கடலூர், ஜன.25-
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் வருகிற 8-ந்தேதி தொடங்கும் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.
பிளஸ்-2 செய்முறைத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. பொதுத்தேர்வுகளுக்கு முன்னால் செய்முறைத்தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி செய்முறைத்தேர்வுகள் அடுத்த மாதம்(பிப்ரவரி) 2-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.
ஆனால் கடலூர் மாவட்டத்தில் `தானே’ புயல் தாக்கியதில் சுமார் 400 பள்ளிக்கூடங்கள் சேதம் அடைந்ததால் கடந்த 17-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதனால் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
முதன்மை கல்வி அதிகாரி
இது பற்றி கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அந்தோணி ஜோசப் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் `தானே’ புயல் தாக்கியதன் காரணமாக பிளஸ்-2 செய்முறைத்தேர்வுகளை 6 நாட்கள் தாமதமாக தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறைத்தேர்வுகள் பிப்ரவரி மாதம் 8-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடத்தப்படும்.
புயலால் சேதம் அடைந்த பள்ளிகளை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வுக்கு முன்னதாக அனைத்து வகுப்பறைகளும் சீரமைக்கப்பட்டு விடும்.
இவ்வாறு அந்தோணி ஜோசப் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக