AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 4 அக்டோபர், 2011

தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீடுகளில் அதிரடி சோதனை: 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை


தி.மு.க. ஆட்சியின் போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம். கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள இவர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டத்தில் வசித்து வருகிறார். எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
 
இதையடுத்து அவரது வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்த போலீசார் தீர்மானித்தனர்.இதற்காக சென்னை மற்றும் திருச்சியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளை கொண்ட மூன்று படை அமைத்து ஒருங்கிணைக்கப்பட்டது. இவர்கள் சென்னை, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் நகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.போலீஸ் துணை சூப்பிரண்டு கன்னியப்பன் இந்த சோதனையை ஒருங்கிணைத்திருந்தார்.
 
இந்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். காட்டுமன்னார்கோவில் அருகே முட்டத்தில் உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வீட்டில் கூடுதல் டி.எஸ்.பி. சண்முகப்பிரியா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினார்கள். சிதம்பரம், காட்டுமன்னார் கோவிலில் டி.எஸ்.பி.க்கள் அம்பிகாபதி, ராமச்சந்திரன், சந்திரமவுலி, கன்னியப்பன், முருகேசன், தங்க ராஜ், நாச்சியப்பன், பால சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் சோதனை நடந்தது.
 
சென்னையில் டி.எஸ்.பி. அலிபாசா தலைமையில் போலீசார் சோதனை நடத்தினார்கள். மயிலாடு துறையில் டி.எஸ்.பி. மாணிக்கவாசகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். மொத்தம் 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அந்த இடங்கள் விவரம் வருமாறு:-
 
1. காட்டுமன்னார் கோவில் முட்டத்தில் உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வீடு. 2. காட்டுமன்னார் கோவில் முட்டத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் சித்தப்பா தெய்வசிகாமணி வீடு. 3. காட்டுமன்னார்கோவில் திருமுட்டத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் உறவினர் தங்கஆனந்தன் வீடு. (ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி தி.மு.க. செயலாளர்) 4. காட்டுமன்னார் கோவிலில் உள்ள பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான எம்.ஆர்.கே. என்ஜினீயரிங் கல்லூரி. 5. காட்டுமன்னார் கோவிலில் உள்ள பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான ஆசிரியர் பயிற்சி கல்லூரி.
 
6. காட்டுமன்னார் கோவில் அருகில் பாஞ்சா நல்லூரில் உள்ள பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான எம்.ஆர்.கே. கலை, அறிவியல் கல்லூரி. 7. சிதம்பரம் சாரதாம் பாள் நகரில் உள்ள பன்னீர் செல்வத்தின் சகோதரி மங்கையர்கரசி வீடு. 8. சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள பன்னீர் செல்வத்தின் சகோதரி மணி மேகலை வீடு. 9. மயிலாடுதுறையில் உள்ள எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் சகோதரி மஞ்சுளா வீடு.
 
10. வடலூரில் உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் உறவினர் சிவக் குமார் வீடு. 11. சென்னை பாலவாக்கம் செர்ரீ அவென்யூ 5-வது குறுக்குத் தெருவில் உள்ள எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் மகன் கதிரவன் வீடு. 10 இடங்களிலும் சொத்து ஆவணங்களை வாங்கி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். சில ஆவ ணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
 
இது தொடர்பான தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர்களில் இதுவரை கே.என்.நேரு, பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், தா.மோ.அன்பரசன், கே.பி. பி.சாமி, என்.கே.கே.பி. ராஜா, பொங்கலூர் பழனிச்சாமி ஆகிய 7 பேர் மீது போலீசார் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸ் நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கும் 8-வது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக