AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 3 டிசம்பர், 2011

இந்திய உணவுப் புரட்சியை வறட்சியாக மாற்ற மன்மோகன் அரசு சதி?


இந்தியாவில் இந்திரா காந்தியின் தொலை நோக்குப் பார்வையால் 1967-ல் தொடங்கப்பட்ட கோதுமைப் புரட்சி (பின்னர் அதுவே பசுமைப்புரட்சியானது) காரணத்தால், உணவில் தன்னி றைவை நோக்கிய பயணம் தொடங்கப்பட்டு நல்லதோர் அடித்தளம் அமைந்துவிட்டதால், மன்மோகன் சிங் பிழைத்தார். அந்த நன்றி உணர்வு இல்லாமல் அப்படிப்பட்ட உணவுத் தன்னி றைவு அடித்தளத்திலுள்ள கற்களை ஒவ்வொன்றாகக் கன்னக்கோல் போட்டுக் கழற்றும் மன்மோகன், பொருளாதார மண்டலம் என்ற லைசென்சை? வழங்கி நொய்டாவில் மட்டு மல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் "விவசாய நில அபகரிப்பை' நிகழ்த்தி வருகிறார்.

இந்திரா காந்தியைப்போல் தொலைநோக்குப் பார்வையுள்ள ஒரு தலைவர் மத்திய கிழக்கு நாடுகளிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளி லும் தோன்றி, உண்ணும் உணவில் தன்னிறைவுத் திட்டம் தீட்டாததால், ஊழலுடன் உணவுப் பிரச்னையும் இணைந்து, மக்கள் கிளர்ச்சி செய்து, அரசியல் மாற்றமே நிகழ்ந்து வருகிறது.

உணவு விலையேற்றம், வேலை யில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி, கல்வியில் குறைந்த முதலீடு, உணவுப் பற்றாக்குறை என்று பல பிரச்சனைகளால் பொருளாதாரம் இன்று ஆட்டம் கண்டு வருகிறது.

உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் உலக ஏகபோக உணவு வர்த்தகர்கள் வேண்டு மென்றே உணவு நெருக்கடியை ஏற்படுத்தித் தந்திரத்தில் நரிகளாகவும் தன்னலத்தில் புலிகளாகவும் உள்ளதை எகிப்து நிகழ்ச்சி வெளிப்படுத்தக் கூடியது. எகிப்தின் உணவுப் பற்றாக்குறை ரஷிய இறக்குமதியால் ஈடு செய்யப்படுகிறது.

கடந்த முறை ரஷியாவில் போதிய உபரி இருந்த நிலையில் கிளன்கோர் ரஷியாவிலிருந்து எகிப்துக்கு கோதுமை ஏற்று மதியைத் தடைசெய்ய ரஷிய அரசை வற்புறுத்தியுள்ளது. ரஷியாவும் அவ்வாறு தடை செய்யக் காரணம் சுவிட்சர்லாந்து நிறுவனமான கிளன்கோர் ரஷிய உணவு வர்த்தகத்தில் பெரும் பங்கு வகித்து வருகிறது.

ஒரு குளம் வற்றும்போது மீன்கள் பிழைத்து இனப்பெருக்கம் செய்ய ஆற்றுநீரைத் திருப்பிவிடாமல் வற்றிய குளத்தில் மீன்பிடிக்கும் உலக வர்த்தகர்கள் ஒன்றுகூடி உலக விவசாயத்தை உயர்த்தும் தொலைநோக்குத் திட்டம் ஒன்றை தாவோஸ் நகரில் அமெரிக்க ஆசியுடன் வழங்கியுள்ளனர். உலகத்தில் உணவு உற்பத்தி குறைந்து வருவதால் ஆண்டுக்கு 2 சதவீதம் உணவு உற்பத்தி பெருகவும், 2 சதவீதம் பசுமையக விளைவைக் குறைக்கவும், 2 சதவீதம் வறுமையைப் போக்கவும் திட்டம் தயாராகிவிட்டது.

உலகின் மாபெரும் உணவு அரக்கர்களான 17 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன யார் அவர்கள்? என்று கேட்டால், கார்கில், கோகோ கோலா, டூபாண்ட், ஜெனரல் மில்ஸ், பெப்சி, கிராஃப்ட்ஃபுட், சேப் மில்லர், ஆர்ச்சர் டேனியல்ஸ், மிட்லாண்ட், பி.ஏ.எஸ்.எஃப், மெட்ரோ ஏ.ஜி, யூனிலிவர், சைன்ஜெண்டா, வால்மார்ட், யாரா இண்டர்நேஷனல், பஞ்சி லிமிடட். யு.எஸ். எய்டின் கைங்கர்யம் இது.

உலக விவசாயம் முற்றிலுமாகத் தொழில் நிறுவனக் கைப்பற்றாக மாற்றும் திட்டம் அமெரிக்க எய்ட் என்று கூறப்படும் யு.எஸ். ஏஜன்சி ஃபார் இண்டர்நேஷனல் டெவலப்மெண்ட் தயாரித்துள்ள சதித் திட்டம் யு.எஸ். எய்டின், நிர்வாக இயக்குநர் ராஜீவ் ஷா, "உணவில் பொதுத்துறையுடன் தனியார் கூட்டுறவு வளர்ந்து உற்பத்தி உயர வளரும் நாடுகள் முதலீடு செய்ய வேண்டும்'' என்று தாவோஸில் கூறியுள்ளார்.

உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 149 நாடுகளில் 105 நாடுகளின் உணவுத் தேவை இறக்குமதியை நம்பியுள்ளன. வடக்கு நாடுகள் உணவு வழங்கும் நாடுகளாகவும் தெற்கு நாடுகள் உணவுக்காகத் திருவோடு ஏந்தும் நாடுகளாகவும் மாறிவிட்ட சூழ்நிலையில் இந்திய நிலை என்ன? இந்தியா வையும் திருவோடு ஏந்த வைக்கும் ஏற்பாடுகளில். சர்தார்ஜி அலுவாலியா தீவிர மாயுள்ளார்.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிகாகோ வர்த்தகப் பள்ளி நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ரகுராம் ராஜன் என்பவர் நிதி ஆலோசகராகவும் விளங்கி வருகிறார். "இன்னமும் ஏன் 60 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்வது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை'' என்றும் விவசாயத்துக்கு 5 சத மக்கள் போதுமானது என்றும் கூறியுள்ளார். ரகுராம் ராஜன் ஓதிய வேதவாக்கை அப்படியே பிரகடனம் செய்யும் மன்மோகன் சிங், "இந்திய விவசாய வளர்ச்சிக்கு விவசாயிகள் முட்டுக்கட்டையாக உள்ளதால் - அரைக்காணி, காக்காணியெல்லாம் வெளியேறி வேறு பணிகளில் ஈடுபட வேண்டும்'' என்று கூறியுள்ளதைக் கேட்டு... "மூட்டையைக் கட்டிக்க... பட்டணந்தான் போகலாமடி'' என்று விவசாயிகள் கிளம்பி விட்டதை மக்கள் தொகைப் புள்ளிவிவரமும் நிரூபிப்பதாயுள் ளது.

2001-லிருந்து 2011-க்கு வரும்போது சுமார் 9 கோடி மக்கள் நகர்ப்புறம் வந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. மொத்த மக்கள்தொகை 2011-ல் 121 கோடி. இதில் 83.3 கோடி மக்கள் கிராமத்தில் உள்ளதாக ஒரு கணக்கு. - அதாவது 70 சதவீதம் இருப்பினும் இவர்களில் சரி பாதி விவசாயம் சாராத பணியில் ஈடுபட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. கிராம மக்கள் அதாவது கிராமத்தில் வசித்தாலும் விவசாயம் செய்வோர் என்று இன்றைய தொழில்மய உலகில் கணக்கிட முடியாது. யு.எஸ். எய்ட் கூறுவதையெல்லாம் மன்மோகன் சிங் நிறைவேற்றிய வண்ணம் உள்ளார். அன்னாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அலுவாலியா அண்மையில் ஓமானி நிறுவனத்துக்கு ஏற்றுமதிக்குரிய விவசாய உற்பத்தியைத் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கெனவே நீண்டகாலமாகச் செயல்பட்டுவந்த வேளாண் விளைபொருள் மார்க்கெட் கமிட்டிச் சட்டத்தை அகற்றிய அலுவாலியா, இந்தியத் தொழில் வர்த்தக அமைப்புக் கூட்டணியை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சிறு விவசாயிகளின் நலன் களைக் காப்பாற்றி வரும் மார்க்கெட் கமிட்டிகள் மெல்ல மெல்ல மூடப்பட்டு அந்த இடத்தைப் பன்னாட்டு ஏகபோகங் கள் ஆக்கிரமிக்கும். 2005-ல் மார்க்கெட் கமிட்டி சட்டத்தில் உணவுத்தொழில் நிறுவனம் விரும்பும் உகந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டம், பொதுவிநியோகம். உணவு மானியம் எல்லாம் நிதிநெருக்கடியைக் காரணம்காட்டி உணவு வர்த்தகத்தில் தனியார் நுழைவு படிப்படியாக அனுமதிக் கப்படலாம். ஏனெனில், திட்டக்கமிஷன் பொருளியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், அரசுப் பணித்துறைச் செயலர்கள் போன்றோர் சுதந்திர வணிகம், சில்லறை வணிகத்தில் தொழில் நிறுவன ஆதிக்கம் - உணவுச்சங்கிலி என்று அமெரிக்காவில் காண் பவைகளை இந்தியாவுக்குள் கொண்டுவரத் துடிக்கின்றனர். இப்படிக் கொணர்வதன் மூலமே விவசாயத்தை உயிர்த்துடிப்பாக மாற்றலாம் என்று பேசுகின்றனர்.ஏறத்தாழ இன்றைய இந்தியா விவசாயத்தைக் கார்ப்ப ரேட்டுகளுக்கு வழங்க முன்வந்து விட்டது. விவசாயிகளே சமூகத்துக்கு பாரமாகிவிட்டனர் என்பதால், அரசின் கொள்கையே விவசாயிகளை ""மூட்டையைக் கட்டிக்கோ, பட்டணம்போய் பிழைச் சுக்கோ'' என்று சொல்லாமல் சொல்லிவிட்டது. பாரம்பரியம் என்ற பேச்சே காதில் விழ வேண்டாம். விதை விற்பனையில் மான்செண்டோவின் ஏகபோகம் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கிறது.

உலக வர்த்தகத்தில் ஒழுங்கு முறையற்ற ஊக வணிகம் 2002-ல் 0.77 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியனுக்கு 12 பூஜ்ஜியங்கள்) என்ற நிலை இன்று 8 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியா நீங்கலாக உணவு வர்த்தகத்தைக் கைப்பற்றிவிட்ட பன்னாட்டு ஏகபோகங்கள் உணவு இறக்குமதியை நம்பி வாழும் நாடுகளில் உணவு விலையை உயர்த்தி விட்டன. பசியுடன் வேலையின்மையும் சேர்ந்து ஏழை நாடுகளைத் துயரிலாழ்த்திவிட்டதால் மக்கள் கிளர்ந்தெழுந்து அந்தந்த நாட்டுத் தலைவர்களைக் குற்றவாளி யாக்கினாலும் நிஜமான குற்ற வாளி நியூயார்க்கின் வால்தெரு. நிதி விற்பன்னர்களின் இப் பொன்னகரத்திலிருந்து வெளிவரும் விஷவாயுவுடன் எண்ணெய் விலையும் பற்றி எரிவதால் ஏழை நாடுகளின் வயிற்றில் பசித் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. உணவு உத்தரவாதச் சட்டம் இயற்றப் போகும் மன்மோகன் அரசு, குறைந்தபட்சம் இந்திய விவசாயிகளைக் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்காமல் மீண்டும் உணவில் தன்னிறைவை நோக்கித் திட்டமிடுவதன் மூலமே உணவுக்கு உத்தரவாதம் வழங்க முடியும். இல்லாவிட்டால் உலக உணவு வர்த்தகப் புலிகளுக்கு இந்தியா இரையாகிவிடும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக