AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 14 ஏப்ரல், 2012

பெட்ரோல் விலையும் அதிகரிக்கும் பட்ஜெட் நிறைவேறியதும் டீசல் விலை உயர்த்தப்படும்

புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நிறைவேறியதும் டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மானிய செலவு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, எரிபொருள் விலை விரைவில் உயர்த்தப்படும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதமே கூறியிருந்தார். எனினும், கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்ற காரணத்தால் விலை உயர்வு ஒத்தி வைக்கப்பட்டது. 

கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதுபோல், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அரசின் முன் அனுமதியை பெற்ற பின்பே அதன் விலையை உயர்த்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. 

இப்போதைய சர்வதேச விலை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.7, டீசலுக்கு ரூ.14.36, மண்ணெண்ணெய்க்கு ரூ.31.04, சயைமல் எரிவாயு ஒரு உருளைக்கு ரூ.570 நஷ்டம் ஏற்படுகிறது. எரிபொருள் விலையை உயர்த்தாவிட்டால் பெட்ரோல் சப்ளை பாதிக்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தன. 

இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் மே முதல் வாரத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

டீசல் விற்பனை 12 சதவீம் அதிகரிப்பு

கடந்த 2011,12 நிதியாண்டில் பெட்ரோலிய பொருட்களின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் அதிகபட்ச வளர்ச்சி ஆகும். 4.58 சதவீதமாக இருக்கும் என அரசு மதிப்பீடு செய்திருந்தது. 2010,11 நிதியாண்டில் இது 2.9 சதவீதமாக இருந்தது. இதில் டீசல் விற்பனை 11.9 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 

''பெட்ரோல் விலை அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. ஆனால் டீசல் விலை உயர்த்தப்படுவதில்லை. இதனால் டீசல் விற்பனை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்கும்வரை இதே நிலை நீடிக்கும்'' என பெட்ரோலிய பொருட்கள் திட்டம் மற்றும் ஆய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக