புதுவை மாநில கல்வி அமைச்சராக இருப்பவர் கல்யாணசுந்தரம். இவர் 10-ம் வகுப்பு தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தோல்வி அடைந்து இருந்தார். கல்வி அமைச்சர் ஆனதும் இரு பாடங்களையும் எழுதி தேர்ச்சி பெற முடிவு செய்தார். இதற்காக தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தார். பரீட்சை எழுத திண்டிவனம் மையத்தை தேர்வு செய்து இருந்தார். 29-ந் தேதி அறிவியல் பாடத்தை எழுதினார். 30-ந் தேதி சமூக அறிவியல் பரீட்சைக்கு செல்லவில்லை.
அந்த தேர்வை அவர் எழுதாமல் வேறு ஆளை வைத்து எழுதியதாக தகவல் வெளியானது. ஆனால் இதை கல்யாணசுந்தரம் மறுத்தார். நான் தான் நேரடியாக சென்று தேர்வு எழுதினேன் என்று கூறினார். இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரி குப்புசாமி தலமையிலான அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது. அப்போது ஆள் மாறாட்டம் நடந்து இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. கல்யாண சுந்தரம் கையெழுத்தையும், பரீட்சை பேப்பரில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்த்தனர். அதில் இரு கையெழுத்தும் வேறு வேறு என்பது தெரிந்தது. இதனால் பரீட்சையில் ஆள்மாறாட்டம் நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பரீட்சை ஹாலில் சூப்பர் வைசராக சிங்கனூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர் ஆதவன் இருந்தார். அவருக்கும் ஆள்மாறாட்டத்துக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்யாணசுந்தரம், ஆதவனின் திண்டிவனம் வீட்டு முகவரியை தனது முகவரி என்று கொடுத்து இருந்தார். ஆள் மாறாட்டத்துக்கு உதவுவதற்காகவே ஆதவன் பரீட்சை ஹாலுக்கு சூப்பர்வைசராக வந்து இருந்தார். இதற்காக போலி ஆவணங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலக இளநிலை உதவியாளர் ரஜினிகாந்த் தயாரித்து கொடுத்தார்.
இதையடுத்து ஆசிரியர் ஆதவன், ரஜினிகாந்த் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். நேற்று மாலை மாவட்ட கல்வி அதிகாரி குப்புசாமி, அமைச்சர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 3 பேர் மீதும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் செய்தார். இந்த புகார் மனுவை போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட குற்றபிரிவு போலீசுக்கு அனுப்பி வைத்தார். 3 பேர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர்.
அதில் முதல் குற்றவாளியாக கல்யாணசுந்தரம் சேர்க்கப்பட்டார். இ.பி.கோ.491 (ஆள் மாராட்டம்), 420 (மோசடி), 465, 466,468 (குற்றத்துக்கு உடந்தை), 471 (தெரிந்தே குற்றம் செய்தல்), 473 (மோசடி ஆவணம் தயாரித்தல்), 120-பி (அரசு அலுவலரை ஏமாற்றுதல்) ஆகிய 8 பிரிவுகளில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆசிரியர் ஆதவன், ஊழியர் ரஜினிகாந்த் இருவரையும் இன்று காலை குற்றப்பிரிவு போலீசார் விழுப்புரம் அழைத்து வந்தனர். விசாரணை முடிந்ததும் அவர்கள் முறைப்படி கைது செய்யப்படுவார்கள். அடுத்ததாக அமைச்சர் கல்யாண சுந்தரத்தையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர் இன்னொரு மாநிலத்தில் மந்திரி என்பதால் கைது செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன.
இதுபற்றி விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். புதுவை அரசிடம் முறைப்படி விண்ணப்பித்து அதன்பிறகு அவரை கைது செய்யலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கைதாகாமல் இருக்க அமைச்சர் கல்யாணசுந்தரம் முன்ஜாமீன் பெறவும் முயற்சித்து வருகிறார். அவர் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே கல்யாண சுந்தரத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் அவரை ராஜினாமா செய்யுமாறு முதல்- அமைச்சர் ரங்கசாமி கேட்டு கொண்டதாக தகவல் பரவி உள்ளது. எனவே கல்யாண சுந்தரம் ராஜினமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு கல்யாணசுந்தரம் தொடர்பாக எழுத்துபூர்வமாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை என்று கூறினார். மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.கல்யாணசுந்தரம் தரப்பிலும் எந்த பதிலும் சொல்ல மறுத்துவிட்டனர். கல்யாணசுந்தரத்துக்கு உதவிய ஆசிரியரும், அரசு ஊழியரும் சிக்கி இருந்தாலும், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர் யார் என்று இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை. ஆசிரியர் ஆதவன்தான் இந்த மோசடியில் முக்கிய பங்கு வசித்தவர். அவரிடம் விசாரித்தால் தேர்வு எழுதியவர் யார் என்பது தெரிய வரும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக