AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 6 டிசம்பர், 2011

டிசம்பர்-06 தமிழகம் முழுவதும் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

 இன்று சென்னை சைதாப்பேட்டையில் தமுமுக சார்பில் நடைபெற்ற டிசம்பர்-06 ஆர்ப்பாட்டத்தின் புகைப்படக் காட்சிகள்.

பாபரி மஸ்ஜித் பிரச்னையில் நீதி கோரி தமிழகம் முழுவதும் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

பாபரி மஸ்ஜித் 19 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குக் கொண்டனர்.

சென்னையில் சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில்
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அவர் அப்போது பேசியதாவது-

பாபரி மஸ்ஜித் இடிப்பு நமது நாட்டின் மதசார்பற்ற மான்பிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்திய வன் செயலாகும். அந்த வன் செயல் நமது நாட்டுச் சட்டங்கள் மற்றும் பன்னாட்டு சட்டங்களின் பார்வையிலும் மிக கொடூர குற்றமாக விளங்குகின்றது. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி உறுதி மொழி எடுத்துக் கொண்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்னர் இவர்கள் மத்திய அமைச்சர்களாகவும, மாநில முதலமைச்சர்களாகவும் பதவிக்கு வந்தவர்கள்  இந்த கொடூர குற்றச் செயலில் ஈடுபட்டு  நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை கோட்பாடு மீது நம்பிக்கைக் கொண்டவர்களை தலைகுனிய வைத்து விட்டார்கள். பட்டப்பகலில் பொதுமக்களின் பார்வையில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது விடுதலைப் பெற்ற இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான பயங்கரவாதச் செயலாக அமைந்துள்ளது.

பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதயரசர் லிபரஹான் ஆணையம் 48 பதவி நீடிப்புகளைப் பெற்று 17 ஆண்டுகள் கழித்து தனது அறிக்கையை 2009ல் மத்திய அரசிடம் சமர்பித்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பேயி, முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் என ஆர்.எஸ்.எஸ. பா.ஜ.க. வி.இ.ப. பாஜ்ரங் தளம் முதலிய வகுப்பு வாத அமைப்புகளைச் சேர்ந்த  68 நபர்கள் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர்கள் என்று லிபரஹான் ஆணையம் குற்றம் சாட்டியது. மக்களின் வரிப்பணம் 8 கோடி ரூபாய் செலவில் வெளியான இந்த அறிக்கை மீது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவ வழங்கியுள்ள தீர்ப்பு முஸ்லிம்களை மட்டுமில்லாது நீதியை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நல்ல வேளையாக லக்னோ பிரிவின் இந்த தீர்ப்பு வினோதமானது என்று வர்ணித்து உச்சநீதிமன்றம் அதனை நிறுத்தி வைத்து விட்டது. சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து முஸ்லிம் சமுதாயம் லக்னோ தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது. ஆனால் சங்பரிவார அமைப்புகளோ நீதிமன்றத் தீர்ப்புகளையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் கட்டுமானப் பணியை ஆரம்பிப்போம் என்று கொக்கரிக்கிறார்கள்.

ஒவ்வொரு டிசம்பர் 6ன் போதும் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவாகின்றது. காவல்துறையினரும் தூக்கமில்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். இதற்கு காரணம் அத்வானி தலைமையிலான பயங்கரவாத கும்பல் டிசம்பர் 6 1992ல் நிகழ்த்திய பாபரி மஸ்ஜித் இடிப்பு என்ற பயங்கரவாதச் செயல் தான். இந்த பயங்கரவாதிகளை சிறையில் தள்ளி பள்ளிவாசலை மீண்டும் கட்டினால் நாட்டில் அமைதி தவிழும்
இச்சூழலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பின் வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறது-

1 . பாப்ரி மஸ்ஜித்  நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் சட்டத்தின் அடிப்படைகளை மீறும் விதமாக வழங்கப்பட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த மேல்முறையீடு தொடர்பான வழக்கில் விரைந்து தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்க வேண்டும்.

2. லிபர்ஹான் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட 68 பேர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு தமுமுக தலைவர் உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை தமுமுக தலைவர் எப். உஸ்மான் அலி, மாவட்ட செயலாளர் எல். தாஹா நவீன், பொருளாளர் எம். அக்பர் அலி மமக செயலாளர் எச். முஹம்மது தமீம், தென்சென்னை தமுமுக தலைர் டி.எ. இஸ்மாயில், மாவட்ட செயலாளர் முஹம்மது அபுபக்கர் (எ) கோரி, மமக மாவட்ட செயலாளர் கே. அப்துல் சலாம் உட்பட ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பங்குக் கொண்டனர்.     thanks   tmmk.in

0 கருத்துகள்:

கருத்துரையிடுக