AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 20 அக்டோபர், 2011

வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை வெற்றி பெறுபவர்கள் வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது. தேர்தலில் வெற்றி பெறும் மேயர், கவுன்சிலர்கள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
சென்னையில் 239 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு கோரி, திமுக சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதியும், திமுக மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியம், வக்கீல் பூங்குன்றன் ஆகியோர் தனித்தனியாக பொதுநல மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் முருகேசன், சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
திமுக சார்பில் வக்கீல் என்.ஜோதி ஆஜராகி, ‘‘சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் நடந்த உள்ளாட்சி தேர்தலை வீடியோ எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டும், அதை தேர்தல் கமிஷன் அமல்படுத்தவில்லை. இதனால் பல இடங்களில் அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். எனவே, 239 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும். கள்ள ஓட்டு பதிவான தகவல் எங்களுக்கு கிடைத்ததும், தேர்தல் கமிஷனுக்கு பேக்ஸ் மூலமும், நேரிலும் புகார் கொடுத் தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நீதிமன்ற  அவமதிப்பு செயலாகும்’’ என்றார்.
தேர்தல் கமிஷன் சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, ‘‘சென்னை மாநகராட்சி தேர்தலில் அனைத்து இடங்களி லும் வீடியோ எடுக்க முடியவில்லை. எந்தெந்த இடங்களில் வீடியோ எடுக்கவில்லை என்ற விவரத்தை மதியம் தெரிவிக்கிறேன்’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவை தேர்தல் கமிஷன் அமல்படுத்தாதது ஏன்? அனைத்து இடங்களிலும் ஏன் வீடியோ எடுக்கவில்லை? அனைத்து இடங்களிலும் வீடியோ எடுக்க முடியாவிட்டால், தேர்தலை தள்ளி வைத்திருக்க வேண்டாமா? திமுக கொடுத்த புகாருக்கு ஏன் பதில் அளிக்கவில்லை? வெளிமாநில பார்வையாளர்களை ஏன் பயன்படுத்தவில்லை? வீடியோ எடுக்காத தேர்தலை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க போகிறோம். எனவே, அனைத்து கோப்புகளையும் மதியம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் அமைதியாக நடந்ததா, இல்லையா என்பது பற்றி நாங்கள் கேள்வி கேட்க விரும்பவில்லை. உயர் நீதிமன்ற  உத்தரவை அமல்படுத்தி இருக்க வேண்டாமா என்று சரமாரி கேள்வி எழுப்பினர். 
பின்னர், மா.சுப்பிரமணியம் சார்பாக மூத்த வக்கீல் ஆர்.விடுதலை, வக்கீல் பூங்குன்றம் சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘வாக்கு எண்ணிக்கை நடத்த தடை விதிக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கையை வீடியோ எடுக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்’’ என்றனர். இதையடுத்து, வழக்கு விசாரணை மதியத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை குறித்து ஆவணங்களை தாக்கல் செய்தார், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கூடாது. தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டது. இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது, சில சி.டி.க்களை தாக்கல் செய்தார். இதைக்கேட்ட நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பு விவரம் :
சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது உயர் நீதிமன்ற உத்தரவின்படி வீடியோ எடுக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு முழுவதும் அமல்படுத்தவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் கூறியது பற்றி தீர விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே, வழக்கின் இறுதியில் தான் இதில் முடிவு எடுக்க முடியும். வாக்குச் சாவடி கைப்பற்றப்பட்டுள்ளது; தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறும் புகார் குறித்து பின்னர் தான் தீர விசாரிக்க முடியும். எனவே, தற்போதைக்கு இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க விரும்புகிறோம். 
மனுதாரர்கள் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் முறைகேடு குறித்து புகார் கொடுத்துள்ளனர். இதற்கு ஆதரவாக வேறு ஆதாரங்கள் தற்போது எங்களிடம் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, கீழ்கண்ட நிபந்தனைகளை தற்போது விதிக்கிறோம்.
1. சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையை நடத்த தடை விதிக்க முடியாது. வாக்கு எண்ணிக்கையை திட்டமிட்டபடி தேர்தல் கமிஷன் நடத்தலாம். தேர்தல் கமிஷன் 7 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து நடத்தலாம். 
2. வாக்கு எண்ணிக்கையை முடித்த பிறகு வெற்றி பெற்ற மேயர், வார்டு கவுன்சிலர் பெயர்களை அறிவிக்கலாம். ஆனால், இந்த தேர்தல் முடிவு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்.
3. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கலாம். அதில் உயர் நீதிமன்ற வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று குறிப்பிட வேண்டும்.
4. இந்த வழக்கு வெற்றி பெறுபவர்களுக்கு எதிராக தீர்ப்பு அமைந்தால், நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம். எனவே, எங்களுக்கு தனி உரிமையுள்ளது என்று வெற்றி பெறும் மேயர், கவுன்சிலர்கள் கோர முடியாது.
5. இந்த வழக்கில் 3 வாரத்தில் தேர்தல் கமிஷன் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 9ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
6. சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை வீடியோ எடுக்க வேண்டும். பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்ய வேண்டும். 
7. உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவின்போது எந்தெந்த வாக்குச் சாவடி வீடியோ எடுக்கப்பட்டது என்ற விவரங்களையும், வீடியோ சி.டி.க்களையும் சீல்டு கவரில் வைத்து, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் தேர்தல் கமிஷன் 21ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக