உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் கிராமப்புறங்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் வாக்காளர்களுக்கு பரிசு பொருள் கொடுப்பதாக ஆங்காங்கே புகார் எழுந்துள்ளது. ஓட்டுக்காக வீட்டு முன்பு அரிசி மூட்டையை வைத்துவிட்டு சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
ஓட்டுக்காக பரிசு பொருள் கொடுத்தால் அதை லஞ்சமாகத்தான் கருத முடியும். எனவே இதை கொடுப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க சொல்லி உள்ளோம். சில இடங்களில் வீடு முன்பு அரிசி மூட்டையை வைத்துவிட்டு சென்றதாகவும் பத்திரிகைகளில் பார்த்தேன். உடனே சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு இதன்மீது விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
பொதுவாக பரிசு பொருளை யார் கொடுக்கிறார்கள் என்று கையும் களவுமாக பிடித்தால்தான் அது நிரூபிக்கப்படும். இல்லையென்றால் தனது பெயரை கெடுக்கவேண்டும் என்பதற்காக யாரோ செய்த சதி என்று சொல்லி விடுகிறார்கள். எனவே எந்த புகாராக இருந்தாலும் அதை முழுமையாக விசாரித்து அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளேன்.
இவ்வாறு சோ.அய்யர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக