AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 20 அக்டோபர், 2011

டி.என்.பி.எஸ்.சி.,யை சீரமைக்க வேண்டுமா? - மனிதநேய மக்கள் கட்சி தலைவரின் ஆலோசனை


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி.,) மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினரும், பொதுநல ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.அரசின் ஊழியர்கள் கடமையுணர்ச்சியோடு, நேர்மையாக பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கும் அதேவேளையில், அவர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அப்பழுக்கு இல்லாத அமைப்பாக இருக்க வேண்டும்.கஷ்டப்பட்டு படித்து, கடும் உழைப்பை செலுத்தி தேர்வாணையம் மூலம் அரசு வேலைக்கு தேர்வு எழுதும் இளைஞர்கள், தேர்வாணையத்தின் மீது நம்பகத் தன்மையோடு இருக்க வேண்டும். இதற்கு, தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தை அரசு வெளிப்படையாகச் செய்யவேண்டும் எனவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து, மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், ராமநாதபுரம் எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லா கூறியதாவது:தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் என்பது, மிக முக்கியமான ஒரு அமைப்பு. இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை, அரசியல் கட்சித் தலைவர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நியமிக்கவேண்டும். மத்திய விஜிலன்ஸ் கமிஷனர், தகவல் அறியும் உரிமை சட்ட கமிஷனர் ஆகியோரை நியமிக்கும்போது, கடைபிடிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். இந்த நியமனங்களின்போது, பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் கலந்துபேசி, நேர்மையானவர்ளை தேர்வு செய்கின்றனர்.
தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், தேர்வு முடிந்ததும் அதன் விடைத் தாளை வெளியிடுவதோடு, தேர்வு எழுதியவர்கள் விருப்பப்பட்டால், அவர்களின் விடைத் தாளை அளிக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்.இதுபோன்ற வெளிப்படையான நடைமுறைகள் மூலமே, நாட்டின் மிக முக்கிய அமைப்பான, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தை சீர்படுத்தி, மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த முடியும்இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.தேர்வாணைய அலுவலகம் மற்றும் அதன், தலைவர், உறுப்பினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையை சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் அமைப்பு வரவேற்றுள்ளது.
இதன் தலைவர் டாக்டர் ரவீந்தரநாத் கூறும்போது,"தேர்வாணையத்தின் மீது மக்கள் மத்தியில் நீண்ட நாள்களாக சந்தேகம் இருந்து வருகிறது. இப்போது நடந்த சோதனை மூலம், நல்ல செயல்கள் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். தேர்வாணையம், நேர்மையான, வெளிப்படையான செயல்பாட்டில் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பாக்கின்றனர்' என்றார்.முறைகேடுகள் நடந்துள்ளது என எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தான், தேர்வாணைய அலுவலகம் மற்றும் அதன் பொறுப்பாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தியுள்ளனர் எனக் கூறிய, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணன், "தொடர் நடவடிக்கை மூலம் தேர்வாணையத்தை சீரமைக்க வேண்டும்' எனக் கூறுகிறார்.
- சிறப்புச்செய்தி - நன்றி தினமலர் அக்டோபர் 16, 2011

0 கருத்துகள்:

கருத்துரையிடுக