AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 4 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு வெளி மாநில போலீசார்; தென் மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தப்படுகிறது. அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.   மாநிலம் முழுவதும் பதட்டமான சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
 
மாநில அளவில் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக தனியாக போலீசில் தேர்தல் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக ஐ.ஜி. அலெக்சாண்டர் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் அதிகாரியாக கூடுதல் கமிஷனர் விமலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 2 நாட்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் திரிபாதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் கலந்து கொண்டனர். அடுத்த கட்டமாக உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தபட உள்ளது. 
 
உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை விடுமுறை எடுக்கக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் தலைமையில் சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி கள் ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்கிறது.
 
இதில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.   கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெளி மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 80 கம்பெனி வெளி மாநில போலீசார் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டது. ஆனால் 23 கம்பெனி போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணிக்கு அனுபபி வைக்கப்பட்டனர்.
 
இந்த முறையும் வெளி மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கான முறைப்படியான கடிதம் பக்கத்து மாநில போலீஸ் அதிகாரிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 
 
தமிழகம் முழுவதும் 85 ஆயிரத்து 647 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. 17-ந்தேதி நடை பெறும் முதல் கட்ட தேர்தலில் 47 ஆயிரத்து 627 ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடை பெறும். மீதி உள்ள 38 ஆயிரத்து 20 பூத்களில் 2-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். பதட்டமான சாவடிகள் எத்தனை என்பது பற்றிய கணக்கெடுப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
கடந்த தேர்தலில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற இடங்கள் தற்போதுள்ள சூழ்நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பதட்டமான சாவடிகள் எவை என்பது முடிவு செய்யப்படும். தென் மாவட்டங்களில் அதிக அளவிலான ஓட்டுச் சாவடி பதட்டமானவையாக இருக்கும் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்படுவார்கள்.
 
கடலூர், மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இங்கு அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கடந்த முறை கேட்டது போல இந்த முறையும் 80 கம்பெனிகள் (600 போலீசார்) வெளி மாநில போலீசார் பாதுகாப்பு பணிக்காக கேட்க உள்ளோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக