AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 18 நவம்பர், 2011

தடையை மீறி ரத யாத்திரை நடத்துவோம் - முஸ்லிம் அமைப்பு!


"காவல்துறை தடையை மீறி பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரை நடைபெறும்" என இந்திய தவ்ஹீத் ஜமாத் எனும் முஸ்லிம் அமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
ரத யாத்திரை புகழ் பாஜக அத்வானிக்குப் பிறகு முதன் முதலாக தமிழகத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் எனும் முஸ்லிம் அமைப்பு, "பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரை" எனும் பெயரில் ரத யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. இதற்கிடையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் ரத யாத்திரைக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில், "காவல்துறை தடையினை  மீறி ரதயாத்திரை நடைபெறும்" என அந்த அமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, இன்று(18/11/2011) சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் இந்திய தௌஹீத் ஜமாத் நடத்திய ரத யாத்திரைக்கையான ரதம் அறிமுக நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களிடம் வெளியிட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர் பேசும்போது,
"பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க யாத்திரையைப் பொறுத்தவரை எங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் முகமாக சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.
இந்த யாத்திரையை எங்கள் தொப்புள் கொடி உறவுகளான முஸ்லிமல்லாத சகோதரர்கள்தான் துவக்கி வைக்கிறார்கள். அதனால் இது சமூக நல்லிணக்க பயணமாகவும் அமைந்திருக்கிறது.
மீனவர் சங்கத் தலைவர் கபடி மாறன், யாதவ மகா சபை தலைவர் தி.தேவநாதன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மனித உரிமை ஆர்வலரான அ. மார்க்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி, நாடு கடந்த தமிழீழ தோழமை மையத்தின் பேரா. சரஸ்வதி, அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ். மணி, பெண்கள் இணைப்புக் குழுவின் ஷீலு உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு ரத யாத்திரையைத் துவக்கி வைக்கின்றனர்.
ஏறக்குறைய இரண்டு மாத காலம் இந்த யாத்திரை குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் இந்த யாத்திரை பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் - இதுநாள் வரை அமைதி காத்துவந்த காவல்துறை இப்போது அனுமதி மறுத்திருக்கிறது.
இந்த அரசு அனைத்து சமூக அமைப்புகள், கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குக் கூட அவர்களின் போராட்டங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இந்த அரசின் பெயரில் வேறுபட்ட கருத்து இல்லை.
ஆனால் எங்கள் அமைப்பைப் பற்றி காவல்துறை அரசாங்கத்திற்குத் தவறான செய்தியைக் கொடுத்திருக்கிறதா என்று தெரியவில்லை. அரசின் பார்வை எங்களுக்க்ச் சாதகமாகவோ, பாதகமாகவோ எப்படி இருந்தாலும் எங்கள் உரிமையை விட்டுத் தர முடியாது.
காவல்துறை அனுமதி மறுத்த போதிலும் தடையை மீறி யாத்திரை துவங்கும் இன்ஷா அல்லாஹ். தடையை மீறுவது எங்களின் உரிமை. கைது செய்வது காவல்துறையின் கடமை.
எங்களால் பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது. யாருக்கும் துன்பம் தராமல் - அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இந்த நிகழ்வு இருக்கும். அந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் எங்களை காவல்துறை கைது செய்து இந்த யாத்திரை தொடர்ந்து நடைபெற விடாமல் தடுத்தாலும் எங்களது ஜனநாயக - அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் விதமாக இன்ஷா அல்லாஹ் நீதிமன்றத்தை நாடி எங்களது உரிமையை மீட்டெடுப்போம்.
இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் கடமை இருக்கிறது. இதை நீங்கள் செய்ய வேண்டும்."
என்று பேசினார்.         நன்றி. இந்நேரம் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக