AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 2 நவம்பர், 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் !

சென்னை : கோட்டூர்புரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம், குழந்தைகள் நல உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். அண்ணா நூற்றாண்டு நூலகம், கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு மாறுகிறது. அங்கு ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும் எனவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டையொட்டி சர்வதேச தரத்திலான நூலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை கோட்டூர்புரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் 6 மாடிகளை கொண்ட பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. அதை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அங்கு குழந்தைகளுக்கான தனி பிரிவும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2011-12ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், சென்னை டிபிஐ வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலான முடிவுகள் நேற்று (1-ம் தேதி) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இதன்படி, பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து இயக்ககங்கள், பயிற்சி மையம், கூட்டரங்குகள், பள்ளி குழந்தைகளுக்கான அறிவுசார் பட்டறைகள், விளையாட்டு வளாகம், கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையம், இன்குபேஷன் சென்டர் மற்றும் நவீன மைய நூலகம் ஆகியவை இந்த ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும்.
ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமையவிருக்கும் டிபிஐ வளாகம், கன்னிமாரா மைய நூலகம் மற்றும் தேசிய வைப்பு நூலகத்துக்கு மிக அருகில் உள்ளதால் நவீன மைய நூலகத்தை அறிவுசார் பூங்காவிலேயே அமைப்பது பொருத்தமாகவும், சிறந்ததாகவும் அமையும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
எனவே, சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிதாக டிபிஐ வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலக கட்டிடத்துக்கு மாற்றம் செய்யப்படும். அதன்பிறகு கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம், உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும்.
குழந்தைகளுக்கான இதுபோன்ற அரசு மருத்துவமனை இந்தியாவிலேயே இதுவரை நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் நலனுக்கென இதுபோன்ற உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம், குழந்தைகள் நலனை பேணிப் பாதுகாப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின்போது சுமார் ரூ.1000 கோடியில் அண்ணா சாலையில் மிக பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் இயங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தில் ‘மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை’ அமைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா அறிவித்தார்.
இப்போது, திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் என்றும், அந்த இடத்தில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக