சில நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் லுஷான் தீவு பகுதியில் நெசாத் என்ற புயல் கடுமையாக தாக்கியது. இதனால் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மணிலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெள்ளம் ஏற்பட்டது.
சுமார் 50 பேர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. அந்த புயல் தாக்கிய “லுஷான்” தீவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் புயல் தாக்கியது.
அதுவும் ஏற்கனவே பாதித்த லுஷான் தீவிலேயே தாக்கியுள்ளது. தெற்கு சீனாவில் மையம் கொண்டிருந்த நல்கே என்ற புயல் மெதுவாக நகர்ந்து நேற்று லுஷான் தீவுக்குள் புகுந்தது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் மழை கொட்டியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த முறையை விட மணிலாவில் தற்போது அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஆகவே இப்பகுதியில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கி தவிக்கின்றனர். தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மீட்பு பணி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக