AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 4 அக்டோபர், 2011

பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் இந்திய நோட்டுக்கள் : தமிழகத்தில் புழக்கத்தில் விடுகிறது மர்ம கும்பல் !

நெல்லை: பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் தமிழகம் முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளது. இந்த கும்பலை கைது செய்ய நெல்லையில் இருந்து தனிப்படையினர் சென்னை விரைந்துள்ளனர்.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் எண்ணத்தில் பாகிஸ்தானிலிருந்து ^100, ^500, ^1000 கள்ள நோட்டுகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்குள் அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டு வருவதாக உளவு துறையினர் மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து கடந்த இரு வாரத்திற்கு முன் டெல்லியில் அனைத்து மாநில போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கள்ள நோட்டுகளை கடத்துபவர்கள் மற்றும் அதனை விநியோகத்தில் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் எளிதில் ஜாமீனில் வர முடியாத அளவுக்கு தண்டனை பிரிவுகளில் சில மாற்றங்களை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இதன் பேரில் தமிழக டிஜிபி ராமானுஜம் அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.  நெல்லை எஸ்பி விஜயேந்திரபிதரி உத்தரவின் பேரில், நெல்லை மாவட்ட சோதனை சாவடிகளில் போலீசார் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், கள்ள நோட்டுக்கள் கடத்தலையும் தடுக்கும் பொருட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று வாசுதேவநல்லூர் விலக்கில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், எஸ்ஐ பண்டாரம் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். 
அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனையிட்டனர். அவர்களிடமிருந்த ஒரு தோல் பையில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இதில் பெரும்பாலானவை ^500, ^1,000 கள்ள நோட்டுகளாகும். 
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த குருமூர்த்தி (53), விருதுநகர் மாவட்டம் சேத்தூர் சுந்தராஜபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (46) என்பதும், குருமூர்த்தி மீது கோவில்பட்டி, தூத்துக்குடி உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் கள்ள நோட்டு தொடர்பாக 26 வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். 
சென்னையை சேர்ந்த கள்ள நோட்டு கும்பல் தலைவன் ஜெகன் மூலம் தமிழகத்தில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதும், அவருக்கு பல ஊர்களில் ஏஜென்ட்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜெகனை கைது செய்ய தனிப்படையினர் சென்னை விரைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக