த மகன் மவ்லிக் குஜராத் கூடுதல் அரசு வழக்கறிஞராக (Additonal Advocate General) நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் முஸ்லிம் படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய நரேந்திர மோடிக்கு எதிரான வழக்குகளில் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதி நானாவதியின் மகன் மவ்லிக் தான் (நரேந்திர மோடிக்கு ஆதரவாக) வாதாடி வருகிறார். மோடியின் பயங்கரவாத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் தலைவர் நீதிபதி நானாவதியின் மகன் மவ்லிக்கே உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் குஜராத் அரசுக்கு ஆதரவாக வாதிடுவது நீதியையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும். நீதிபதி நானாவதியின் இரண்டாவது மகன் தவல் அஹமதாபாத் நகராட்சி கழகத்தின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நானாவதியின் இரண்டு மகன்களுக்கும் இலட்சக்கணக்கான ரூபாய் மாதந்தோறும் குஜராத் அரசு வழங்குகிறது. இதுமட்டுமல்லாமல் அரசு பங்களா, கார் மற்றும் பல்வேறு மறைமுகமான சலுகைகளும் வழங்க உத்தரவிட்டுள்ளார் நரேந்திர மோடி. தனது இரண்டு மகன்களுக்கும் அரசு வழக்கறிஞர் பதவி கிடைத்ததால், “குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்துவதற்கு எவ்வித ஆதாரமுமில்லை” என நீதிபதி நானாவதி கூறியுள்ளார். இதன்மூலம், தனது மகன்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவியை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு நரேந்திர மோடியைக் காப்பாற்றியுள்ளார் நானாவதி என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
நானாவதியின் கமிஷனின் காலாவதியை குஜராத் அரசு 18வது தடவையாக 2012 மார்ச் 29ம் தேதிக்கு கால நீட்டிப்பு செய்துள்ளது. இதன் மூலம் வருகிற டிசம்பர் மாதம் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இவ்வறிக்கை வெளிவராது என்பது உறுதியாகியுள்ளது. இவ்வறிக்கை மோடிக்கு ஆதரவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், இவ்வறிக்கையைப் பற்றிய மோசடிகளை ஊடகங்கள் அக்குவேறு ஆணிவேறாக அலசினால் மோடிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற பயத்தின் காரணமாக நானாவதி கமிஷனுக்கு காலநீட்டிப்பு வழங்கியுள்ளார் மோடி.
நீதிபதி நானாவதியின் மகன்கள் குஜராத் அரசு வழக்கறிஞராக நியமித்ததற்கு மூத்த வழக்கறிஞர் கிரிஷ் பட்டேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இனப்படுகொலையில் முதல்வர் மோடியின் பங்கினைக் குறித்து நீதிபதியான தந்தை விசாரணை நடத்திவரும் வேளையில், அவரது மகன்களுக்கு மோடி தலைமையிலான குஜராத் அரசு வழக்குகளில் வாதாட பணம் கொடுப்பது வெட்கக்கேடானது என குறிப்பிட்டார். இதேபோன்று மூத்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த் யாக்நிக்கும் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமை வகித்த நரேந்திர மோடியை பாதுகாக்கவே நானாவதி கமிஷன் செயல்படுகிறது என மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் குற்றஞ்சாட்டினார். இக்குற்றச்சாட்டைப் பற்றி நீதிபதி நானாவதி யிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, கருத்துச் சொல்ல விரும்பவில்லை என நழுவினார்.
பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு நீதிபதி நானாவதியும், அவரது மகன்களும் பதில்சொல்ல முடியாமல் ஆவேசப்பட்டுள்ளனர். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டி லிருந்து தப்பிக்க நீதிபதிகளுக்கு லஞ்சமாகப் பதவி வழங்குவது நரேந்திர மோடிக்கு இது முதல்முறையல்ல. ஏற்கனவே பெஸ்ட் பேக்கரி வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வி.முகீதா, ஓய்வு பெற்றவுடன், குஜராத் மின்சார வாரியத்தின் தலைவராக அவரை நியமனம் செய்தவர்தான் மோடி. இவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளமும், அரசு வாகனமும், பங்களாவும் வழங்கியது குஜராத் அரசு.
இந்த நீதிபதி முகீதாவுக்கு நரேந்திர மோடி, மின்சார வாரியப் பதவியை எதற்காக கொடுத்தாரென்றால், 2002ல் நடைபெற்ற கலவரத்தில் பெஸ்ட் பேக்கரி உரிமையாளர் ஹபீபுல்லாஹ் சேக் உட்பட 14 பேர் பேக்கரி அடுப்பில் தள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலையை செய்த பாஜக உட்பட சங்பரிவார் அமைப்பினரைச் சேர்ந்த 21 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரையும் விடுதலை செய்தவர்தான் நீதிபதி முகீதா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகத்தான் நரேந்திர மோடி இந்த நீதிபதிக்கு சன்மானமாக மின்சார வாரியப் பதவியை வழங்கினார்.
இவ்வளவு அநீதி நரேந்திர மோடியால் அரங்கேறிய பிறகும் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எடுத்து நடத்த முன்வருவதில்லை. இனப்படுகொலை வழக்குகளை குஜராத் உயர்நீதிமன்றமே நடத்தட்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறியுள்ளது. குஜராத் நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சி சொல்லும் நபர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என தெரிந்தபிறகும் குஜராத் உயர்நீதிமன்றத்திலேயே வழக்கை நடத்தச் சொல்வது பாதிக்கப்பட் டவர்களுக்கு அநீதி இழைப்பதாக உள்ளது.
சொந்த மாநில மக்களையே படுகொலை செய்த நரேந்திர மோடியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைக் கொடுக்கும் நாள்தான் மனிதநேயப் போராளிகளுக்கு மகிழ்ச்சியான நாள். முஸ்லிம் இனப்படுகொலை குற்றவாளி நரேந்திர மோடியிடம் தன் மகன்களுக்கு பதவியைப் பெற்ற நீதிபதி நானாவதியின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது. நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?

-என்.ஏ.தைமிய்யா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக